

பருவநிலைப் போராளி - “பக்கத்து வகுப்புக்குப் போயிட்டு வாறேன். எல்லாரும் கையைக் கட்டிக்கிட்டு பேசாம இருக்கனும், சரியா? மதுரன்! பேசுறவங்க பெயர்கள் எழுதி வை” என்று சொல்லிச் சென்றார் 5-ம் வகுப்பு ஆசிரியர். எல்லாரும் கைகளைக் கட்டினார்கள். “யாருக்கெல்லாம் கைவலிக்கிது?” என்று மதுரன் கேட்டான். எல்லாரும் கை உயர்த்தினார்கள். “சார் வருகிற வரை, உங்களுக்குப் பிடிச்ச ஒரு படத்தை வரையலாம். பேசக்கூடாது. சரின்னா, கை கட்ட வேணாம்” என்றான். எல்லோரும் வரையத் தொடங்கினார்கள். ஆசிரியர் வந்தார். மாணவர்கள் அமைதியாக இருப்பதையும், படம் வரைவதையும் பார்த்தார். புன்னகைத்தார். எல்லோரையும் ஒருங்கிணைத்து அமைதியாக பார்த்துக்கொண்ட மதுரனைப் பாராட்டி ஒரு கதை சொன்னார்.
பறவையின் மரணம்: 2000-ம் ஆண்டு, ஜுன் மாதம் 5-ம் தேதி, உலக சுற்றுச்சூழல் நாளன்று துபாயில் பிறந்தார் கெஹ்கஷன் பாசு. இவரின் பெற்றோர் இந்திய வம்சாவழியினர். 7 வயது நடந்தபோது, இறந்த பறவை குறித்த ஒரு செய்தியை தொலைக்காட்சியில் கெஹ்கஷன் பார்த்தார். அந்தப் பறவையின் வயிறு முழுவதும் நெகிழி குப்பைகள் நிறைந்திருந்தன. பறவையின் கண்கள் கெஹ்கஷனிடம் உதவி கேட்பதுபோல் இருந்தது, ஏதாவது செய்ய வேண்டும் என கெஹ்கஷன் நினைத்தார். முடிவெடுக்க இயலாமல் தவித்தார். அந்நேரத்தில், சூழலியல் போராளி ராபர்ட்ஸ்வான், “நம் உலகத்துக்கு இருக்கின்ற மிகப்பெரிய அச்சுறுத்தல் யாதென்றால், வேறுயாராவது வந்து இவ்வுலகைக் காப்பாற்று வார்கள் என்று நாம் நம்புவதுதான்” என்று பேசியதைக் கேட்டார். இது, கெஹ்கஷனுக்கு ஒரு தெளிவைக் கொடுத்தது. தன்னுடைய 8-வது பிறந்த நாளில், முதன் முதலாக ஒருமரம் நட்டார். அருகாமையில் இருந்த கடைகளுக்குச் சென்று, நெகிழிகளைத் தவிர்க்க வும், மறுசுழற்சிக்கு அனுப்பவும், மரங்கள் நடவும் கேட்டுக் கொண்டார்.
போராளியின் பயணம்: 2011-ல், இந்தோனேசியாவில் நடைபெற்ற TUNZA குழந்தைகள் மற்றும் இளையோர் மாநாட்டுக்கு உரையாற்ற கெஹ்கஷனை அழைத்தார்கள். TUNZA என்றால் வடக்கு ஆப்பிரிக்க கிஸ்வாஹிலி மொழியில், “கருணை யுடன் நடத்துங்கள்” என்று பொருள். 2012-ல், ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களுக்கு, உலகளாவிய குழந்தைகள் மற்றும் இளையோரின் ஒருங்கிணைப் பாளராகத் தேர்வு செய்யப்பட்டார். இப்பொறுப்புக்கு மிகச் சிறிய வயதில் தேர்வு செய்யப்பட்டவர் கெஹ்கஷன். ஐ.நா.வில், “பெரியவர் களாகிய உங்களுக்கு இணையாக, குழந்தைகளாகிய எங்களாலும் நீடித்த வளர்ச்சித் திட்டத்தில் செயலாற்ற முடியும்” என்று பேசினார்.
12 வயதில், சிறுவர் சிறுமிகளுடன் சேர்ந்து Green Hope Foundation தொடங்கினார். “நாங்கள் குழந்தைகள். நாங்களே எதிர்காலம், நாங்களே மாற்றத்தின் கருவிகள்” என்றார். இந்த அமைப்பு, “குப்பை மறுசுழற்சி, கடற்கரையை சுத்தம் செய்தல், மாங்குரோவ் காடுகள் நடுதல், கற்பித்தல், விழிப்புணர்வு கொடுத்தல் ஆகிய பணிகளைச் செய்கிறது. உலக அளவில் 26 நாடுகளில் செயல்படுகிறது. கெஹ்கஷன், The Tree of Hope எனும்தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். Environment Academies எனும் செயல்வழி கருத்தரங்குகள் வழியாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுகிறார். 2016-ம் ஆண்டு, சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருது கெஹ்கஷன் பாசுவுக்கு கிடைத்தது.
கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர்.
தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com