ஈசியா நுழையலாம்! - 7: தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் பயில

ஈசியா நுழையலாம்! - 7: தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் பயில
Updated on
2 min read

இந்தியாவின் இருபதுக்கும் மேலான தேசிய சட்ட பல்கலைக்கழகங்களை உள்ளடக்கிய 80-க்கும் மேலான பிரபல சட்டக் கல்லூரிகளில் சேர்ந்து சட்டம் பயில, கிளாட் (CLAT- Common Law Admission Test) எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு உதவுகிறது. தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழான சட்ட கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்ட படிப்புக்கான நடைமுறைகள் அண்மையில் நிறைவுற்றன. பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் நுழைவுத் தேர்வு இன்றி, பொது கலந்தாய்வின் மூலம் இந்த சட்டக் கல்லூரிகளுக்கான சேர்க்கை நடந்து முடிந்தது. இவற்றுக்கு அப்பால் தேசிய அளவிலான சட்ட பல்கலைக்கழகங்களிலும் சேர்ந்து சட்டம் பயிலலாம். கலை அல்லது அறிவியல் இளநிலை பட்டத்துடன் ஒருங்கிணைந்த எல்எல்பி (ஹானர்ஸ்) என்ற 5 வருட ஒருங்கிணைந்த சட்டப் படிப்பை படிக்கலாம். இதற்கு கிளாட் நுழைவுத் தேர்வு உதவுகிறது.

வழக்கமான வழக்கறிஞர் பணிக்கு நிகராக பல்வேறு நிறுவனங்களுக்கும் அவசியமான சட்ட ஆலோசகர் பணிக்கு சட்டம் பயின்றவர்கள் அதிகளவில் தேவைப்படுகின்றனர். அரசு நிறுவனங்கள், சட்ட அமைப்புகள், பன்னாட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், காப்பீடு மற்றும் வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு நிதி நிறுவனங்கள் என சகல துறைகளிலும் சட்ட ஆலோசகர்கள் அவசியப்படுகிறார்கள். இவற்றுடன் சட்டம் பயிற்றுவிக்கும் ஆசிரியப் பணிக்கும், சட்டத்துறை தொடர்பான கட்டுரைகள் எழுதவும் பரந்த பணி வாய்ப்புகள் காத்திருக்கின்றன. சட்ட பட்டதாரிகள் இளம்வயதிலேயே உரிய தேர்வுகளை எழுதிநீதித்துறை நடுவர் பணிகளை அலங்கரிப்பதும் நாட்டில் அதிகரித்து வருகிறது.

விண்ணப்பிக்கத் தகுதி: பிளஸ் 2-ல் 45 சதவீத மதிப்பெண்களுடன் (பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு 40 சதவீதம்) தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வு எழுதவிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பில் உச்ச வரம்பு கிடையாது. எத்தனை முறை வேண்டுமானாலும் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து எழுதலாம்.

விண்ணப்ப நடைமுறைகள்: நடப்பாண்டு டிசம்பர் 18 அன்று நடைபெற உள்ள கிளாட் தேர்வுக்கான விண்ணப்பநடைமுறைகள் ஆகஸ்ட் 8 அன்று தொடங்கியது. தேசிய சட்ட பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு சார்பிலான இந்த நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்து பயனர் கணக்கை தொடங்கியதும் அதில் தேவையான விபரங்களை உள்ளிடுவது, ஆவண நகல்களை இணைப்பது ஆகியவற்றுடன் ஆன்லைன் மூலமாகவே தேர்வு கட்டணத்தையும் செலுத்தலாம். பட்டியல் மற்றும் பழங்குடியினத்தோருக்கு ரூ.3500, ஏனையோருக்கு ரூ.4000 என தேர்வு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு நடைமுறைகள்: கிளாட் நுழைவுத் தேர்வு ஆங்கிலத்தில் அமைந்திருக்கும். தமிழகத்தின் சென்னை, திருச்சி, சேலம், கன்னியாகுமரி உட்பட நாடெங்கும் உள்ள முக்கிய நகரங்களில் இந்த நுழைவுத் தேர்வு மையங்கள் செயல்படும். தேர்வுக்கான பாடத்திட்டத்தில் English language, Legal Reasoning, Quantitative Techniques, Current affairs including general knowledge, Logical Reasoning ஆகியவை அடங்கும். பள்ளி மாணவர்கள் என்சிஇஆர்டி பாடப் புத்தகங்கள் மற்றும் அன்றாட செய்தித்தாள் வாசிப்பை பழக்கமாக்கி கொள்வதும், தொடர்ந்து அவற்றை குறிப்பெடுத்து வருவதும் சிறப்பான தயாரிப்புக்கு உதவும். இணையதளத்தில் வெளியாகும் மாதிரி தாள்கள், முந்தைய தேர்வு தாள்கள் மற்றும் மாதிரி தேர்வுகள் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்வதும் உதவும். 120 நிமிடத்தில் 150 வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டும் என்பதால் துல்லியம் மற்றும் வேகத்திலும் பயிற்சி பெற வேண்டும். சரியான விடைக்கு ஒரு மதிப்பெண் அளிக்கப்படுவதுடன், தவறான விடைக்கு கால் (0.25) மதிப்பெண் குறைக்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க: consortiumofnlus.ac.in

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 13 நவம்பர் 2022

கட்டுரையாளர்

தொடர்புக்கு: leninsuman4k@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in