அறிவியல்ஸ்கோப் - 12: பெயர் வைத்துப் பெயர் பெற்றவர்

அறிவியல்ஸ்கோப் - 12: பெயர் வைத்துப் பெயர் பெற்றவர்
Updated on
2 min read

பாரீசிலுள்ள ஒரு நிறுவனத்தில் ஒரு பேரறிஞர் அரிய வகைத் தாவரங்கள் குறித்து உரையாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே தமக்கு அறிமுகமாகாத ஒரு தாவரத்தின் மாதிரியினைக் காட்டுகிறார். வேறு என்ன சொல்லியிருப்பார்? இதனுடைய பெயர் எனக்கு தெரியவில்லை. இப்படி சொல்லும்போது தெரிந்த யாராவது சொல்லி அதனை அறிந்து கொள்ளமாட்டோமா? என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. அவருடைய நல்வாய்ப்பு. அவருடைய உரையாடலை செவிமடுத்துகொண்டிருந்த ஒருவர் அந்த தாவரத்தின் பெயரைச் சொல்கிறார். பெயர் மட்டுமல்ல அது எந்த குடும்பத்தைச் சார்ந்தது என்றும்கூட விளக்குகிறார்.

உரையாடிக் கொண்டிருந்த விஞ்ஞானி அவருக்கு அறிமுகமாகாதவர். எனவே ஒரு சந்தேகத்தோடு நீங்கள் __________? என்கிறார். ஆம் நான்தான் _____ என்கிறார்.

யார் இவர்கள்? உரையாற்றியவர் பெர்னார்டு டி ஜூசயே (Bernar de Jussieu) என்ற அறிஞர், அவருக்கு உதவியவர் கார்ல் லின்னேயஸ் ( 1707-1778). ஸ்வீடன் நாட்டிலுள்ள ராஷல்ட் கிராமத்தில் பிறந்தவர். இவரது தந்தையார் ஒரு பாதிரியாரும் தாவரவியலாளரும் ஆவார். தந்தையிடமே ஒட்டிக்கொண்டிருந்த கார்ல் லின்னேயசும் தாவரங்கள் மீது பேரார்வம் கொண்டு பல செடி கொடிகளையும் வளர்த்தார். இவரது அறிவை மெச்சிய பலரும் இவரை மருத்துவம் படிக்க தூண்டினர். இவர் மருத்துவமும் பயின்றார். அதனோடு தாவரவியலும் பயின்றார்.

இரண்டு துறைகளிலும் ஆர்வம் காட்டிய லின்னேயஸ் 1735-ல் மருத்துவப் படிப்பையும் முடித்தார். அதே ஆண்டில் Species plantrum என்ற நூலையும் எழுதினார். இந்நூலில் தாவரங்களுக்கு எவ்வாறு வகைப்படுத்திப் பெயரிடுவது என விளக்கியிருந்தார். தமது படிப்பை இவர் முடித்த கையோடு அவர் பயின்ற உப்சாலா பல்கலையிலேயே இவருக்கு தாவரவியல் துறை விரிவுரையாளராகப் பணியும் கிட்டியது. தாவரங்கள் குறித்து அறிவியல் பூர்வமான ஆய்வுகளில் ஈடுபடவும் இவருக்கு நிதி உதவி கிடைத்தது. இதனைக் கொண்டு நிறைய பயணங்களை மேற்கொண்டார். தாவரங்கள், பறவைகள், விலங்குகள் இவற்றோடு புவியியல் குறித்தும் ஆராயும் ஆர்வம் ஏற்பட புவியியலையும் பயின்றார்.

தமது அடுத்த படைப்பாக System Nature என்ற நூலில் விலங்கினங்களை எவ்வாறு வகைப்படுத்திப் பெயரிடுவது எனவும் தெள்ளத் தெளிவாக விளக்கினார். இவர் எல்லாவற்றுக்கும் பெயர் வைத்துக் கொண்டிருந்தால் உடனிருப்போர் சும்மாயிருப்பார்களா? சரி ஒவ்வொரு தாவரத்தையும் விலங்கினத்தையும் பற்றிஆராய்ந்தால் பலனுண்டு. இவ்வாறு ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்தால் என்ன பயன் என்றனர். பின்னாளில் டார்வின் போன்றோர் செய்யப்போகும் ஆராய்ச்சிகளுக்கெல்லாம் இது அடிப்படையாக இருக்கும் என்று அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். நம்மூரில் இருக்கும் மாங்காயை‘மாங்கிபெரா இண்டிகா’ எனவும் அரிசியை ‘ஒரைசா சடைவ’ எனவும் உலகம்முழுக்க ஒரே பெயரில் அழைக்கும்போது உலகளாவிய வெவ்வேறு மொழி ஆராய்ச்சியாளர்களுக்கு எவ்வளவு பயனாக இருக்கும். இதுதான் இவருடைய எண்ணமும்கூட. இவ்வாறு உழைத்தோராலேயே அறிவியல் அடுத்தடுத்தகட்டங்களுக்கு நகர்ந்து வருகிறது.

பின்னாளில் லின்னேயசுக்கு ஆர்ம்ஸ்டர்டாம் நகரைச் சேர்ந்த ஜார்ஜ் கிளிஃபோர்டு என்ற செல்வந்தரின் நட்பு கிடைத்தது. அந்த செல்வந்தர் இவரை தமது மருத்துவராக நியமித்துக் கொண்டார். அதோடு மட்டுமல்லாது தனது பெரிய பண்ணையிலுள்ள தாவரங்களையும் விலங்குகளையும் அடையாளம் கண்டுசொல்லும் பொறுப்பையும் ஒப்படைத்தார். கரும்பு தின்னக் கூலியா. இவருக்கு மருத்துவர் பணியும் கிடைத்தது. கூடவே தமது ஆராய்ச்சியினையும் தொடர வாய்ப்பு கிடைத்தது. அவர் ஒரு முறை “ஒரு பொருளின் பெயர் உங்களுக்குத் தெரியவில்லையென்றால், அதனைப் பற்றிய அறிவையும் நீங்கள் இழக்கிறீர்கள்” என்றார். பொருளை நேசித்து மனிதர்களை பயன்படுத்திக்கொள்ளும் உலகில் அவர் வாழவில்லை போலும். ஒவ்வொரு பொருளையும் நேசித்துப் பெயர் சூட்டி மறைந்திருக்கிறார் அந்த மாமேதை.

கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

தொடர்புக்கு: thulirmadhavan@gmail.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in