

நவீன தொழில்நுட்பத்துக்கு மின்சாரம் அவசியம் என்றும் மின்சாரத்தைப் பற்றிய அறிவு ஓரளவு தேவை என்றும் இதுவரை பார்த்தோம். அத்துடன் வோல்டேஜ் என்பது இரண்டு உலோகத் தகடுகளுக்கு இடையில் உள்ள எலக்ட்ரான் வித்தியாசம் என்றும் விவாதித்தோம். இந்த எலக்ட்ரான் வித்தியாசம்தான் கம்பியில் எலக்ட்ரான் ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
எலக்ட்ரான் ஓட்டத்திற்கு கரண்ட் (current) என்று பெயர். அதாவது எலக்ட்ரான்கள் அதிகம் உள்ள உலோகத் தகடையும், எலக்ட்ரான்கள் குறைவாக உள்ள உலோகத் தகடையும் ஒரு கம்பியைக் கொண்டு இணைத்தால் எலக்ட்ரான்கள் அதிகம் உள்ள தகடில் இருந்து எலக்ட்ரான்கள் குறைவாக உள்ள தகடுக்கு கம்பி மூலம் எலக்ட்ரான்கள் பாயும். இதுவே “எலக்ட்ரான்கள் ஓட்டம்” அதாவது Electron Current என்றழைக்கப்படுகிறது. ஆனால், விஞ்ஞானிகள் எலக்ட்ரானை ‘மைனஸ்’ என்றும் புரோட்டானை ‘பிளஸ்’ என்றும் அழைக்கின்றனர். அதாவது எலக்ட்ரான்கள் அதிகம் இருக்கும் உலோகத் தகடை ‘நெகடிவ்’ என்றும் எலக்ட்ரான்கள் குறைவாக உள்ள உலோகத் தகடை ‘பாஸிடிவ்’ என்றும் குறிப்பிடுகிறார்கள். நெகடிவை ‘-’ என்ற குறியீட்டாலும், பாஸிடிவை ‘ ’ என்ற குறியீட்டாலும் குறிப்பிடுகின்றனர். இதன்படி ‘ ’ மற்றும் ‘-’ கொண்ட உலோகத் தகடுகளைக் கொண்ட பொருள் ‘பாட்டரி’ எனப்படுகிறது.
ஒப்புக்கொள்ள மறுத்த பழமை வாதிகள்: இப்போது ‘ ’ மற்றும் ‘-’ பகுதிகளைக் கம்பி மூலம் இணைத்தால் ‘-’ உலோகத் தகடிலிருந்து ‘ ’ உலோகத் தகடுக்கு எலக்ட்ரான்கள் கம்பிகள் வழியாக பாயும். ஆனால், இதனை பழமை வாதிகள் தொடக்கத்தில் ஏற்க மறுத்தனர். வழிவழியாக ‘ ’ -ல் இருந்து மட்டுமே ‘-’ற்கு எதையும் தர முடியும் என்று சொல்லப்பட்டு வந்திருக்கிறது. எவ்வாறு ‘-’ இடமிருந்து ‘ ’-க்கு எலக்ட்ரான்கள் பாய முடியும் என்ற கேள்வியை அவர்கள் எழுப்பினர். இதன் காரணமாக, இல்லாத ஒரு ஓட்டத்தை உருவாக்கி அதனை ‘Conventional Current’ (பழமைவாய்ந்த மின்சார ஓட்டம்) என்று விஞ்ஞானிகள் அழைத்தனர்.
எல்க்ட்ரான்கள் கம்பியில் ஓடும்போது அணுக்களுக்கு இடையில் இடைவெளி இல்லை என்றால் மின்சார ஓட்டம் இருக்காது. இதனை மின்சார தடை அல்லது மின்தடை என்று அழைக்கிறார்கள். மின்தடை என்பது உலோகத்திற்கு உலோகம் வேறுபடும். அதேபோல் கம்பியின் அளவை பொருத்தும் மாறுபடும். மெல்லிய கம்பி மின் ஓட்டத்திற்கு அதிகத் தடையை ஏற்படுத்தும். அதுவே தடிமனான கம்பி மின் ஓட்டத்திற்கு குறைந்த தடையை தரும். அடுத்து, நாம் இதுவரை படித்த வோல்டேஜ், கரண்ட், மின்தடை அல்லது மின் அழுத்தம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பை குறித்து விரிவாக பேசலாம்.
தொடர்ந்து டிஜிட்டல் மொழி பேசுவோம்…
கட்டுரையாளர், பொறியாளர், தொழில்நுட்பப் பயிற்றுநர்