

என்ன பெயர் இது ? என்று தானே பார்க்கறீங்க. அதற்குத்தான் குழந்தையை ஐந்து வயதில் பள்ளி சேர்க்கும் முன், உன் பெயர் பிடித்திருக்கிறதா? என்று கேட்டு, குழந்தைக்கு பிடித்த பெயருடன் பள்ளியில் சேர்த்துவிடுங்களேன் என்கிறாள் மந்தாகினி. மண்டாகினி என்று ஆங்கில ஆசிரியர் அழைக்கும்போதும், மண்டூ என்று பெயரைச் சுருக்கி அண்ணன்கள் அழைக்கும்போதும் மந்தாகினி கோபத்தின் உச்சத்தில் இருப்பாள். மந்தாகினிக்கு அவளுடைய குடும்ப உறுப்பினர்கள் மேல் சில மாற்றுக்கருத்துகள் உண்டு.
மந்தாகினிக்கு புத்தக வாசிப்பு மிகவும் பிடிக்கும். அலமாரியில் அடுக்கியிருக்கும் புத்தகங்களில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து திண்ணையில் உட்கார்ந்து படிக்கத் தொடங்குவாள். உடனேயே அவளுடைய மாமா, "இந்த வயதில் எதற்குகதைப்புத்தகம் வாசிக்கிறாய்? பாடப்புத்தகம்வாசித்தால் போதும்" என்பார். திண்ணையில் அமர்ந்து புத்தகம் படிப்பதற்கு அம்மாவிடம் பயங்கர எதிர்ப்பு. அண்ணன்களும் அப்பாவும் மட்டும் நாளெல்லாம் திண்ணையில் உட்காரலாமாம்.
தன்னுடைய வசதிக்கு ஏற்ப முடிவெட்டிக் கொள்வதையோ, உடைஅணிவதையோ, ஏற்றுக்கொள்ளாத தாயிடம் மந்தாகினிக்கு மிகுந்த வருத்தம். மந்தாகினியின் அக்காள் அமிர்தா, ஒரு நாளில் நான்கு மணிநேரம் வீட்டுப்பாடம் படிப்பாள். அதற்காக நானும் அதேபோல வாசிக்க வேண்டும் என்று சொல்லும் அம்மாவிடம், தனக்கு பள்ளிப்பாடத்தைப் படிக்க அரைமணி நேரம் போதுமானது என்பாள்.
நான் அவள் இல்லைள்: வகுப்பில் ஒருமுறை வீட்டுப்பாடம் செய்ய வில்லை என்று வகுப்பாசிரியர் கையில் இரண்டு பிரம்படிகளை தந்தார். மறுநாள் யாரெல்லாம் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்றபோது தலைமையாசிரியரின் மகளும் எழவே, பத்து நிமிடம் தரேன். எழுதி முடிங்க என்ற ஆசிரியரை நோக்கி, மந்தாகினி இதே பத்து நிமிடத்தை நேற்று எங்களுக்கும் கொடுத்திருக்கலாமே? ஏன் வீட்டுப்பாடம் செய்யலன்னு காரணம் கேட்டிருக்கலாமே? இன்று மட்டும் அடிக்காம ஏன் இருக்கீங்க என்கிறாள். உண்மையைப் பேசியதற்கு பரிசு தர, தலைமையாசிரியர் அழைக்கிறார். நீண்ட அறிவுரைகளைக் கொடுத்துவிட்டு, இறுதியாக உன் அக்கா எவ்வளவு அமைதியாக இருப்பாள்? Be like her என்றுஅறிவுரை கூறுகிறார். நான் அவளாகிவிட் டால்? பிறகு நான் எப்படி இருக்க முடியும். மந்தாகினி இல்லாமல் போவதா? என்று கொதித்தெழுகிறாள்.
சுயமரியாதை: ஒருமுறை அறிவியல் இயக்கத்தின் துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் மந்தாகினிக்கு ஒரு விழாவை நடத்தி முடிக்க சில பொருட்கள் தேவை என்று, தன் அண்ணனின் நண்பன் ராஜேஷூடன் பைக்கில் வீட்டிற்கு வந்து பொருட்களை கொண்டு செல்கிறாள். ஆண்மகன் ஒருவனுடன் தனியாக பயணம் செய்ததற்கு அம்மா வருத்தப்படுவதுடன், அப்பாவிடமும் போட்டுக் கொடுக்க, மந்தாகினி அப்பாவிடம், வாகனம் எதற்கு? வேகமான பயணத்தை மேற்கொள்ளத்தானே. எனக்கு அவசரமாக தேவைப்பட்ட பொருட்களை கொண்டுசெல்ல வண்டியை பயன்படுத்திக் கொண்டது தவறா? என்று வாதிடுகிறாள். தோட்டத்து அணிலுக்கு இன்க்பில்லரில் பாலூட்டுவது, தொழுவத்தில் உள்ள மாடு, கன்றுக்குட்டியுடன் விளையாடுவது, தென்னைமரத்தில் ஏறித் தேங்காய் பறிப்பது, முல்லைப்பூ சரம் தொடுப்பது, என சந்தோஷமாக வலம் வரும் மந்தாகினி சுயமரியாதை யும், சுயசிந்தனையும் கொண்டவளாக நம் முன்னே நிற்கிறாள்.
ஏன் இந்த பாகுபாடு? - குழந்தை வளர்ப்பு என்பது பெருங்கலை. பெற்றோர் பெரும்பாலும் தவறான முறை களையே பின்பற்றுகின்றனர். மந்தாகினி எந்த விதிமுறைக்கும் கட்டுப்பட மறுக் கிறாள். சமத்துவம் பேசுகிறாள். பெண் குழந்தைகள் சிறுவயதில் பெரியவர்களின் சொல் கேளாமல் இருப்பதைக் கூட, சிறிதளவு ஏற்றுக்கொள்ளும் இந்தச் சமூகம், வளர்ந்து பெரியவளான பின்பும் அனுமதிக்குமா? செய்ய விரும்பும் எல்லாச் செயலுக்கும் வீட்டுப் பெரியவர்களின் அனுமதியை பெறவேண்டும் என்று சொல் லும் குடும்பத்தினர், ஆண் குழந்தைகளிடம் ஏன் அவ்வாறு சொல்வதில்லை?
அனுமதி மறுக்கும் சமூகம்: பெண் குழந்தைகள் தங்களுடைய உணர்வுகளை, மகிழ்ச்சியை கோபத்தை, அழுகையை, கவலையை, தங்கள் மனக் கருத்துகளை வெளிப்படுத்தக் கூட அனுமதி அற்றவர்களாகவே இருக்க இப்போது வரை சமூகம் வற்புறுத்துகிறது. இந்த சமத்துவ உணர்வை பெறுவதற்குதானே அனைவருக்கும் கல்வி தேவைப்படுகிறது? கேரள மாவட்டத்தைச் சேர்ந்த விமலா மேனனின் மலையாளப் புத்தகத்தின் தமிழாக்கம் அம்பிகா நடராஜன். விமலா மேனன் 1970-களிலேயே குழந்தைகளுக்கான புத்தகங்கள் எழுதியுள்ளார். 1996-ல் சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கிறார். பல பதிப்புகளை கடந்திருக்கும் இந்தப் புத்தகத்திற்கும் ஸ்டேட் பேங்க் ஆப் திருவிதாங்கூர் விருது கிடைத்திருக்கிறது.
கட்டுரையாளர்: குழந்தைநேய செயற்பாட்டாளர்,
ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம்.
தொடர்பு: udhayalakshmir@gmail.com