

ஆசிரியை அமுதா வகுப்புக்குள் நுழைந்தார். “என்னாச்சு, ஒருமாதிரி இருக்கீங்க?” ஆசிரியை கேட்டார். “ஒரு பையன், நம்ம அதிமதுரா முகத்துல வேணுமுன்னே தண்ணிய ஊத்திட்டான்” என்றாள் தூரிகா. “பையனோட வகுப்பு ஆசிரியர்ட்ட சொன்னீங்களா?.” “அப்படி சொல்லனும்னா, நிறைய பசங்களச் சொல்லலாம் டீச்சர்” என்றாள் தூரிகா. ஆசிரியை அமுதாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனாலும் நம்பிக்கையோடு, ஒரு கதை சொன்னார்.
பொறுத்தது போதும்: தென் கொரியாவில் 1998-ல் பிறந்தார் யாங் ஜி-ஹே. “பெண்கள் இப்படித்தான் ஆடை அணிய வேண்டும்” என்கிற சமூகத்தின் எதிர்பார்ப்பை யாங்-கால் நிறைவேற்ற இயலவில்லை. பள்ளிக்குச் சென்றபோது, மாணவிகளை தனித்தனியாக தன் அறைக்கு வரச் சொன்ன ஆசிரியர் ஒருவர் அங்கிருந்தார். அறைக்குள் சென்றபோது, ஆசிரியரின் தொடுதலில் இருந்து தப்பிப்பதற்காக, கால்களையும் நெஞ்சுப் பகுதியையும் கனமான துணிகளாலும், புத்தகங்களாலும் மாணவிகள் மறைத்தார்கள். பள்ளி நிர்வாகத்துக்கு இது தெரிந்தாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
“நீதான் சரியா பார்த்து ஆடை அணியனும்” போன்ற அறிவுரைகளைக் கொடுத்தார் கள் அக்கறையுள்ள ஆசிரியர்கள். “பாலியல்சீண்டல்ங்கிறது தனிப்பட்ட விசயம். பொறுத்துதான் போகனும். அப்பதான், பல்கலைக் கழகத்தில் சேர்றதுக்கு பள்ளிக்கூடத்தில சான்றிதழ் கிடைக்கும்” என்றனர் பெற்றோர். இந்நடைமுறை இனியும் தொடரக் கூடாது என்று நினைத்தார் யாங் ஜி-ஹே.
வழிகாட்டும் ஒளி: 2014-ம் ஆண்டு, 16 வயதில், பெண்ணியம் என்கிற வார்த்தையை கேள்விப்பட்டார். தன் உடலுக்கும், தன் வாழ்க்கை முறைக்கும் மரியாதை தருவதுதான் பெண்ணியத்தின் முக்கிய கூறு என்பதை உணர்ந்தார். தொடர்ந்து பெண்ணியம் குறித்து வாசித்தார். நண்பர்களுடன் கலந்துரையாடினார். இந்நிலையில், உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்திய #MeToo இயக்கம் கொரிய நாட்டுக்கும் வந்தது. அந்த இயக்கத்தை, பள்ளிகளுக்குள் #SchoolMeToo என கொண்டு வந்தார் யாங் ஜி-ஹே. மாணவிகளை ஒருங்கிணைத்தார். நாடு முழுவதும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தெருவில் இறங்கினார்கள். சில பள்ளியில்தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் களை துண்டுச் சீட்டுக்களில் எழுதி பள்ளி சுவர்களில் ஒட்டினர். 2018-ல் தென் கொரியாவில் அதிகம் ட்விட் செய்யப்பட்ட வார்த்தை #SchoolMeToo. கொரிய பதின்பருவ மாணவிகள் பள்ளியில் அனுபவிக்கும் கொடுமைகளை, ஜெனிவாவில் உள்ள, ஐ.நா. குழந்தைகள் உரிமை அமைப்பில் 2019-ல், முறையிட்டார்.
போராட்டம் வலுப்பெற்றதால், கொரிய நாட்டு கல்வித்துறை ‘பாலின சமத்துவ குழு’ அமைத்தது. தற்போது, ‘நாங்கள் பதின்பருவத்தினர்’ என பொருள்படும் WeTee அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளராக செயலாற்றும், யாங் ஜி-ஹே “பதின்பருவத்தினர் திறமை யற்றவர்கள், மற்றவர்கள்தான் அவர்களுக்காக பேச வேண்டும் என்கிற புரிதல் நிலவுகிறது. ஆனால், இளம் தலைமுறையிடம் ஏற்கெனவே மாற்றங்கள் நிகழத் தொடங்கிவிட்டன” என் கிறார்.
(தொடரும்)
கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.
தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com