

நெருங்கிய உறவிலோ, நட்பிலோ விரிசல் விழாதா என்று சாமுவேலின் வினாவை மீண்டும் வினவி வகுப்பைத் தொடங்கினார் ஆசிரியர் எழில். விரிசல் விழும் என்றாள் நன்மொழி. அப்படியா என்று குழப்பமாய்ப் பார்த்தான் சுடர். ஆம். நேற்று என் தம்பியோடு சண்டை. இப்போது வரை அவனோடு நான் பேசவில்லை. அது உறவு விரிசல்தானே என்றாள் நன்மொழி. இது விரிசல் இல்லை; பிணக்கு என்றார் எழில். அப்படியானால் உறவு விரிசல் என்றால் என்ன என்று வினவினான் அழகன்.
அல்லியும் தாமரையும் நெடுங்காலமாக நெருங்கிய நண்பர்கள். பலநேரங்களில் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொண்டு இருவரும் வாழ்க்கையில் முன்னேறியவர்கள். அவர்கள் ஒருவர் மீது இன்னொருவர் வைத்திருந்த நம்பிக்கைதான் அவர்களது நட்புக்கு அடிப்படை. அதனால் தனது எல்லாச் செயல்களையும் அல்லி ஆதரிப்பாள் என்று தாமரை நினைத்தாள். எனவே,அவர்கள் இருவரும் சேர்ந்து மேற்கொண்ட வணிகத்தில் அல்லியைக் கேட்காமலேயே தாமரை பல முடிவுகளை எடுத்தாள். அம்முடிவுகளால் வெற்றி கிடைத்த பொழுது அவ்வெற்றிக்குத் தானே காரணம் என்றாள். தோல்விக்கு இருவரும் பொறுப்பு என்றாள். இதனால் அல்லியின் மனத்தில் தாமரையின் மீதிருந்த நம்பிக்கை (trust) படிப்படியாக குறையத் தொடங்கியது. தாமரையின்முடிவுகளை மென்மையாக அல்லி மறுத்துரைக்கத் தொடங்கினாள். வழக்கத்திற்கு மாறான அல்லியின் இந்த எதிர்வினை தாமரைக்கு எரிச்சலாக இருந்தது. அவள், அல்லி சொல்வதைக் கேட்பதில்லை. அதன் விளைவாக, அவர்கள் இருவரும் ஓராண்டாக நேரடியாகப் பேசிக்கொள்வதில்லை. இக்கதையில் அல்லிக்கும் தாமரைக்கும் இடையே ஏற்பட்டிருப்பது பிணக்கா, விரிசலா என்று வினவினார் எழில். “விரிசல்” என்றாள் மதி.
பிணக்கா, விரிசலா? - அப்படியானால் பிணக்கிற்கும் விரிசலிற்கும் இடையே என்ன வேறுபாடு என்று வினவினான் முகில். நன்மொழி தன் தம்பியோடு பேசினால் அவர்களுக்கு இடையே உள்ள பிணக்கு முடிந்துவிடும். ஏனென்றால் அது தற்காலிகமானது. ஆனால், அல்லிக்கும் தாமரைக்கும் இடையே உள்ள விரிசல் நெடுநாளாக நீடிப்பது. அது எப்பொழுதோ சிறிதாக உருவாகி மெல்ல வளர்ந்து இப்பொழுது வெளிப்படையாகத் தெரிகிறது. இருவரும் மனம்விட்டுப் பேசினால் அந்த உறவு விரிசல் மறையக்கூடும்; ஆனாலும் அதன் தடம் ஒரு வடுவாக அவர்கள் மனத்தில் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும் என்று விளக்கினார் எழில்.
ஒருவேளை அந்த உறவு விரிசல் பெரிதானால் என்ன நடக்கும் என்று வினவினான் தேவநேயன். உறவு முறியும் என்றாள் பாத்திமா. ஆம் என்று வழிமொழிந்தார் எழில். உறவு விரிசல் ஏற்படுவது ஏன் என்று வினவினான் கண்மணி. அடுத்தவர் மீது ஆதிக்கம் செலுத்தல் என்றாள் அருட்செல்வி. தன்னலமும் துரோகமும் என்றாள் இளவேனில். தன் மீது மற்றவர்கள் கொண்டுள்ள நம்பகத்தனமையை தவறாகப் பயன்படுத்தல் என்றான் சாமுவேல். தேவைப்படும்போது மட்டும் உறவாடுவது என்றான் தேவநேயன். அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த மணிமேகலை, என்ன செய்தால் விரிசல் விழாமல் உறவைப் பேணலாம் என்று வினவினாள். ஒருவர் தனதுஎல்லையை வரையறுத்து, திறந்த மனதோடு பிறருடன் பழக வேண்டும். அதற்கு உறவுகளுக்கிடையே தெளிவான தகவல் தொடர்பு இருக்க வேண்டும் என்று விளக்கினார் எழில். தகவல் தொடர்பா என்றாள் தங்கம். ஆம். அதனைப்பற்றி அடுத்த வகுப்பில் பேசலாம் என்று முடித்தார் எழில்.
(தொடரும்)
கட்டுரையாளர், வாழ்க்கைத் திறன்
கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்
தொடர்புக்கு: ariaravelan@gmail.com