

திருநெல்வேலி மாவட்டம், சிவசைலம் எனும் இடத்தில் ஆதரவற்ற பெண்களுக்கான இல்லம் அமைத்தார் டாக்டர் டி.எஸ்.செளந்திரம். நூற்றுக்கணக்கான ஆதரவற்ற பெண்களுக்கு அடைக்கலம் தரும் கூடாக அது உருவெடுத்தது. தேவதாசி முறையில் இருந்து தப்பித்து வெளியேறிய பெண்களுக்கான பிரத்யேக இல்லமாகவும் மாறியது. அவர்களுக்கு கல்வியையும், தொழிலையும் அமைத்து உதவியது என்பதை கடந்த செவ்வாய்க்கிழமை பார்த்தோம். அவரைப் பற்றி கூடுதலாக தற்போது பார்க்கலாம்.
டாக்டர் டி.எஸ்.செளந்திரத்தின் வாழ்வில் நிகழ்ந்த துன்பத்தின் நினைவாகவோ என்னவோ, பெண்களின் திருமண வயதை பதினெட்டாக உயர்த்தும் சட்டத்தை நிறைவேற்ற முன் நின்றார் டாக்டர் சவுந்திரம். தொடர்ந்து 1962-ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில் கல்வித் துறையின் துணை அமைச்சராகப் பொறுப்பேற்று, இலவச ஆரம்பக் கல்வியை நாடெங்கும் கொண்டுவர வழிவகுத்தார் டாக்டர் சவுந்திரம். செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தபோதும் எப்போதும் கதராடை மட்டுமே உடுத்தி எளிமையின் உருவமாகத் திகழ்ந்த டாக்டர் சவுந்திரம், தனது பையில் 3 உடைகள் வைத்திருப்பாராம்.
ஒன்று உடுத்திக் கொள்ள, ஒன்று துவைக்க, மற்றொன்று பரிசளிக்க. அதேபோல அவரது வழிகாட்டிகள் மூன்று என்று குறிப்பிட்ட அவர், முதலாமவர் தனது தாய், இரண்டாமவர் மகாத்மா, மூன்றாமவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என்று கூறியுள்ளார். அவரது சேவைகளைப் பாராட்டி, 1962-ல் அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கியும், 2005-ல் சிறப்புத் தபால்தலை வெளியிட்டும் அவரை சிறப்பித்தது இந்திய அரசு.
வாழ்நாளின் இறுதிவரை காந்தியக் கொள்கைகளோடு வாழ்ந்ததுடன், காந்திகிராமம் ஓங்கி உயர்ந்திட பாடுபட்ட டாக்டர் டி.எஸ். சவுந்திரம், 1984 ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி உடல்நலக் குறைவால் உயிர் நீத்தார். திண்டுக்கல் என்றால் பூட்டையும், சுவைமிக்க பிரியாணியையும் தாண்டி, சாதனைகள் படைக்கும் காந்திகிராமம் நினைவில் வரும்படி செய்த டாக்டர் சவுந்திரம் அதற்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.
(மகிமை தொடரும்)
கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்.
தொடர்புக்கு: savidhasasi@gmail.com