

“தலையில சீப்பை வெச்சாலே போதும்... கொத்துகொத்தா இவளுக்கு முடி கொட்டுது. இவ்வளவு சின்ன வயசுலயே இப்படி கொட்டினா பயமா இருக்கு. முடி கொட்டாம இருக்க எதும் வழி இருக்கா டாக்டர்?" என்று கேட்கிறார் பத்தாம் வகுப்பு காவ்யாவின் அம்மா. முடிகொட்டுவது பெரிய பிரச்சினைதானா என்பதை முதலில் புரிந்து கொண்டால் அதை எப்படி கையாளலாம் என்பதையும் தெரிந்து கொள்வது எளிது காவ்யா அம்மா.
நமது தோல் மூன்று அடுக்குகளால் ஆனது. அதில் இரண்டாம் அடுக்கான டெர்மிஸ் எனும் உட்பகுதியில்தான் வியர்வை நாளங்கள், எண்ணெய் சுரப்பிகள் மற்றும் முடியின் வேர்க்கால்கள் அமைந்துள்ளன. கெரடின் எனும் கடினமான புரதத்தால் ஆன நமது முடி, இந்த வேர்க்கால்களில் இருந்து புறப்பட்டு டெர்மிஸைத் துளைத்து தோலுக்கு வெளியே வரும்போதுதான் அது நமது கண்ணுக்குத் தெரிகிறது. அதேசமயம், நமது தலைமுடியின் வேர்கால்களில் உள்ள மெலனின் நிறமி மனிதர்களிடையே வேறுபடுவதால், அதன் அளவைப் பொறுத்து தலைமுடி சிலருக்கு நல்ல கருப்பாகவும், சிலருக்கு செம்பட்டை அல்லது பொன்னிறத்திலும் இருக்கிறது. மிக வேகமாக வளரும் திசுக்களில் ஒன்றான முடி, ஒவ்வொரு நாளும் 0.35 – 0.44mm அளவிற்கு வளரும் என்பதுடன், அதில் நரம்புகள் இருக்காது என்பதால்தான் அதை வெட்டும்போது நமக்கு வலிப்பதில்லை.
வாழ்நாள் முழுவதும் வளர்ந்துகொண்டும், உதிர்ந்துகொண்டும் இருக்கும் முடி, தலையில் மட்டும் லட்சத்திற்கும் மேல் உள்ளது என்பதுடன், ஒருநாளில் 50-100 முடி வரை உதிர்வது இயல்பு தான் என்கிறார்கள் trichologists என்று அழைக்கப்படும் முடி நிபுணர்கள். மேலும், முடியின் வளர்ச்சியை அனாஜன் (முடி வேகமாக வளரும் நிலை), கெட்டாஜன் (முடி வளர்ச்சி குறைந்த நிலை) டீலோஜன் (முடி உதிரும் நிலை) ஆகிய மூன்று நிலைகளாகப் பிரிக்கும் இந்நிபுணர்கள், தலையில் இருக்கும் முடியானது, 7 ஆண்டுகள் வரை அனாஜன் நிலையில் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த வளர்ச்சிக் காலம் முடிகையில், அடுத்த ஓரிரு மாதங்களில் கெட்டாஜன் நிலையில் வளர்ச்சி குறைந்து, டீலோஜனில் உதிர்தல் நிகழ்ந்தவுடன், மீண்டும் வேர்க்கால்களில் இருந்து புதிய முடி புறப்படுகிறது என்பதுதான் தலைமுடியின் வாழ்க்கைச் சுழற்சி என்கிறார்கள்.
அப்படியென்றால், ஏன் கொத்து கொத்தாக, நூற்றுக்கும் மேல் முடி உதிர்கிறது, அதுவும் எல்லாம் ஆரோக்கியமாக இருக்கும் இளமைப் பருவத்திலேயே இப்போது முடி உதிர்வது ஏன் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது என்று கேட்டால் அதற்கு நாம்தான் காரணம் என்கிறார்கள் இந்நிபுணர்கள். நாம் எப்படி காரணமாக முடியும் என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.
(ஆலோசனைகள் தொடரும்)
கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்.
தொடர்புக்கு: savidhasasi@gmail.com