

ஞானி வயல் வழியே செல்லும் போது, பாட்டி ஒருவர் கொளுத்தும் வெயிலில் மகிழ்ச்சியோடு வேலை செய்து கொண்டிருந்தார். அதனை பார்த்த ஞானி, இவ்வளவு மகிழ்ச்சியாக வேலை செய்றீங்க, உங்களுக்கு ஒருநாள் கூலி எவ்வளவு கிடைக்கும் என கேட்டார். 80 ரூபாய் என்றார் பாட்டி. இவ்வளவு குறைந்த கூலியா, இதை வைத்துக்கொண்டு, எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என ஞானி வினவினார்.
80 ரூபாயை நான்காக பிரித்து முதல் 20 ரூபாய் குடும்ப செலவுக்கு, அடுத்த 20 ரூபாய் கடனுக்கு, 3வது 20 ரூபாய் தர்மத்துக்கு, 4வது 20 ரூபாய் முதலீட்டுக்கு என்றார் பாட்டி. வியப்பின் உச்சிக்கே போன ஞானி, 80 ரூபாயில் எப்படி இவ்வளவும் செய்கிறீர்கள் என கேட்டார். எனக்கும் கணவருக்கும் நாளொன்றுக்கு 20 ரூபாய் செலவாகிறது. அது என் குடும்பச் செலவு. இளமையில் என்னை காப்பாற்றிய தாய், தந்தைக்கு 20 ரூபாய் செலவாகிறது. அது என் பழைய கடன். ஆதரவற்றோர் இல்லத்துக்கு 20 ரூபாய் தருகிறேன். அது தர்மம். என்னுடைய மகள் வழி பேத்தியின் கல்விக்கு 20 ரூபாய் செலவிடுகிறேன். அது முதலீடு. பிற்காலத்தில் என்னை அவர்கள் காப்பாற்றுவார்கள் என்றார் பாட்டி.
இது வெறும் கதையல்ல. சிக்கனத்தின் மகத்துவத்தை உணர்த்தும் வாழ்க்கைப் பாடம்!
ஆடம்பரம் பலமல்ல பலவீனம்! - சிக்கனம் என்பது பிடித்த உணவை சாப்பிடாமல், நல்ல உடையை உடுத்தாமல் இருப்பது அல்ல. நமது தேவைகளுக்கு கூட பயன்படுத்தாமல், பணத்தை பிடிவாதமாக சேமிப்பது கஞ்சத்தனம். அத்தியாவசிய தேவைகளுக்கு நியாயமாக செலவழித்து, மீதியை சேமிப்பதே சிக்கனம் ஆகும். தேவைக்கு அதிகமாக செலவு செய்வது ஆடம்பரம். ஒரு சிலர் வீட்டு நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் போன்றவற்றுக்கு ஆடம்பர செலவுகளை செய்து தங்களது பணபலத்தை காட்டுவார்கள். உண்மையில் அது பணபலம் அல்ல. பலவீனம் என்பதை அவர்களே ஒருநாள் புரிந்துகொள்வார்கள்.
எறும்பு, தேனீக்களைப் போல எதிர்காலத்திற்காக, சிறுக சிறுக பணத்தை சேமிக்க வேண்டும். உண்டியலில் தொடங்கி வங்கி சேமிப்பு கணக்கு, அஞ்சலக சேமிப்பு திட்டங்கள், தங்கம், பங்கு சந்தை என படிப்படியாக சேமிக்கலாம். அநாவசிய செலவினங்களை தவிர்த்து, அத்தியாவசிய செலவுகளை மட்டுமே அனுமதித்தால் பணம் கைகளில் தங்கும். அதனை நாள்தோறும் சிறுக சிறுக சேர்த்தால், சிறு சிறு மழைத்துளிகள் சேர்ந்து பெருவெள்ளமாவதைப் போல. ஒருநாளில் பெரும் தொகையாக மாறும். இளமையில் சிக்கனமாக சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயும் முதுமையில் 100 ரூபாயாக மாறும்.
வீட்டில் இருந்தே தொடங்கலாம்: தினமும் பள்ளிக்கு, அலுவலகத்துக்கு செல்லும்போது மதிய உணவை கையோடு எடுத்து செல்லலாம். அவ்வாறு செய்தால் நாள்தோறும் ஓட்டலுக்கு செலவிடும் பணத்தை மிச்சப்படுத்தலாம். இதனை மாதம் முழுவதும் சேமித்து வங்கி கணக்கில் செலுத்தலாம். இதனால் பணம் சேருவதுடன், உடல் நலனையும் பாதுகாத்துக் கொள்ளலாம். இன்றைய காலக்கட்டத்தில் குடும்பத்துடன் திரையரங்கில் போய் படம் பார்ப்பதற்கு சில ஆயிரங்களை செலவழிக்க வேண்டும். இதற்கு பதிலாக வீட்டிலே ஓடிடி, டிவிடி மூலம் குடும்பத்துடன் படம் பார்க்கலாம். பணத்தை சிக்கனமாக இருந்து சேமிப்பதைப் போல மின்சாரம், நீர், எரிபொருள், எரிவாயு போன்றவற்றையும் சிக்கனமாக கையாள கற்க வேண்டும். வீட்டில் ஆளில்லாத அறைகளில் ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறி, விளக்குகள், தொலைக்காட்சிப் பெட்டி, கணினி போன்றவற்றை அணைத்துவிடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் மாதத்திற்கு கணிசமான தொகையை சேமிக்கலாம்.
காஸ் அடுப்பை பற்ற வைப்பதற்கு முன்பு சமைக்க தேவையான அனைத்தையும் பக்கத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய் கொதித்த உடன் கடுகு டப்பாவை தேடினால் காஸ் சீக்கிரம் காலியாகிவிடும். காஸ் அடுப்பை நன்கு பராமரித்துக் குறைந்த ஜுவாலையில் சமைத்தால் உணவின் தன்மையும் மாறாது. காஸூ(சு)ம் வீணாகாது. வாகனத்தை ஓட்டும் போது சிக்னலில் காத்திருக்க வேண்டி இருந்தால் இன்ஜினை அணைத்து விடுங்கள். வாகனத்தின் கிளட்ச், பிரேக் போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்தினால் எரிபொருள் வேகமாக காலியாகிவிடும். வெயிலில் வாகனத்தை நிறுத்தினாலும் எரிபொருள் வேகமாக ஆவியாகிவிடும். எரிபொருளை மிச்சப்படுத்துவதன் மூலம் கணிசமான செலவை கட்டுப்படுத்தலாம். சிக்கனத்தின் உன்னதத்தை உணர்த்த உலகம் முழுவதும் அக்டோபர் 31ம் தேதி (இந்தியாவில் அக்.30ம் தேதி) உலக சிக்கன தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றில் இருந்தாவது சிக்கனமாக இருந்து சேமிக்கத் தொடங்குங்கள்!(தொடரும்)
கட்டுரையாளர்,
தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in