நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 12: கடைசிவரை முயன்று வெற்றி பெற்ற ஐஏஎஸ் அதிகாரி

நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 12: கடைசிவரை முயன்று வெற்றி பெற்ற ஐஏஎஸ் அதிகாரி
Updated on
2 min read

தான் விரும்பியதை வெல்ல கடைசிவரை முயன்று ரம்யா.ஆர், ஐஏஎஸ் பெற்றுள்ளார். உத்தரப்பிரதேசம் சஹரான்பூரில் உதவி ஆட்சியராக இருப்பவர் தனது எட்டாவது முயற்சியில் மத்திய குடிமைப்பணிக்கான யூபிஎஸ்சி தேர்வில் வென்றார். விருதுநகரை சேர்ந்த ராமராஜ், சென்னையில் காவல்துறை ஆய்வாளராகப் பணியாற்றி 2014-ல் ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மீனாட்சியும் வணிகவரித்துறையின் துணை அதிகாரியாக பணி செய்தவர். இவர்களுக்கு அருப்புக்கோட்டையில் பிறந்த 3 மகள்களில் மூத்தவர் ரம்யா. இவர் 2019 முதல் உத்தரப் பிரதேசத்தின் ஐஏஎஸ் அதிகாரியாகி உள்ளார். இவரது சகோதரிகளில் ஒருவர் ஐ.டி. நிறு வனத்திலும், கடைசி தங்கை யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் மேலாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.

குடும்பமா அல்லது கனவா? - சென்னை புதுப்பேட்டையில் உள்ள செயிண்ட் ஆண்டனி ஆங்கிலோ இந்தியன் உயர் நிலைப்பள்ளியில் எல்கேஜி முதல் 10-ம் வகுப்பு வரை பயின்றார் ரம்யா. முதல் குரூப்பில் பிளஸ் 2வை, சர்ச் பார்க் கான்வெட்டில் முடித்தார். பிறகு வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவில் பிடெக் பட்டம் பெற்றார்.ரம்யாவின் பெற்றோர் இருவருமே அரசு துறையில் பணியாற்றியதால் தங்களது மூத்த மகள் யூபிஎஸ்சி தேர்வெழுதி உயர் அதிகாரியாக வேண்டும் என கனவு கண்டனர். இந்த விருப்பத்தை ரம்யாவிற்கு சிறுவயது முதல் எடுத்துக்கூறி வந்துள்ளனர். இதே எண்ணத்தில் ரம்யாவும் வளர்ந்தால் பி.டெக்., முடித்து பணியில் சேர்ந்தாலும், யூபிஎஸ்சி தேர்விற்கு தயாராகத் தொடங்கினார்.

இது குறித்து அதிகாரி ரம்யா கூறுகையில், சிறுவயது முதல் மூன்று ரேங்குகள் பெற்று வந்த நான், கூடுதல் முயற்சி செய்து 10-ம் வகுப்பில் பள்ளியின் முதல் மாணவியாக உயர்ந்து நின்றேன். வகுப்பு பாடங்களை பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு வந்ததும் நினைவு கூரும் வழக்கம் எனக்கிருந்தது. பொது அறிவை வளர்க்க செய்தித்தாள்களையும், நூல்களையும் அவ்வப்போது வாசித்து வந்தேன். பள்ளிக் காலங்களில் கட்டுரைகள் எழுதுவதும், பாடங்களை புரிந்து படித்ததும் எனக்கு யூபிஎஸ்சியை வெல்ல பேருதவியாக இருந்தன எனத் தெரிவித்தார். தனது இரு இளைய சகோதரிகளுக்கும் ஏற்பட்ட கல்விச் செலவால் குடும்பச்சுமை வந்து விடக் கூடாது என எண்ணிய ரம்யா 2010-ல் பிடெக் முடித்து டிசிஎஸ் பெருநிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இதில் சுமார் 3 வருடங்கள் பணியாற்றிய போது கிடைத்த நண்பர்களால் அவருக்கு யூபிஎஸ்சி தேர்வில் மீண்டும் ஆர்வம் துளிர்த்தது. பணியில் இருந்தபடி 2012-ல் முதல்முறையாக யூபிஎஸ்சி தேர்வெழுதினார் ரம்யா. முதல்நிலைகூட இதில் வெல்ல முடியவில்லை என்றாலும் அவருக்கு ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது.

