

இயற்கையிடம் ஏராளமான கணிதம் இருக்கிறது. ஆனால் அதை உள்வாங்க நெடுங்காலம் எடுத்துக்கொண்டது. இன்றுகூட நாம் எல்லாவற்றையும் கண்டுபிடித்துவிட்டோமா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இயற்கையின் விசித்திரங்களை நெடுங்காலமாகக் கற்றுக்கொண்டேதான் இருக்கின்றோம். நதிகள் மனித வாழ்வில் பெரும் அங்கம் வகிக்கின்றன. எல்லா நாகரிகங்களும் ஏதோ ஒரு நதியைக் கொண்டே இருக்கும். நதி இருந்தால்தான் நாகரிகம். ஹரப்பா, மொகஞ்சதாரோ, சிந்து, கீழடி எல்லா நாகரி கத்தின் பின்னும் நதி இருந்துள்ளது.
காலக்கணக்கீடு: நதி மனிதனின் கணிதக் கண்டுபிடிப்பு களுக்கு வித்திட்டது. நதியின் அருகே மனிதன் நகரத்தை அமைக்கின்றான். விவசாயம் செய்யத் தொடங்குகின்றான். ஆனால் எந்த நேரத்தில் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வருகின்றது, எந்த நேரத்தில் தண்ணீர் வருவது குறைவு எனக் கணக்கிடுகின்றான். அங்குதான் பெரிய சிக்கல் வருகின்றது. இப்போது நாம் எளிதாக ஆண்டு, மாதம், வாரம், நாள், மணி எனச் சொல்லி விடுகின்றோம். இவை எல்லாம் அப்போது உருவாகவில்லை. பூமி தட்டையாக இருக்கும் என்றுதானே சில நூற்றாண்டுகள் முன்னர் வரை நினைத்திருந்தோம்.
நதியின் போக்கை அறியவே காலத்தைக் கணக்கிட ஆரம்பிக்கின்றோம். அப்போது சூரியன், நிலவு, நட்சத்திரங்கள் ஆகிய மூன்றும்தான் காலத்தைக் கணக்கிட உதவுகின்றன. சூரியன் தொடுவானத்தில் உதயமாகி, உச்சிக்கு வந்து, மீண்டும் எதிர்த்திசையில் இருக்கும் தொடுவானத்தில் மறைந்து, மீண்டும் முதல் நாள்போல தொடுவானத்தில் உதயமாவதைப் பார்க்க ஆரம்பிக்கின்றோம். அதை ஒரு நாள் எனக் குறிக்கிறோம்.
இரவுகளில் நிலவு முழு நிலவாகத் தோன்றி, பின்னர் தேய்ந்து, காணாமல் போய் மீண்டும் வளர்ந்து முழு நிலவாகக் காட்சி தந்தது. தந்துகொண்டு இருக்கின்றது. தரும். இதைத் தோராயமாக ஒரு மாதம் எனக் கணக்கிட்டோம். உலகின் வெவ்வேறு பகுதிகளிலும் காலத்தை அளக்க ஒவ்வொரு வழிமுறையைப் பின்பற்றினார்கள். கடைசியாக நாம் இப்போது பின்பற்றும் கிரிகேரியன் நாட்காட்டிக்கு வந்து நிற்கின்றோம். இதை நோக்கி ஓட வைத்ததில் நதிகளுக்குப் பெரும்பங்கு உண்டு
கணித சூத்திரங்கள்: இது ஒரு பக்கம் இருக்க, நகரம் வளர் கின்றது. மன்னர்கள் வருகின்றார்கள். நகரம் நதிகளுக்கு ஏற்ப கட்டமைக்கப்படுகிறது. விவசாயம் செழிக்கின்றது. மன்னர் நாட்டை எப்படி நிர்வகிப்பது? வரி. எப்படி வரி விதிப்பது? ஆளுக்கு எவ்வளவு நிலம் வைத்திருக் கின்றார்களோ அதற்கு ஏற்ப. கூப்பிடுங்க சர்வேயர்களை. இவர்கள்தான் நிலங்களை அளக்கின் றார்கள். கிழக்கே 249 அடி, மேற்கே 299 அடி, வடக்கே 234 அடி, தெற்கே 140 அடி. இதை வரைபடத்தில் போடுகின்றார்கள். பரப்பளவு கண்டுபிடித்தால்தானே அதற்கு ஏற்ப வரியைக் கேட்க முடியும்... நிலங்கள் கச்சிதமாக செவ்வகம், சதுரம் அல்லது முக்கோண வடிவில் இல்லை; முக்கோணமாக இருந்தாலும் அதன் ஒவ்வொரு பக்கமும் வேறு வேறு அளவில் இருந்தன. சிக்கல், சிக்கல், சிக்கல்... அப்போதுதான் அளத்தலில் தீவிரமான கண்டுபிடிப்புகள் உருவா கின. பரப்பளவை கணக்கிட சூத்திரங்கள் உருவாகின. இதுவே வட்டமாக இருந்தால்?
நாம் இன்று எளிமையாகப் பயன்படுத்தும் ½ X b X h சூத்திரத்தை அடைய பல அறிஞர்களும், சர்வேயர்களும் பல நூறு ஆண்டுகள் சிரமப் பட்டார்கள். மெல்ல மெல்ல நகர்ந்தார்கள். மெல்ல மெல்ல வேறுவேறு வடிவங்களுக்கான பரப்பளவைக் கண்டுபிடித்தனர். கணிதத்தில் பெரிய துறையே உருவானது. இதில் முக்கியமாக அவை மனிதனின் தினசரி வாழ்வில் அங்கம் வகிக்கத் தொடங்கின.கணிதத்தை வசப்படுத்தியவர்களும் தேர்ச்சி பெற்றவர்களும் புரிந்து கொண்டவர்களும் செழுமையாக வாழத் தொடங்கினர். இப்போதும் அப்படியே வாழ்கின்றனர். இது எல்லாம் நடந்தாலும் நதி பாட்டுக்கு இன்னும் ஓடிக்கொண்டே இருக்கு... வேறுவேறு வடிவங்களில், வேறுவேறு பெயர்களில். அது சரி, கதை கேட்கறதுன்னா உம்கொட்டி உட்கார்ந்திடுவீங்களே...!
(தொடரும்)
கட்டுரையாளர் சிறார் எழுத்தாளர்.
‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’
ஆகியவை இவரது சமீபத்திய நூல்கள்.
தொடர்புக்கு: umanaths@gmail.com