

தலையில் சீப்பை வைத்தாலே தன் மகளுக்கு கொத்து கொத்தாக முடி கொட்டுவதாக பத்தாம் வகுப்பு காவியாவின் தாய் கவலை தெரிவித்து கடிதம் ஒன்றை சில வாரங்களுக்கு முன்பு எழுதியிருந்தார். முடி உதிராமல் இருக்க ஏதேனும் வழி உண்டா என்றும் அவர் கேட்டிருந்தார். அவருடைய கேள்விக்கு கடந்த கட்டுரையில் விடை கொடுக்கத் தொடங்கியிருந்தோம். முதலாவதாக நாளொன்றுக்கு 50 முதல் 100 முடிகள் வரை உதிர்வது இயல்புதான் என்பதை விளக்கினோம். பிறகு அதீதமாக முடி உதிர்தலுக்கு நாம் தான் பொறுப்பு என்பதாகச் சொல்லி முடித்தோம். ஏன் அப்படி சொன்னேன் என்பதை இப்போது பார்க்கலாம்.
இயல்பாகவே தலையில் ஏற்படும் நோய்களான பூஞ்சைத் தொற்று (Tinea capitis), பாக்டீரியாத் தொற்று (Folliculitis), பொடுகு (Dandruff), அலர்ஜிக் டெர்மடைடிஸ், சொரியாசிஸ், லைக்கன் ப்ளானஸ் போன்ற நோய்கள் ஒருபக்கம் முடி உதிர்தலை ஏற்படுத்துகிறது. இன்னொரு பக்கம் பதின்பருவத்தில் ஏற்படும் இயல்பான ஹார்மோன் மாற்றங்கள், பெண்களின் பிசிஓடி நீர்க்கட்டிகள் மற்றும் தைராய்டு பிரச்சினைகள் அதிக முடி உதிர்வுக்குக் காரணங்களாக இருக்கின்றன. இத்துடன் மாறிவரும் உணவு பழக்கம், மரபணுக்கள், மருந்துகள், மன அழுத்தம் ஆகிய காரணங்களும் ஒன்றுசேரும்போது சாதாரண எண்ணிக்கையை எல்லாம் தாண்டி கொத்து கொத்தாக முடி உதிர்தல் ஆரம்பிக்கிறது. இத்துடன், நமது அன்றாட அவசர வாழ்க்கைமுறை தரும் அழுத்தங்கள், நாம்பயன்படுத்தும் எண்ணெயில் இருக்கும் கலப்படங்கள், ரசாயனம் கலந்த ஷாம்பூக்கள் மற்றும் ஈரத்துடன் இறுக்கக் கட்டிய முடி, ஈரம் காய பயன்படுத்தும் ஹேர் டிரையர், ஹேர் கலரிங் தொடர்ந்து செய்தல் போன்றவை எல்லாம் சேர்ந்து முடி உதிர்தலைக் கூட்டவும் காரணமாகிவிடுகின்றன. இதுதவிர 'அலோபீசியா ஏரியேட்டா' எனும் தன்னுடல் தாக்குநோயும் பெண்களுக்கு இளம்வயதிலேயே முடி உதிர்தலை வேகப்படுத்துகிறது என்கின்றனர்.
பிறகு முடி உதிர்வதைத் தவிர்க்க என்னதான் செய்வது என்று கேட்கிறீர்களா? நமக்கு முடி உதிர்வதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதைக் குணப்படுத்தினாலே போதும். அதாவது, மேற்குறிப்பிட்ட நோய்களிருந்தால் அதற்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வது, ஹார்மோன் குறைகளை நிவர்த்தி செய்வது, மன அழுத்தத்தைப் போக்குவது ஆகியன உதிர்தலைக் குறைக்க உதவும். அது மட்டுமின்றி புரதம், வைட்டமின்கள் ஏ, சி, டி, ஈ, இரும்புச்சத்து, கால்சியம், செம்பு உள்ளிட்ட சத்துகள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிரம்பிய ஆரோக்கியமான சமச்சீர் உணவுகளை எடுத்துக்கொள்வது இதில் பெரிதும் உதவுகிறது. தேங்காய் எண்ணெய் முடி வறண்டு போவதை தடுப்பது போலவே, ரசாயனங்கள் குறைந்த ஷாம்பூ மற்றும் கண்டீஷ்னர் தயாரிப்புகளும் உதிர்தலைத் தடுக்கின்றன. எல்லாவற்றையும்விட இயன்றவரை இயற்கையுடன் இயைந்து வாழும்போது பிரச்சினைகளைத் தீர்ப்பதும் எளிதாகிறது. இவையனைத்தும் உதவாதபோது, தேவைப்படுபவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் முடி வளர்ச்சிக்கான மருந்துகள், ஸ்டீராய்டு மருந்துகள், யூவி சிகிச்சை, லேசர் தூண்டல் சிகிச்சை போன்றவற்றை மேற்கொள்ளலாம். ஆனால், ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள் காவ்யா அம்மா, புற அழகை நிர்ணயிப்பதில் முடி பெரும்பங்கு வகிக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. என்றாலும், முடி இல்லையென்றால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எதையுமே இழப்பதில்லை என்ற உண்மையை முதலில் நீங்கள் உணர்ந்து அதைக் குழந்தைகளுக்கும் புரிய வையுங்கள். ஏனென்றால், தலைமுடி குறைந்தாலும் குழந்தைகளின் தன்னம்பிக்கை குறையாமல் இருப்பது தான் முக்கியம்.
(ஆலோசனைகள் தொடரும்)
கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்.
தொடர்புக்கு: savidhasasi@gmail.com