

அரசு பள்ளிகளில் சிறுவர் திரைப்படங்களை மாதந்தோறும் திரையிடும் திட்டத்தை ஒட்டி ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ திரையிட்டு அதன் மீது உரையாடலும் நடந்துள்ளது. ஒரு பக்கம் உற்சாக வரவேற்பு கொடுத்தாலும் மறுபுறம் சினிமாவை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்வதா என்ற கேள்வியையும் சிலர் முன்வைத்துள்ளார்கள். அது புரிதல் இல்லாத கேள்விதான்.
சினிமா என்றாலே அது மோசமான கலை என்ற பிம்பத்தை கட்டமைக்க முயல்கிறார்கள். அல்லது அவர்கள் அப்படி ஆழமாக நம்புகிறார்கள். சினிமா ஒரு முக்கிய கலை வடிவம். எல்லா மக்களையும் சென்றடையும் ஒரு வலிமையான கருவி. அதனை எப்படிப் பார்ப்பது, எப்படி அதன் மீது உரையாடல் நிகழ்த்துவது என்பதில் எல்லாமே அடங்கி இருக்கிறது.
கூட்டு முயற்சி: திரையில் நாம் பார்க்கும் ஒவ்வொரு காட்சிக்குப் பின்னால் ஏராளமான உழைப்பு உள்ளது. ஏராளம் என்றால் நீங்கள் நினைத்துப் பார்க்காத அளவிற்கு ஏராளம். அடுத்த முறை சினிமா பார்க்கும்போது ஒன்றினை கவனியுங்கள். படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் பெயர் போடுவதைக் கவனியுங்கள். இப்போது OTT தளங்கள் வந்துவிட்ட பின்னர் அந்த பகுதியை வேகமாக ஓட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள். ரிமோட்டை கொஞ்சம் பயன்படுத்தாமல் அந்த பெயர்களைக் கவனியுங்கள்.
ஒவ்வொரு பெயருடன் அவர்களின் துறைகளையும் நீங்கள் கவனிக்கலாம். நடிகர்களில் ஆரம்பித்து இசை, ஒளிப்பதிவு, ஒப்பனை, ஒலிக்கலவை, கலை இயக்குநர், நடன இயக்குநர், கதை, திரைக்கதை, வசனம், துணை இயக்குநர்கள், ப்ரொடக்சன், விநியோகம், மார்கெட்டிங், ஆடைகள் தேர்வு, மக்கள் தொடர்பு, ஃபோட்டோகிரபி, சண்டை பயிற்சி, அனிமேஷன், இயக்குநர் எனப் பட்டியல் நீளும். படத்திற்குப் படம் தேவையான துறைகளும் கூடும், குறையும். ஆனால், அடிப்படையான துறைகள்/ அதன் ஆட்கள் கண்டிப்பாக இடம்பெறுவார்கள். இந்ததுறை பெயர்களைக் கவனித்ததும் திரைப்படத்தில் அது எங்கே இருக்கிறது என கவனிக்க ஆரம்பிப்பீர்கள். அதைப் பற்றி உங்கள் நண்பர்களிடம் பகிர ஆரம்பியுங்கள். அவர்கள் வேறு ஒன்றினை கவனித்து இருப்பார்கள்.
புதிய பார்வை: சினிமா பார்த்த பின்னர் அதனைச் சார்ந்த உரையாடல் மேலும் புரிதலை நமக்குக் கொடுக்கும். 3-4 வரிகளில் மொத்தக் கதையையும் கூற முயல வேண்டும். கதை மாந்தர்களில் யார் வலுவாக இருந்தார்கள் என்பதைப் பற்றிப் பேசலாம். ஒருவேளை நீங்கள் அந்தப் படத்தின் இயக்குநராக இருந்தால் என்ன மாற்றத்தைச் செய்திருப்பீர்கள், எந்தக் காட்சியை, எந்த வசனத்தை மாற்றி அமைத்திருப்பீர்கள் என்றும் உரையாடலாம். இந்த உரையாடல்கள் சினிமா பற்றி மட்டுமல்ல, நம் மொழி, பார்க்கும் விதம், சிக்கல்கள் மீதான அணுகுமுறை, சமூகப் பார்வை, கலை ரசனை ஆகியவற்றுக்குப் புத்துயிர் கொடுக்கும், வலுப்படுத்தும். திரையில் கலைஞர்கள் இருப்பதை மட்டுமல்ல அவர்களுக்குப் பின்னால் இருக்கும் பொருட்கள், அவர்கள் மீது விழும் வெளிச்சம், கேமரா வைக்கப்படும் இடம், கேமராவின் நகர்தல், கேமரா கோணம், ஆடை வடிவமைப்பு, வசன உச்சரிப்பு, பின்னணி இசை என்பதைப் பற்றி மெல்ல மெல்லக் கவனிக்க ஆரம்பிப்பீர்கள். அப்படியே அதில் இருக்கும் அனைத்து துறைகள் பற்றியும் பேச ஆரம்பிப்பீர்கள். ஆரம்பப்புள்ளியாக, உங்கள் பள்ளி விழாக்களில் நாடகம் எழுதி நடிக்கலாம். முழுவதுமாக நீங்களே வடிவமைக்கலாம். யார் கண்டது உங்களுடைய விருப்பமான துறை இதில் ஏதோ ஒன்றாகவும் இருக்கலாம்.
(தொடரும்)
கட்டுரையாளர் சிறார் எழுத்தாளர்.
‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’
ஆகியவை இவரது சமீபத்திய நூல்கள்
தொடர்புக்கு: umanaths@gmail.com