மகத்தான மருத்துவர்கள் - 13: புத்திக்கூர்மையால் ஏழ்மையை வென்ற டாக்டர் சாம்புநாத் டே

மகத்தான மருத்துவர்கள் - 13: புத்திக்கூர்மையால் ஏழ்மையை வென்ற டாக்டர் சாம்புநாத் டே
Updated on
2 min read

உலகெங்கும் உள்ள புராணங்களில் பல்வேறு ராட்சதர்கள் மனிதர்களை அழித்ததாகக் கதைகள் இருக்கின்றன. ஆனால், உலகெங்கும் உள்ள மனிதர்களை மதம், மொழி, இனம் எதுவும் பாராமல் அழிக்கும் உண்மையான ராட்சதர்கள் யாரென்றால், நோய்த்தொற்றுகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும் பாக்டீரியாக்களும் வைரஸ்களும்தான்.

இவை மனிதனுக்கு மிகப்பழமையான அதிபயங்கரமான எதிரி மட்டுமல்ல இன்றுவரை புதிது புதிதாக அவதாரங்களை எடுத்து, மனிதர்களைத் தொடர்ந்து கொன்றுகொண்டே இருப்பவையும்கூட. அவற்றை எதிர்த்து மனித குலம் காலங்காலமாகப் போராடுவதையும் சமீபத்திய கரோனா வைரஸ் வரை நாம் பார்த்துவிட்டோம்.

கரோனாவைப் போலவே சென்ற நூற்றாண்டில் உலக மனிதர்களை கொன்று குவித்த ஒரு நோயான காலரா நோயையும் அதன் காரணியான 'விப்ரியோ காலரே' பாக்டீரியாவையும் எதிர்த்துப் போராடி, அதனை வெல்ல வழிகாட்டிய இந்திய மருத்துவர் ஒருவரைப் பற்றி தான் இன்று தெரிந்துகொள்ள இருக்கிறோம்.

கூட்டுக்குடும்பத்தால் கிடைத்த கல்வி: எஸ்.என்.டே என்று அழைக்கப்பட்ட அவருடைய முழுப்பெயர் டாக்டர் சாம்புநாத் டே.கொல்கத்தாவில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது கரிபட்டி எனும் ஊர். இங்கு தசரதி டே மற்றும் சட்டீஸ்வரி தம்பதியினரின் மூத்த மகனாக, 1915-ம் ஆண்டில் பிறந்தார் சாம்புநாத் டே. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்ததால் சாம்புநாத்துக்கு படிக்கும் சூழல் வாய்த்தது. தாய்மாமன் உதவியுடன் பள்ளிக்குச் சென்ற சாம்புநாத் ஏழ்மையிலும் நன்றாகக் கற்றார். இயல்பிலேயே புத்திசாலியாக இருந்த அவர், மெட்ரிக் கல்வி முடித்து இளநிலை அறிவியலில் தேர்ச்சி பெற்று, மருத்துவ நுழைவுத்தேர்விலும் நல்ல மதிப்பெண்களைப் பெற்று கொல்கத்தா மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்தார்.

ஆனால், மருத்துவக் கல்லூரியில் விடுதியில் தங்கிப் பயில வேண்டி இருந்தது. அப்போது பணமின்றி துவண்ட சாம்புநாத்துக்கு, கே.சி. சேத் என்பவர் உதவ முன்வரவே மருத்துவம் பயிலச்சென்றார். படிக்கும்போதே தனது திறமையால் அனைத்து பாடங்களிலும் முதன்மையாகத் தேர்ச்சி பெற்று கல்லூரியின் உதவித்தொகையையும் பெற்றார். அதன் மூலம் தனக்கு உதவியவரின் பாரத்தைக் குறைத்த சாம்புநாத், 1939-ம் ஆண்டு மருத்துவப் பட்டத்தோடு தங்கப்பதக்கமும் பெற்று வீடு திரும்பினார்.

படிப்பிலும் வாழ்க்கையிலும் தேர்ச்சி: பயிலும்போதே தனது மாணவரின் திறமைகளைக் கூர்ந்து கவனித்த அக்கல்லூரியின் நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியரான டாக்டர் எம்.என்.டே, அவரைப் பெரிதும்மெச்சி, தனது மூத்த மகளை சாம்புநாத்துக்கு மணமுடித்து வைத்தார். மேலும் சாம்புநாத் தொற்றுநோயியலில் மேற்படிப்பு பயிலவும் வழிகாட்டினார். அப்படி 1942-ம்ஆண்டு வெப்பமண்டல மருத்துவ மேற்படிப்பில் தேர்ச்சி பெற்ற டாக்டர் சாம்புநாத்டே, அருகில் உள்ள கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணிபுரியத் தொடங்கினார். மிகுதி நேரத்தில் கிளினிக் ஒன்றிலும் பணியாற்றினார். இதன் மூலம் வயதான தனது பெற்றோரையும் தனது தம்பி தங்கைகளின் கல்வித் தேவைகளையும் பார்த்துக் கொண்டார்.

ஓய்வு சமயத்தில் தனது வாழ்நாள் கனவான நுண்ணுயிர்கள் ஆராய்ச்சியில் கவனம் செலுத்தத் தொடங்கினார் டாக்டர் சாம்புநாத் டே. அவருடைய ஆர்வத்தைப் புரிந்துகொண்ட அவரது மாமனார் எம்.என்.டே, சாம்புநாத்தின் குடும்பப் பொறுப்பை தான் ஏற்றுக்கொண்டு, தனது மருமகனை 1947-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு முனைவர் ஆராய்ச்சிக்காக அனுப்பிவைத்தார்.

இங்கிலாந்தின் மூத்த நுண்ணுயிரியல் பேராசிரியரான சர் ராய் கேமரூனின் வழிகாட்டலுடன் தனது ஆராய்ச்சிகளை அங்கு மேற்கொண்டார் சாம்புநாத். ஆனால், இங்கிலாந்தின் புதிய சூழலும், தனது ஆய்வுகளில் ஆரம்பத் தோல்விகளும் ஒன்றுசேர, இந்தியாவிற்கே திரும்பிவிட நினைத்தார். அப்போது பேராசிரியர் ராய் கேமரூனின் பெரும் ஊக்கம்தான் தன்னை இங்கிலாந்தில் ஆய்வுகளைத் தொடரச் செய்ததும், பின்னாளில் தனது வெற்றியெல்லாம் அவர் அளித்த கொடைதான் என்றும் நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார் சாம்பு நாத் டே. முனைவர் பட்டத்துடன் நாடு திரும்பிய டாக்டர் சாம்புநாத் டேயை இந்தியாவில் பரவிவந்த காலரா தான் வரவேற்றது.

(சாம்புநாத்தின் வாழ்க்கைப் போராட்டம் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்.

தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in