

மலை போல செல்வம் செல்லக்கண்ணுக்கு இருந்தது. அதனால் நண்பர்கள் கூட்டம் அவனைச் சுற்றி இருந்தார்கள். நந்தன் மட்டும் நெருங்கிய நண்பன். அடிக்கடி தன் பிள்ளைகள் படிப்பு செலவிற்காக பணம் வாங்குவான். செல்லக்கண்ணு யார் வந்து உதவி கேட்டாலும் மறுக்காமல் அள்ளி வழங்குவான். பெரிய படிப்பு இல்லாவிட்டாலும் பெரிய மனசு அவனுக்கு என்று ஊரே புகழாரம் சூட்டியது.
திடீரென்று ஒருநாள் செல்லக்கண்ணு தங்கை அண்ணா என் கணவர் வியாபாரத்தில் பணத்தை இழந்துவிட்டதாக கண்ணீர்விட்டாள். செல்லக்கண்ணும் மனம் இரங்கி சொத்தை எல்லாம் அள்ளிக் கொடுத்தான். மனைவியோ இப்படி எல்லாருக்கும் அள்ளி வழங்கிவிட்டு நம்ம பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்காமல் விட்டுவிடப் போறீங்க என்று வருத்தபடுவாள்.
அதற்கு செல்லக்கண்ணு, கவலைப்படாதே என் நண்பனுக்கும் தங்கைக்கும் தானே கொடுத்தேன் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். அன்று மாலையே நெஞ்சு வலிக்கிறதே என்று சொன்னவாறு சாய்ந்துவிட்டான். மனைவியோ ஒன்றும்புரியாமல் அலமாரியை திறந்து பார்த்தாள் பணமே இல்லை. நந்தனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது வெளியூரில் இருக்கிறேன். வரமுடியாது என்று சொன்னதோடு இல்லாமல் மகனை கல்லூரியில் சேர்த்ததால் பணம் இல்லை என்று கையை விரித்துவிட்டார். கலங்கிய கண்களோடு தன் சேமிப்பில் உள்ள பணத்தை வைத்து மருத்துவமனையில் சேர்த்து ஒருவழியாக குணமாக்கி வீட்டிற்கு அழைத்து வந்தாள்.
நீண்ட நாட்களுக்கு பிறகு வந்த நந்தன் உனக்கு உதவ முடிய வில்லை என்று வருத்தப்பட்டான். அதைக்கேட்டு செல்லக்கண்ணு நான் படிக்காததால் தான் உலகத்தை புரிந்து கொள்ளாமல் என் செல்வத்தை எல்லாம் அழித்துவிட்டேன். பணம் என்றும் அழியக்கூடியது என்பதையும் உணர்ந்து கொண்டேன். என் மகன்களை நன்கு படிக்க வைத்து கல்வி செல்வத்தை கொடுத்து மற்றவர்களுக்கும் கல்வியை வழங்கப் போகிறேன். அதுதான் அழியாத செல்வம். அது ஒன்றே நம்மை ஏமாற்றவும் முடியாது என்று பளிச்சினு சொன்னதைக் கேட்டு நந்தனுக்கு ஒரு கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது. அழியாத செல்வம் ஒன்று உண்டு என்றால் அது கல்வி தான் என்பதை உணர்த்தும் குறளாக
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை. - குறள்: 400
கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்