

இன்று பெரும்பாலான ஊடக படிப்புகளில் சமூக ஊடகங்கள் பற்றிய பாடம் இணைக்கப்பட்டுள்ளது. அதற்குக் காரணம், இன்றைய காலகட்டத்தில் செய்திகளை உடனுக்குடன் தெரியப்படுத்துவதில் தவிர்க்க முடியாத ஊடகமாக சமூக ஊடகங்கள் இருந்து வருகின்றன.
ஒரு கட்டுரையோ அல்லது ஒரு புத்தகமோ எழுதுவதை விட சமூக ஊடகங்களில் எழுதுவது எளிமையாகிவிட்டது. இன்று பலரும் சமூக ஊடகங்களில் எழுதும் எழுத்துக்களைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டு வருகின்றனர்.
புகழ்பெற்ற எழுத்தாளர்கள் கூட முதலில் சமூக ஊடகங்களில்தான் எழுதுகிறார்கள். ஆண்டின் இறுதியிலோ அல்லது புத்தகக்காட்சியின் போதோ அதனைப் புத்தகமாக்கி வெளியிடுகின்றனர்.
பிடித்தமான தலைப்பு தயாரா? - எனவே, மாணவர்கள் படித்துக்கொண்டு இருக்கின்ற போதே, சமூக ஊடகங்களில் எழுதத் தொடங்க வேண்டும். அவ்வப்போது பொதுப்படையாக எதையாவது எழுதுவதைத் தவிர்த்து ஒரு குறிப்பிட்ட தலைப்பினில் தொடர்ந்து எழுதலாம். உதாரணமாக, மாணவர்கள் திரைப்படங்களை பார்ப்பதில் ஆர்வமாக இருப்பார்கள். பார்த்த திரைப்படத்தினை எல்லோரும் எழுதுவது போல் பொதுப்படையாக எழுதாமல், அதில் பயன்படுத்தப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பங்கள், சிறப்பம்சங்களை பட்டியலிட்டு எழுதலாம்.
இன்னும் சில மாணவர்கள், மொபைல் கேம்ஸ்களில் ஆர்வம் கொண்டிருப்பர். அது பற்றிய தொடர் கட்டுரைகளை எழுதலாம். கட்டுரை என்றதும் பயந்துவிட வேண்டாம். ஒரு பத்தி கூட போதுமானது. ஆனால், அதனைத் தொடர்ந்து எழுதுவது அவசியம். ஒரு கட்டத்தில் இப்படி எழுதியவற்றை தொகுத்து ஒரு சிறு நூலாக்கி வெளியிடலாம். நூல் என்றவுடன், அது அச்சில்தான் வரவேண்டும் என்பதில்லை. அது டிஜிட்டல் வடிவத்தில் கூட இருக்கலாம். இப்படியான செயல்பாடு பாடத்திட்டத்தில் இருந்தால் எப்படியிருக்கும்? சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் முதுகலை இதழியல் (Master of Journalism - MJ) படிப்பானது இந்த அம்சங்கள் அனைத்தையும் உள்ளடக்கியது. சமூக ஊடகத் தொடர்பியல் (Social Media Communication) தாள் இன்றைய சூழலில் மிக முக்கியமானதாகக் கருதக் காரணம், இன்று பலர் சமூக ஊடகங்களைச் சார்ந்தே இயங்கி வருகின்றனர். அன்றாடச் செய்திகளைக் கூட முதலில் சமூக ஊடகங்களின் ஊடாகவே அறிந்துகொள்ளும் வழக்கம் பலரிடம் காணப்படுகிறது.
போலி தகவல்கள் ஜாக்கிரதை: ஆனால், இதே சமூக ஊடகங்கத்தில்தான் தவறான, பொய்யான செய்திகளும் பகிரப்படுகின்றன. அதுபோன்று நமக்கு வரும் செய்திகளை, நாம் கொஞ்சம் கூட செய்தியின் நம்பகத்தன்மையைச் சோதிக்காமல் அப்படியே பகிர்ந்துவிடுகிறோம். இதுவும் தவறு. ஒவ்வொரு செய்தியின் நம்பத்தன்மையையும் சோதிப்பது அவசியம். ஒரு குறுந்தகவலில் “இந்தியனா இருந்தா ஷேர் செய்” என்ற ஒரு வரி இருந்தால் போதும், நம்மில் பலர் நாம் இந்தியர் என்று நிரூபிக்க களத்தில் இறங்கிவிடுவோம், அந்த செய்தியின் நம்பகத்தன்மையைச் சோதிக்காமல் பகிர்ந்துவிடுகிறோம்.
உதாரணமாக ஒரு செய்தி, ‘ரேடியோ கார்டன்‘ என்ற ஒரு இணையதளம் மற்றும் செயலியைக் கேள்விப்பட்டிருப்போம். இது இஸ்ரோவின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு எனவும், இதற்காக நாம் அனைவரும் அவர்களுக்கு சல்யூட் செய்ய வேண்டும் என்றும், அந்த பதிவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. உண்மை என்னவெனில், இஸ்ரோவுக்கும், ரேடியோ கார்டனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இஸ்ரோவுக்கு நாம் சல்யூட் செய்ய வேண்டியது தான், ஆனால் எந்த விதத்திலும், கொஞ்சம் கூடத் தொடர்பில்லாத ஒரு செயலியை எப்படி சொந்தம் கொண்டாட முடியும்? படிக்கும், பார்க்கும் அனைத்து செய்திகளையும் அப்படியே பகிர்ந்துவிடுவதால் வரும் சிக்கல் இது. இதழியல் மாணவர்கள் இவற்றில் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே சமூக ஊடகத் தொடர்பியல் பாடம் மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
யாருடைய கண்டுபிடிப்பு? - ரேடியோ கார்டன் என்பது, 2013 முதல் 2016 வரை நெதர்லாந்து இன்ஸ்டிடியூட் ஃபார் சவுண்ட் அண்ட் விஷன், டிரான்ஸ்நேஷனல் ரேடியோ நாலெட்ஜ் பிளாட்ஃபார்ம் மற்றும் ஐந்து ஐரோப்பிய பல்கலைக்கழகங்களால் இணைந்து உருவாக்கப்பட்ட திட்டம். லாப நோக்கமற்ற டச்சு ரேடியோவின் டிஜிட்டல் ஆராய்ச்சி திட்டம் இது. இணையதளம் மட்டுமல்லாது, செயலியாகவும் இதுபதிவிறக்கம் செய்து கொள்ள கிடைக்கிறது. இதன் மூலம், நாம் எங்கு இருக்கிறோமோ, அந்த பகுதியில் ஒலிபரப்பாகும் வானொலிகளை நம் கைப்பேசியிலேயே கேட்க முடியும். ஒரே ஒருநிபந்தனை, அந்த வானொலி, இணையத்தில் ஒலிபரப்புவதாக இருக்க வேண்டும். ரேடியோ கார்டன் பற்றி விரிவாக அறிந்து கொள்ள http://radio.garden எனும் இணைய முகவரியைக் காணலாம்.
(உலா வருவோம்)
கட்டுரையாளர்: உதவி பேராசிரியர்,
இதழியல் மற்றும் தொடர்பியல் துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்தொடர்புக்கு: bbcsakthi@gmail.com