

ஒரு ஆசிரியர் வகுப்பறைக்கு உள்ளே பாடம் நடத்தி, குழந்தைகளிடம் இருந்து சிறந்த கற்றல் வெளிப்பாட்டை பெற வேண்டும் என்றால் வகுப்பறைக்கு வெளியே அக்குழந்தையின் நிலை என்ன என்பதை ஆசிரியர் அவசியம் அறிந்திருக்க வேண்டும். புதுச்சேரியில் உயர்நிலைப்பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தவர் இரா.தட்சனாமூர்த்தி. பணிக் காலத்தின்போது வகுப்பறையில் கிடைத்த நேரடி அனுபவங்களை இந்த புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். குடிகார அப்பா, அம்மாவுக்கும் இடையில் எப்போதும் சண்டை,. அவர் வந்து டிசி கேட்டா கொடுத்துடாதீங்க சார். எம்மவ படிக்கணும் என்று கெஞ்சும் அம்மா. மாணவி திவ்யா படிப்பில் சுட்டிதான். திடீரென்று பள்ளிக்கு வரவில்லையே என்று ஆசிரியர் வீடுதேடிச் செல் கிறார்.
குடும்பத்தை சீரழித்த குடிப்பழக்கம்: குடிகார தந்தையை பிரிந்து சென்றுவிட்ட தாய். அதிகக் குடியின் காரணமாக அப்பாவும் இறந்துபோகிறார். பாட்டியின் அரவணைப்பில் இருந்த திவ்யாவும், தம்பியும் குடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளிக்கு வருவது இனி கடினம் என்கிறார் பாட்டி. நல்லா படிக்கற பெண்ணை முழு ஆண்டு பரீட்சை வரையாவது பள்ளிக்கு அனுப்புங்க என்று சொல்லி வருகிறார் ஆசிரியர். இதற்கிடையில் ஆசிரியருக்கு பணிமாறுதல் கிடைப்பதால் அப்பள்ளியை விட்டுச் சென்றுவிடுகிறார்.
தடம்புரண்ட எதிர்காலம்: இரண்டு வருடம் கழித்து தற்செயலாக திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் பூ விற்கும் பெண்ணாக திவ்யாவை பார்க்கிறார். இரண்டு மாதம் கழித்து மீண்டும் பள்ளிக்கு வந்தபோது நீங்கள் மாறுதலாகிப் போய்ட்டதா சொன்னாங்க சார்.. பாட்டியால் என்னை கவனித்துக்கொள்ள இயலல. ஆதலால் அத்தை வீட்டில் இருக்கேன். நீங்க இருந்திருந்தா நானும் பத்தாவது முடித்திருப்பேன். நீங்க பள்ளியில் இல்லாமப் போயிட்டீங்களே சார் என்று கண்ணீர் வடிக்கிறார் திவ்யா. திவ்யாவின் இடைநிற்ற லுக்கு யார் காரணம் என்று தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொள்கிறார் ஆசிரியர். மண் வண்டி ஓட்டிவந்த அப்பாவின் கால் எலும்பு முறிந்ததால், வண்டிக்காரனாய் மாறிப்போன இருசப்பன். கல்யாண வீட்டில் இலையெடுத்து பிழைக்கும் தாயின் உழைப்பில் எலும்புமூடிய தசையுடன் மட்டுமே இருக்கும் பரமசிவன், நூறு சதவீத தேர்ச்சி தரவேண்டுமென ஆங்கிலம் வராத தமிழ்ச்செல்வனை அவமானப் படுத்தியே பள்ளியை விட்டு நிற்கவைக்கும் ஆங்கில ஆசிரியர்.
யார் காரணம்? - இந்தப் பிள்ளைகளின் இடைநிற்றலுக்கு எது காரணம்? வறுமையா? பெற்றோரா? பள்ளியா? ஆசிரியர்களா? சமூகமா? அரசாங்கமா? குழந் தைகள் வகுப்பறைக்கு உள்ளேயே இருந்தாலும் முரண்பாடான குடும்பச் சூழல்களை நினைத்து பாடத்தில் கவனம் செலுத்த முடியாத மாண வர்களை எத்தனை ஆசிரியர்கள் ஆதரவாக நெருங்குகிறார்கள்? . மாணவர்கள் படிக்காமல் போவதற்கு குடும்பமும், பள்ளியுமே காரணம். குடும்பத்திற்குப் பின்னால் சமூகமும், பள்ளிக்குப் பின்னால் அரசும் இருக்கின்றன. குடும்பத்தின் பொருளாதாரம் என்ற அடிநாதம் வலுவாக இருக்கும் குடும்பத்துப் பிள்ளைகளே படிப்புக் கனியை ருசிபார்க்கிறார்கள். குடும்பத்தின் பொருளாதார அச்சாணியாக இருக்கும் தந்தைகளின் உடல்நலக்குறைவோ, பொறுப்பின்மையோ நன்றாகப் படிப்பு வரும் குழந்தைகளையும் உடல் உழைப்பாளர்களாக்கி பள்ளி இடைநிற்றலுக்கு ஆளாக்கிவிடுகிறது. கரோனாக்கு பிறகும் குடும்பங்களின் பொருளா தாரச் சூழலால் இடைநிற்றல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் வகுப்பறைக்கு வெளியே புத்தக வாசிப்பு ஒரு புரிதலை தரும். வாசித்துப் பாருங்கள். முக்கியமாய் ஆசிரியர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம்.
`கட்டுரையாளர்:
குழந்தை நேய செயற்பாட்டாளர்,
ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி,
திருப்புட்குழி, காஞ்சிபுரம்.
தொடர்புக்கு:udhayalakshmir@gmail.com