பிளஸ் 2க்குப் பிறகு - 7: கவர்ந்திழுக்கிறதா கணினி அறிவியல்?

பிளஸ் 2க்குப் பிறகு - 7: கவர்ந்திழுக்கிறதா கணினி அறிவியல்?
Updated on
2 min read

அரங்கில் நுழைந்த மாணவர்களை மேஜையில் வீற்றிருந்த பளபளப்பான மடிக்கணினி கவர்ந்திழுத்தது. லேப்டாப்பில் மும்முரமாக இருந்த பேராசிரியர் ராகவன் பேச்சை ஆரம்பித்தது கூட, கணினி தொடர்பாக அமைந்ததில் மாணவர்கள் சுவாரசியமானார்கள்.

"தமிழகத்தில் தற்போது பொறியியல் உயர்கல்விக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அதன் முதல் சுற்றில் நமது கிராமத்தை சேர்ந்த 2 மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் இடம் கிடைத்திருக்கிறது. மேலும் பலர் அடுத்த சுற்று கலந்தாய்வுக்காக காத்திருக்கின்றனர்” என்று சொல்லி அங்கே குழுமியிருந்த பள்ளியின் முன்னாள் மாணவ மாணவியரை பேராசிரியர் அடையாளம் காட்டியதும், பொறியியல் கலந்தாய்வில் அவர்களின் வெற்றிக்கு கரவொலி மூலம் வாழ்த்துக்கள் எதிரொலித்தன.

கைத்தட்டல் தேயும்வரை காத்திருந்த பேராசிரியர், இதில் உங்கள் அனைவருக்கும் முக்கிய சேதி காத்திருக்கிறது. இவர்கள் அனைவருமே பொறியியல் படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் சேர்வதை இலக்காக கொண்டவர்கள். இவர்கள் மட்டுமல்ல உங்களில் பலருக்கும்கூட பொறியியலில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பதில் ஆர்வம் இருக்கலாம்...என்று முடிக்கும் முன்னரே மாணவர்களில் பெரும்பாலானோர் உற்சாகமாக கை உயர்த்தினார்கள்.

வளரும் உயர்கல்வி பிரிவு: தனது பேச்சை தொடர்ந்தார் பேராசிரியர்... வெற்றிகரமாக கணினி படிப்பை முடிப்பவர்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கைநிறைய ஊதியத்தை அள்ளித் தருகிறார்கள். இதனால் கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளை தேர்வு செய்வோரின் எண்ணிக்கை வருடந்தோரும் எகிறி வருகிறது. அதிகரிக்கும் தேவையை ஒட்டி கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அது சார்ந்த பிரிவுகளில் சேர்க்கையை அதிகரித்துக்கொள்ள உயர்கல்வித்துறை அனுமதியும் வழங்கியுள்ளது. இந்த வகையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் மட்டும் கடந்தாண்டு 27 ஆயிரமாக இருந்த இருக்கைகள் நடப்பாண்டில் 42 ஆயிரமாக அதிகரித்துள்ளன. அது சார்ந்த தகவல் தொழில்நுட்பம், சைபர் செக்யூரிட்டி, ஆர்டிஃபிஷியில் இண்டலிஜென்ஸ் உள்ளிட்ட இதர பிரிவுகளிலும் இருக்கைகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது நடைபெற்று வரும் கலந்தாய்வின் முதல் சுற்றில் பங்கேற்ற பாதிக்கும் மேற்பட்ட மாணவர்களின் முதல் தேர்வு கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அது சார்ந்த பிரிவாகவே அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தனியாக கணினி அறிவியல் தேவையா? - இந்த இடத்தில்தான் பிரச்சினை வருகிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் போதியஆர்வம் இல்லாதவர்கள்கூட அதில் சேரமுயல்கிறார்கள். அவர்களை நம்பி பொறியியல் கல்லூரிகளை திறந்து வைத்திருக்கும் தனியார்கள், தங்களது கட்டண விகிதங்களை பலமடங்கு உயர்த்தி உள்ளனர். இப்படி ஊதிப் பெருக்கப்பட்ட தோற்றத்தால் கம்ப்யூட்டர் சயின்ஸ் தொடர்பான மாயை பெரும் நீர்க்குமிழியாக உருவெடுத்துள்ளது. மேலும் உயர்கல்வியில் எந்த துறையானாலும் நவீன கணினி அறிவியலை உட்கிரகித்தே மாறி வருகின்றன. பாடத்திட்டத்திலும் கணினி சார்ந்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அறிவியல்உயர்கல்வி எதில் சேர்ந்து படிப்பதானாலும், அவற்றுடன் தொடர்புடைய கணினி மென்பொருள்களை எளிதில் கற்றுக்கொள்ளலாம். எனவே பள்ளிப்பருவத்து மாணவர்களாகிய நீங்கள், கம்ப்யூட்டர் மீதான ஆர்வத்தில் முழுமுதலாய் அதிலேயே சேர வேண்டும் என்பதில்லை. அடிப்படையில் உங்களுக்கு விருப்பமுள்ள துறையை முடிவு செய்துகொண்டு, அவை சார்ந்த கணினி படிப்புகளை பரவலாக கற்றுக்கொள்ளலாம்.