கடைசி வாய்ப்பு: வார இறுதி நாட்கள் பயிற்சிக்காக சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் இணைந்துள்ளார். தொடர்ந்து தீவிரம் காட்ட வேண்டியிருந்ததால் ஜுன் 2013-ல் ஐ.டி. பணியை ராஜினாமா செய்துவிட்டு படிக்க ஆரம்பித்தார். யூபிஎஸ்சியின் விருப்பப்பாடமாக பொது நிர்வாகம் எடுத்தமையால் அது குறித்த புரிதலுக்காக டெல்லிசென்று வாஜிராம் ரவியில் ஆறுமாதப் பயிற்சிபெற்றார். மொத்தம் எட்டு முறை முயன்றவர் நான்கு முறை நேர்முகத்தேர்வு வரை சென்றுள்ளார். மூன்றுமுறை ரம்யாவால் முதல்நிலை தேர்வை கூட வெல்ல முடியாமல் போனது. கடைசி ஒரு வாய்ப்பு உள்ள நிலையில் தனது எட்டாவது முயற்சியில் 2019-ல் ஐஏஎஸ் பெற்றுள்ளார் ரம்யா. இதை அதிகாரி ரம்யா நினைவுகூருகையில், “யூபிஎஸ்சி தேர்வை பணியில் இருந்தபடியும் எழுதி வெல்ல முடியும். இது எனக்கு தாமதமாகத் தெரிந்தபோது வேலையை ராஜினாமா செய்துவிட்டோமே என்று வருந்தினேன். பிறகு 2015 வரை இரண்டாண்டுகள் டெல்லியில் பகுதிநேர பணி செய்தபடி படிப்பை தொடர்ந்தேன். அந்த காலக்கட்டத்தில் இரண்டு முறை யூபிஎஸ்சியில் பாடங்களை மாற்றி மாற்றி தேர்வு செய்ததால் வெல்வதில் தடுமாற்றம் ஏற்பட்டது” எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் முதலிடம்: மூன்றுமுறை நேர்முகத்தேர்வு வரை சென்றும் வெல்ல முடியாமல், சற்று மனவருத்தத்திற்கு உள்ளான ரம்யா, மீண்டும் உத்வேகம் பெற்று 2019-ல் எட்டாவது முறையாக முயன்றார். இதில் அவர் ஐஏஎஸ், ஐஎப்எஸ் இரண்டு பதவிக்குரிய பிரிவுகளில் சேர்த்து வென்றார். அதிலும் தமிழக அளவில் மாநிலத்தின் முதல் மதிப்பெண் பெற்றிருந்தார் ரம்யா. ஐஏஎஸ் பணியில் தொடர முடிவு எடுத்தார். இறுதியில் தனது வெற்றிக்கு ரம்யா மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறையில், ஸ்வஸ்த் பாரத் பிரியரதன் எனும் திட்டத்தின் ஆய் வாளர் ஊக்கத்தொகைக்காக (பெலோஷிப்) விருதுநகரில் ஆற்றிய பணி உதவி உள்ளது.இதுகுறித்து அதிகாரி ரம்யா கூறும்போது, “இதுபோல், மத்திய, மாநில அரசுகளின் சார்பிலான திட்டங்களில் ஆய்வாளர்கள் பணியாற்றுவதும் யூபிஎஸ் சியை வெல்ல அதிகமாக உதவுகிறது. பூமி எனும் என்ஜிஓவில் பணியாற்றியதும் எனது வாழ்க்கையில் புரிதல் கிடைத்தது” என்று விளக்கினார். உத்தரப்பிரதேசத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான சண்டவுலியில் உதவி ஆட்சியரானவர், டெல்லியில் மத்திய அரசின் அமைச்சகங்களில் சிறப்பு செயலாளர் பயிற்சியையும் முடித்தார். தற்போது உபியின் மேற்குப் பகுதியிலுள்ள சஹரான்பூர் மாவட்டத்தின் உதவி ஆட்சியராக திகழ்ந்து நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in