

கடந்த இரு அத்தியாயங்களில் செலவினங்களை குறைத்து சேமிப்பை அதிகரிக்கும் மினிமலிச வாழ்க்கை முறை குறித்து பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் அதன் இன்னொரு வடிவமான, ஜென் மினிமலிசம் குறித்து பார்ப்போம். உலகில் 100 வயதை கடந்த முதியவர்கள் அதிகமாக வாழும் நாடு ஜப்பான். அங்கு மக்களின் சராசரி ஆயுட்காலம் 80 வயதுக்கு மேல். ஜப்பானியர்கள் அதிக ஆயுட்காலத்தையும், குறைந்த இறப்பு விகிதத்தையும் கொண்டிருப்பதற்கு அவர்களது உணவு முறை, உடற்பயிற்சி மட்டுமே காரணம் அல்ல. தற்சார்பும், தன்னிறைவும் நிறைந்த பாரம்பரிய ஜென் மினிமலிச வாழ்க்கை முறையும் முக்கிய காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
3 முக்கிய மந்திரங்கள்: பௌத்தத்தின் ஒரு பிரிவான ஜென், ஒரு மதம் அல்ல. தத்துவம் அல்லது வாழ்க்கை முறை என புரிந்து கொள்ளலாம். ஜென் மினிமலிச வாழ்க்கை முறை ஆன்மிகத்துடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. மேற்கத்திய மினிமலிச முறையைபோல கவர்ச்சிகரமானது இல்லை. எளிமையும், ஆரோக்கியமும் அமைதியும் நிறைந்த நிறைவான வாழ்க்கை முறை ஆகும். ஜென் மினிமலிசத்தின் மூன்று முதன்மை அம்சங்கள், 1. மா (வெறுமை அல்லது வெற்றிடம்) 2. வாபி-சபி (இயற்கையின் நிறைகுறைகளை கண்டு இன்புறுதல்), 3. ஷிபுய் (எளிமையாக, நுட்பமாக வாழ்தல்). இவை கலை, வாழ்க்கை முறை, உணவு முறை, கட்டிடக்கலை, தனிநபர் நிதி மேலாண்மை பற்றியும் போதிக்கிறது.
பொருட்களில் இருந்து விடுபடல்: வீட்டில் தேவையற்ற பொருட்களை அடைத்து வைக்காமல், காலியான வெற்றிடத்தோடு வாழ முயல வேண்டும். இதன் மூலம் மனம் அமைதியில் தவழ்வதுடன் அதை வாங்குவதற்காக நிதி செலவினமும், பராமரிப்பு செலவினமும் இல்லாமல் போகும். வெற்றிடத்தில் வைக்கப்பட்ட ஒரு சாதாரண கல்லும் விலை மதிப்பற்ற கல்லை போன்று தோற்றமளிக்கும். பொருட்களுடன் மனிதர்களை கட்டிப்போட்டு விடுகிறது நுகர்வு கலாச்சாரம். ஆனால், ஜென் மினிமலிச முறை பொருட்களில் இருந்து விடுதலை பெற ஊக்குவிக்கிறது. அத்தியாவசியமானவற்றை மட்டுமே கொண்டிருந்தால் வாழ்க்கை எளிமையாகவும், சுத்தமாகவும், ஒழுக்கம் நிறைந்ததாகவும் இருக்கும் என போதிக்கிறது. இதன் மூலம் அமைதி நிறைந்த மகிழ்ச்சியான வாழ்க்கை பரிசாக கிடைக்கிறது.
பொருளாதார வாழ்க்கை முறை: நமது வாழ்க்கை முறைக்கும் பொருளாதார நிலைக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டு வரும்போது பொருளாதாரம் தானாக மேம்பாடு அடையும். நம் ஊர்களில் குடும்பமோ, கல்வி நிலையமோகூட பொருளாதார புரிதலை நமக்கு ஏற்படுத்துவதில்லை. ஆனால், ஜப்பானில் பொருளாதாரத்தையும், குடும்ப நிர்வாகத்தையும் உள்ளடக்கிய வாழ்க்கை முறை ஆன்மிகத்தின் வாயிலாகவே போதிக்கப்பட்டு விடுகின்றன. இதனால் அங்கு வாழ்க்கை முறை பொருளாதாரத்தையும் உள்வாங்கியதாக இருக்கிறது. வருமானத்தை பெருக்குதல், செலவினங்களை குறைத்தல், சிக்கனமாக வாழ்தல், சேமித்தல் ஆகியவை பல் துலக்குவது, குளிப்பதைப் போன்ற அனைவரின் அன்றாட பழக்க வழக்கமாக இருக்கிறது. இதனாலே ஜப்பானியர்கள் நிதிமேலாண்மையில் சிறந்தவர்களாக திகழ்கிறார்கள்.
ஜென் மினிமலிசத்தின் 10 கட்டளைகள்
வாழ்வில் ஜென் மினிமலிசத்தை கடைப்பிடிக்க, முக்கியமான 10 கட்டளைகளை பின்பற்ற சொல்கிறார்கள்.
1. முதலில் நிதி இலக்கை உருவாக்குங்கள்.
2. பட்ஜெட் போட்டு வாழுங்கள்
3. பட்டியலில் இருப்பதை மட்டும் வாங்குங்கள்
4. தள்ளுபடி, சலுகை போன்றவற்றுக்காக தேவையற்றதை வாங்காதீர்கள்
5. ஒரே நோக்கத்துக்காக ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களை வைத்துக் கொள்ளாதீர்கள்
6. ஒரு பொருளை 30 நாள் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் உடனே விற்று விடுங்கள்
7. தேவையை சுருக்கி கொள்ளுங்கள்
8. உங்களுக்கு தேவையானவற்றை நீங்களே உற்பத்தி செய்யுங்கள்
9. வருமானத்தில் 30 சதவீதம் சேமியுங்கள்
10. புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள்
ஜென் மினிமலிசம் பழகலாமா?
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in