

பொய் செய்தி எது, உண்மைச் செய்தி எது என்பதை இன்று கண்டுபிடிப்பதே ஒரு சவாலான காரியம். அதுவும் கைப்பேசிகள் இணையத்துடன் இணைக்கப்பட்ட பிறகு நடந்ததே வேறு. எப்போதோ எடுத்த ஏதேனும் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு, அதை இன்றைய செய்தியுடன் ஒப்பிட்டு வெளியிட்டு வருவது சமீப காலமாக வாடிக்கையாகி வருகிறது.
இப்படியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க பல்வேறு அமைப்புகள் இன்று களத்தில் இறங்கி உண்மை செய்திகளுக்காக வேலை செய்ய வேண்டியுள்ளது. குறிப்பாக பிபிசி போன்ற சர்வதேச ஊடகங்கள், இதற்காக “ரியாலிட்டி செக்” என்ற சிறப்பு நிகழ்ச்சியையே ஒலிபரப்பி வருகிறது.
செய்தியின் உண்மைத் தன்மையைச் சோதிப்பதற்காக உலகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இன்டர்ன்ஷிப் மூலம் மாணவர்களுக்கும் போலி செய்தியை கண்டறியும் பயிற்சி இத்தகைய அமைப்புகளால் வழங்கப்படுகிறது.குறிப்பாக, க்ரெடிபிளிட்டி கொயாலிஷன் (Credibility Coalition) என்ற அமைப்பு பல்வேறு செயல்பாடுகள் மூலம் பல்வேறு பின்னணியில் உள்ள மக்களையும், நிறுவனங்களையும் ஒன்றிணைக்கிறது. இதில் இதழியல் மாணவர்கள் பலர் பகுதி நேரமாகச் செயல்படுகிறார்கள்.
வேலைக்கு உத்தரவாதம்: இந்தியாவில் பொய் செய்திகளைக் கண்டுபிடிப்பதற்கென ஒருசில இணைய தளங்கள் செயல்படுகிறது. தமிழிலும் இதற்கான பிரத்தியேகமான தளங்கள் உள்ளன. இவர்கள் அனைவரும் பத்திரிகையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஈடுபாடுள்ள நிபுணர்களோடு ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள். இது போன்ற அமைப்புகளில் மாணவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. டாடாலீட்ஸ் (DataLEADS) பல்வேறு வகைகளில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது மாணவர்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்வதற்கும் அதில் ஈடுபடுவதற்கும் உதவுகிறது. எது உண்மைச் செய்தி என அறிந்துகொள்வதற்குச் சிறப்பு பயிற்சியினை கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.
இன்று இதழியல் கல்வியைப் பயிலும் மாணவர்களுக்குப் பயிற்சி, தரவு பகுப்பாய்வு, உண்மைச் சரிபார்ப்பு, ஊடக ஆராய்ச்சி மற்றும் ஊடக மேம்பாட்டு முன்முயற்சிகள் ஆகியவற்றிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. எனவே அதற்குத் தகுந்தாற்போல் மாணவர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். தகவல், அறிவு, படைப்பாற்றல் மற்றும் புரிதல் ஆகியவை இதழியல் மாணவர்களின் வாழ்க்கையை வளப்படுத்துகிறது. மாணவர்கள் தொடர்ந்து சரியான ஊடகங்களை அவதானித்து வருவதன் ஊடாக, எது பொய் செய்தி, எது உண்மைச் செய்தி என அறிந்து கொள்ள முடியும். இதற்காக “கூகுள் நியூஸ் இனிஷியேட்டிவ்” (Google News Initiative) எனும் சிறப்புத் தளத்தை ஏற்படுத்தி இதழியல் படிக்கும் மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சியை வழங்கி வருகிறது.
கூகுள் செய்தி: யார் வேண்டுமானாலும் எங்கிருந்தும் தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெறுவதற்கு கூகுள் நியூஸ் இனிஷியேட்டிவ் வழிவகுக்கிறது. கூகுளின் நோக்கம், உலகத் தகவல்களை ஒழுங்கிணைத்து, அதை உலகளவில் அனைவரும் அணுகக் கூடியதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதாகும். பிற செய்தி நிறுவனங்களுடன் கூகுள் இணைந்து கடந்த 20 ஆண்டுகளில், டிஜிட்டல் யுகத்தில் தரமான பத்திரிகை உருவாக்கத்தை ஆதரிக்க மட்டும் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழித்துள்ளது. கூகுள் நியூஸ் இனிஷியேட்டிவ் பற்றி விரிவாக அறிந்து கொள்ள newsinitiative.withgoogle.com எனும் இணைய முகவரியைக் காணலாம்.
(உலா வருவோம்)
கட்டுரையாளர்: உதவி பேராசிரியர்,
இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்
தொடர்புக்கு: bbcsakthi@gmail.com