

வார்த்தைக் கணக்குகள் (Word Problems) என்றாலே பலரும் சிணுங்குவார்கள். 56 7 = ?என்றால் எளிதில் தீர்வு கண்டுவிடுவார்கள். ஆனால் அதுவே ஒரு அறையில் ஐம்பத்திஆறு குச்சிகள் இருந்தன, ஒருவர் வெளியில் இருந்து மேலும் ஏழு குச்சிகளை வீசினால் அறையில் எத்தனை குச்சிகள் மொத்தமாக இருக்கும் என்று கேள்வி இருக்கும். இதில் 56 உடன் 7-ஐக் கூட்டவேண்டுமா, கழிக்க வேண்டுமா அல்லது பெருக்க வேண்டுமா என்று குழப்பம் நிலவும்.
பாடப்புத்தகத்தில் ஒவ்வொரு பாடமும்முடிந்த பின்னர் வார்த்தைக் கணக்குகளைக் கொடுத்திருப்பார்கள். இது தேர்விற்கு மட்டுமா? பாடத்தை நாம் கற்றுக் கொண்டோமா என்று தெரிந்துகொள்ள மட்டுமா? இல்லை. நாம் தினசரிகளில் இப்படியான கணக்குகளைத்தான் போட இருப்போம். ஒரு பஜ்ஜி கடையில் மூனு மிளகாய் பஜ்ஜி, ரெண்டு சமோசா, ஐந்து டீ அப்புறம் ஒரு பாக்கெட் முறுக்கு சாப்பிட்டோம், எவ்வளவு ஆச்சு என்றுதான் சொல்லுவோம். 3 பெருக்கல் 10, 2 பெருக்கல் 15, 5 பெருக்கல் 12, 1 பெருக்கல் 25, மொத்தம் எவ்வளவு என்றா சொல்லுவோம்? இது ஓர் உதாரணம்தான். சம்பளம், கடைகளில் பொருட்கள் என எல்லா இடங்களிலும் இப்படி எளிதான அல்லது சிக்கலான வார்த்தைக் கணக்குகளே இருக்கும்.நாம் எதை எல்லாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்?
நிறைய வார்த்தைக் கணக்குகளைப் போடப் போட எண்களும் சூத்திரங்களும் வசப்படும். விடைகள் கண்டுபிடிக்க, கண்டுபிடிக்க அது தனி மகிழ்ச்சி. வாழ்வின் பெரும்பான்மையான தருணங்களில் இதுகைகொடுக்கும். வார்த்தைக் கணக்குகளுக்கு தீர்வு காண நம்மிடம் இருக்க வேண்டியவை என்னென்ன என்று பார்க்கலாம்.
மொழி வளம்: வெறும் குறியீடுகளையும் எண்களையும் தெரிந்து வைத்திருந்தால் போதாது. அது கணிதத்திற்கான மொழி. அதே சமயம் வார்த்தைக் கணக்குகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருக்கும். எந்த மொழியில் கணக்கு கொடுக்கப்படுகின்றதோ அந்த மொழியில் ஓரளவிற்குப் புரிந்துகொள்ளும் அளவிற்கேனும் திறன் இருக்க வேண்டும்.
காட்சிப்படுத்துதல்: கொடுக்கப்பட்டு இருக்கும் கணக்கினைக் காட்சிப்படுத்துதல். அதனை ஒரு சிறு நாடகமாக, காட்சியாக மனதில் ஓட்டிப்பார்க்கும் திறன் வேண்டும். ஒரு வட்டமான நீச்சல் குளத்தில் எவ்வளவு நீரை ஊற்றலாம் என்று இருந்தால், வட்டமான நீச்சல் குளம் எப்படி இருக்கும் எனக் கற்பனை செய்ய வேண்டும். அப்போதுதான் அதற்குத் தேவையான பரிமாணங்களைப் பற்றி யோசிப்போம்.
அலகுகளில் தெளிவு: பல இடங்களில் கணக்கினை சரியான தீர்வு காண முடியாததற்கு அலகுகள் ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கும். முதலில் கணக்கில் வரும் அனைத்து பரிமாணங்களுக்கும் ஒரே அலகில் கொண்டு வரவேண்டும். 10 அடி உயரமான அறைக்கு மேல 50 சென்டி மீட்டர் குச்சி இருந்தது, மொத்த உயரத்தை சென்டி மீட்டரில் குறிப்பிடுங்கள் என இருந்தால் அடியை முதலில் சென்டி மீட்டருக்கு மாற்ற வேண்டும். ஒரு அடி எத்தனை சென்டிமீட்டர் எனத் தேடுங்கள். அதே போல விடையைக் கேட்கும் அலகில்கொடுக்க வேண்டும். இதற்கு முன்னர் என்னென்ன அளவீடுகளுக்கு என்னென்ன அலகு என்றும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். (தூரம் – மீட்டர் (m), கொள்ளளவு – m3,, பரப்பளவு – m2, எடை – kg)
எழுதிப்பார்த்தல்: வார்த்தைக் கணக்கிற்கு தீர்வு காண முடியாமல் திணறினால் கையில் இருக்கும் தரவுகளை ஒரு தாளில் எழுதினாலே தீர்வை நோக்கி நகர்வோம். அட, இவ்வளவு தரவுகள் இருக்கு, அடுத்து எப்படி நகர வேண்டும் எனப் புரிந்துகொள்வோம்.
சூத்திரங்கள்: எந்த இடத்தில் என்ன சூத்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவும் வேண்டும். அதே சமயம் சூத்திரங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வாங்க, வார்த்தைக் கணக்குகளை ஒரு கை பார்க்கலாம்.
(தொடரும்)
கட்டுரையாளர் சிறார் எழுத்தாளர்.
‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’
ஆகியவை இவரது சமீபத்திய நூல்கள்.
தொடர்புக்கு: umanaths@gmail.com