

பள்ளியில் படித்த நாட்களிலிருந்து கல்விசாரா இதர செயல்பாடுகளில் சகலகலா வல்லவனாக திகழ்ந்ததால் யூபிஎஸ்சியில் வெற்றிக் கனியை பறித்த இளம் அதிகாரி டி.சரவணன். மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வு எழுதி 2019-ல் ஐபிஎஸ் அதிகாரியானவர். உத்தரப்பிரதேசம் அலகாபாத் மாநகரக் காவல்துறையின் உதவி கண்காணிப்பாளராக செயலாற்றி வருகிறார்.
முசிறி தாலுகா குணசீலத்தில் கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி. ஐஓபி வங்கி அதிகாரியான இவர், குழந்தைகளின் கல்விக்காக மனைவி இந்திராகாந்தியுடன் ரங்கத்தில் குடியேறினார். இந்த தம்பதியின் மூன்றாவது குழந்தை டி.சரவணன். எல்கேஜி முதல் 10-ம் வகுப்புவரை அகிலாண்டேஸ்வரி வித்யாலயா பள்ளியில் பயின்றார் சரவணன். சிபிஎஸ்இ முறையில் படித்து வந்தவர் பிளஸ் 1-ல் கம்யூட்டர் சயின்ஸ் பிரிவை தேர்ந்தெடுத்து ஆர்.எஸ்.கிருஷ்ணன் மேல்நிலைப் பள்ளிக்கு மாறியுள்ளார். கோயம்புத்தூரின் அமிர்தா பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் பிடெக் முடித்தார்.
ஊக்கப்படுத்திய பள்ளி ஆயா: சிறுவயது முதல் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பது சரவணனின் விருப்பம். இதை தாயும், தந்தையும் தொடர்ந்து எடுத்துக்கூறி வளர்த்துள்ளனர். கல்லூரி இறுதியாண்டில் சரவணன் படித்துக் கொண்டிருந்தபோது மூத்த சகோதரரான தினேஷ், யூபிஎஸ்சி எழுதி 2014-ல் ஐஆர்எஸ் (கஸ்டம்ஸ்-ஜிஎஸ்டி) வென்றுள்ளார். எனினும், தன் சகோதரருக்கும் முன்பாகவே சரவணனுக்கு ஐஏஎஸ் அறிமுகமாகி விட்டது. அதற்கு முதன்மையான காரணம் பள்ளி பேருந்து ஆயாவான மணியக்கா, ‘கண்ணே சரவணா! நீ நல்லா படிச்சு கலெக்டராகனும்!’ என்று அடிக்கடி கூறியது சரவணனின் மனதில் பசுமரத்தாணி போல பதிந்துள்ளது. இது குறித்து ஐபிஎஸ் அதிகாரியான சரவணன் நினைவுகூரும்போது, “பொதுவாக குழந்தைகள் வளர வளர அவர்களது எதிர்கால இலக்கும் மாறுவது சகஜம். ஆனால் எனக்கு அப்படி இல்லை. நான் சிறுவனாக இருந்தபோது பள்ளி ஆயாவான மணியக்கா கூறியதே என் மனதில் பதிந்து விட்டது. எனவே, எனது கல்லூரி வாழ்க்கை வரை வகுப்பு ஆசிரியர்கள் கேட்கும் போதெல்லாம் நான் ஐஏஎஸ் ஆக விரும்புவதாகவே கூறினேன். இதற்கு ஏற்ப எனது குடும்பத்தினரும் உற்சாகமூட்டி வளர்த்தது ஐபிஎஸ் பெற வைத்தது. மேலும் படிப்பை தாண்டியும் இதர செயல்பாடுகளில் எனக்கிருந்த ஆர்வம் காரணமானது” என்றார்.
