

எல்லைப்பகுதியில், ராணுவ வீரர்களுக்கு தலைமை தாங்கி தேசத்தின் பாதுகாப்புக்கு இரவு பகலாக உத்தரவாதம் அளிக்கும் ராணுவ அதிகாரிகளைப் பற்றிய வீரதீர செய்திகளை ஊடகங்களில் பார்த்து, படித்து மெய்சிலிர்த்திருக்கக் கூடும். ராணுவ அதிகாரி ஆவது எப்படி? பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் மட்டுமின்றி பிளஸ் 2 படித்தவர்களும் இந்திய ராணுவத்தில் அதிகாரி ஆகலாம். அதற்கு இரண்டு வழிகள் உள்ளன.
1. என்.டி.ஏ. நுழைவுத் தேர்வு: ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி), தேசிய பாதுகாப்புப் பயிற்சிப்பள்ளியில் (National Defence Academy-NDA) சேருவதற்கான என்.டி.ஏ. நுழைவுத்தேர்வை நடத்துகிறது. இந்தத் தேர்வு, ராணுவம் மட்டுமின்றி கடற்படை, விமானப்படையில் அதிகாரியாக சேருவதற்கான பொதுவான நுழைவுத்தேர்வு.
பிளஸ் 2 படிப்பில் எந்தப் பாடப்பிரிவைப் படித்தவர்களும் இந்திய ராணுவத்தில் சேரதகுதியானவர்கள். இயற்பியலும் கணிதத்தையும் பிளஸ் 2 வகுப்பில் படித்திருப்பது கடற்படை, விமானப்படையில் அதிகாரியாக சேருவதற்கான அடிப்படைத் தகுதி ஆகும். 16.5 முதல் 19.5 வரையிலான வயது வரம்புக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு முறையும் பயிற்சியும்: யூபிஎஸ்சி நடத்தும் எழுத்து தேர்வில் வெற்றி பெறுபவர்கள், பாதுகாப்பு அமைச்சகம் நடத்தும் எஸ்எஸ்பி (Services Selection Board-SSB) நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற வேண்டும். பூனேவில் உள்ள என்.டி.ஏ நிறுவனத்தில் மூன்றாண்டுகள் பயிற்சியும், டேராடூனிலுள்ள இந்திய ராணுவப் பயிற்சிப்பள்ளியில் (Indian Military Academy–IMA) ஓராண்டு பயிற்சியும் வழங்கப்படும். என்டிஏ பயிற்சிக்குப் பின் புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் B.Sc / BA பட்டம் வழங்கப்படும் என்பது கூடுதல் செய்தி.
2. டி.ஈ.எஸ் நுழைவு: பிளஸ் 2 முடித்தவர்கள் ராணுவத்தில் அதிகாரியாக இன்னொரு வழி, தொழில்நுட்ப நுழைவுத் திட்டம் (Technical Entry Scheme –TES). இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தை பிளஸ் 2-வில் படித்திருப்பது கட்டாயம். பிளஸ் 2 படிப்பில் 60% மதிப்பெண்களோடு, ஜேஈஈ–முதன்மைத் தேர்வில் (JEE-Mains) பங்கேற்றிருப்பதும் அவசியம்.
தேர்வு முறையும் பயிற்சியும்: தனியாக எழுத்துத் தேர்வு இல்லை. எஸ்.எஸ்.பி நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.கயாவிலுள்ள அதிகாரி பயிற்சிப்பள்ளியில் (Officer Training Academy –OTA, Gaya) ஓராண்டு பயிற்சி வழங்கப்படும். தொடர்ந்து, இரண்டு கட்டங்களாக நான்கு ஆண்டுகள் ராணுவத்தின் பொறியியல் கல்லூரிகளில் பயிற்சி வழங்கப்படும். பூனே, செகந்திராபாத், மோ (Mhow) ஆகிய இடங்களில் இந்திய ராணுவத்தின் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. பயிற்சிக்குப் பின் பொறியியல் பட்டம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு joinindianarmy.nic.in என்ற வலைத்தளத்தைப் பார்வையிடவும். என்டிஏ தேர்வுக்கு மாணவர்களும், மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். டிஈஎஸ் தேர்வு மாணவர்களுக்கானது. ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் இந்த இரண்டு தேர்வுகளிலும், 600அதிகாரிகள்வரை ஒவ்வொரு ஆண்டும்தேர்வு செய்யப்படுகிறார்கள். ராணுவத்தில் சேவையாற்றும் வாய்ப்போடு, பல்கலைக்கழகப் பட்டமும் வழங்கப்படுவது கூடுதல் சிறப்பு.
(தொடரும்)
கட்டுரையாளர், ‘போர்முனை முதல் தெருமுனை வரை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: dillibabudrdo@gmail.com