கணினி அறிவியல் மற்றும் அது சார்ந்த உயர்கல்வி பிரிவுகள் அசுரத்தனமாய் வளர்ந்து வருபவை. அதாவது பொறியியல் கல்லூரியில் இன்று ஒரு மாணவர் படிக்கும் மென்பொருள் அவர் படிப்பை முடித்து பணியில் சேரும்போது வரவேற்பு இழந்திருக்கலாம். நித்தம் தன்னை புதுப்பித்து வரும் இந்த நவீன துறையின் இயல்புக்கு ஏற்ப சதா கற்றுக்கொள்ளும் ஆர்வமும், அர்ப்பணிப்பும் உள்ளவர்கள் மட்டுமே இத்துறையில் ஜொலிக்க முடியும்.

வேண்டாமே மாயை: அதேபோல பொறியியலில் கம்ப்யூட்டர் சயின்ஸ் வழங்கும் கல்லூரியின் நவீன ஆய்வகங்கள், பெரும் நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஏற்பாடுகள், சர்வதேச பல்கலைக்கழகங்களை தொடர்புகொள்ளும் டிஜிட்டல் லைப்ரரி, வெற்றிகரமான வளாக நேர்காணல் வரலாறு உள்ளிட்ட அம்சங்களை சரிபார்த்த பின்னரே சேர்வது நல்லது. அல்லது அவற்றைவிட பலமடங்கு குறைந்த செலவினம் கொண்ட டிப்ளமா மற்றும் டிகிரி படிப்புகளிலும் சேரலாம். மென்பொருள் நிறுவனங்களுக்கான ஆளெடுப்பில் பொறியியலின் இதர பிரிவுகளையும், கலை அறிவியல் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துவரும் பட்டதாரிகளையும் ஒருசேரவே எடைபோடுகிறார்கள். எனவே தனிப்பட்ட ஆர்வம் உடையவர்கள் தவிர்த்து சகலரும் பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் மாயையில் விழுவதை தவிர்க்கலாம்.

எதிலும் சாதிக்கலாம்: பொறியியலோ, அறிவியல் கல்லூரியோ கணினி சார்ந்த படிப்பு என்றதுமே எல்லோரும் சொல்லிவைத்தார்போல மென்பொருள் சார்ந்த பணிகளுக்கே போட்டியிடுகிறார்கள். மென்பொருள் நிரலாக்கத்துக்கு நிகராக ஹார்டுவேர் எனப்படும் வன்பொருள் துறையும், நெட்வொர்க்கிங், இ-காமர்ஸ் உள்ளிட்ட இதர வளரும் துறைகளிலும் கவனம் செலுத்தலாம். ஆக, கம்ப்யூட்டர் மீதான ஈர்ப்போடு தற்போது பள்ளியில் படிப்போர், எதிர்காலத்தில் தாங்கள் விரும்பிய எந்த துறையிலும் கம்ப்யூட்டர் சார்ந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்த முடியும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதனை மனதில் வைத்து பள்ளி படிப்பில் கவனம் செலுத்துங்கள். உங்கள் ஆர்வமும், ஈடுபாடும் சரியான உயர்கல்வியை உங்களுக்கு அடையாளம் காட்டும்.

கட்டுரையாளர்

தொடர்புக்கு: leninsuman4k@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in