வகுப்பில் கவனம் சிதறியதே இல்லை: எப்படியும் முதல் பத்து ரேங்குகளுக்குள் ஒன்றை பிடித்துவிடுவதை பள்ளியிலிருந்தே வழக்கமாக கொண்டுள்ளார் சரவணன். வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது ஒரு நாளும் தனது கவனம் சிதறவிட்டதில்லையாம். அதனாலேயே வீடு திரும்பிய பிறகு பள்ளியில் கற்று கொடுத்தவற்றை மீண்டும் படிக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டதில்லையாம். அதேசமயம், சரவணனுக்கு, ஆறாம் வகுப்பு முதல் பொதுஅறிவு வினாடி வினா போட்டியில் ஆர்வம் வளர்ந்து அவற்றில் அதிகமாக பங்கு பெற்றுள்ளார். இதற்கு அப்போது குடிமைப்பணிக்குத் தயாராகி வந்த சரவணனின் சித்தப்பாவான குருநாதனும் காரணமாகி உள்ளார். இந்த வழக்கம், கல்லூரிக் காலத்திலும் தொடர்ந்துள்ளது.
கை வந்த கலைகள்: அது மட்டுமின்றி சரவணனுக்கு வித்தியாசமானவற்றை முயன்று பார்ப்பதில் பேரார்வம் இருந்துள்ளது. அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒருவர் அமரக் கூடிய ரேஸ் கார் வடிவமைக்கும் போட்டியில் தனது குழுவுடன் சேர்ந்து சரவணனும் கல்லூரி காலத்தில் பங்கேற்றுள்ளார். இதில் முதன்முறையாக இறுதிப்போட்டி வரை சென்ற முதல் இந்திய மாணவர்கள் எனும் பெயர் இவரகளது குழுவுக்கு அப்போது கிடைத்துள்ளது. துண்டு காகிதங்கள், அட்டைகளை வெட்டாமல் மடித்து சில நிமிடங்களில் அழகாக வடிவமைக்கும் ஆரிகாமி கலையிலும் வல்லவராக திகழ்ந்திருக்கிறார். சன் தொலைக்காட்சியின் நடனப் போட்டிகளிலும் 5-ம், 6-ம் வகுப்புகளில் படித்தபோது பங்கு பெற்றுள்ளார்.
இனிமையான குரலுடன் பாடலும் பாடும் சரவணனுக்கு புகைப்படம் எடுப்பதில் இன்றும் ஆர்வம் உண்டு. பல திரை விமர்சனங்களை சமூகவலைத்தளங்களில் ரசனையுடன் இவர் எழுத அவற்றில் பல வைரலாகி உள்ளன. இது குறித்து சரவணன் குறிப்பிடும்போது, “யூபிஎஸ்சியில் எனது நேர்முகத் தேர்விலும் இவற்றை குறிப்பிட்டிருந்தேன். அதன் தேர்வாளர்கள் என்னிடம் ஒரு ஏ-4 பேப்பரை ஆரிகாமி முறையில் செய்து காட்டும்படி கூறினர். வாலை இழுத்தால் பறக்கக் கூடிய பறவையை செய்தபடியே கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகளையும் கொடுத்தேன். இதுபோன்ற பறவையை நீண்ட ஆயுளுக்காக ஜப்பானியர்கள் பரிசாக அளிப்பது வழக்கம் என்ற சுவாரஸ்யமான தகவலையும் அப்போது பகிர்ந்தேன்” என்றார்.
கல்லூரி முடித்தவுடன் பொது நிர்வாகப் பாடப் பயிற்சிக்காக, டெல்லியில் ஓராண்டு தங்கி படித்தவர் பிறகு ரங்கம் திரும்பி வீட்டிலேயே படித்து யூபிஎஸ்சி வென்றார். 2014-லிருந்து யூபிஎஸ்சி தேர்வை எழுத ஆரம்பித்தவர் 2019-ல் ஐபிஎஸ் வென்றார். பள்ளிக்காலம் முதல் கல்விக்காக அனைத்தையும் மறந்து மூழ்கிவிடும் வழக்கம் மாணவர்களிடம் உள்ளது. இதுபோன்றவர்கள் மத்தியில், கல்வியுடன் இதர செயல்பாடுகளில் ஆர்வம் காட்டி ஐபிஎஸ் பெற்ற சரவணன் வித்தியாசமானவராக உள்ளார். - கட்டுரையாளர் தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in