

பொறியியல் படிப்பது என்று முடிவானால் அதில் என்ன படிப்பது என்பதற்கு இணையாக எங்கே படிப்பது என்பதும் முக்கியம். இந்தியாவில் சர்வதேச தரத்திலான பொறியியல் உயர்கல்வியை வழங்கும் நிறுவனங்களில் பிர்லாவும் ஒன்று. பி.டெக்., பொறியியல் மட்டுமன்றி பி.ஃபார்ம்., மற்றும் ஒருங்கிணைந்த முதுநிலை படிப்பான எம்.எஸ்சி., ஆகியவற்றில் சேர்வதற்கு பிட்சாட் (BITSAT - Birla Institute of Technology and Science Admission Test) நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.
பொறியியலை பொறுத்தவரை பிலானியில் செயல்படும் பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனம் மற்றும் அதன் கோவா, ஹைதராபாத் வளாக நிறுவனங்களில் சேர இந்த நுழைவுத் தேர்வு உதவும். மேலும் இந்த நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை அங்கீகரிக்கும் இதர பொறியியல் கல்வி நிறுவனங்களிலும் சேர வாய்ப்புண்டு.
பதிவு செய்வது, விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்தல், சான்றிதழ் நகல் தரவேற்றம், கட்டணம் செலுத்துதல் எனவிண்ணப்ப நடைமுறைகளின் அனைத்துநிலைகளும் ஆன்லைன் வாயிலாகவே நடைபெறுகின்றன. www.bitsadmission.com என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண் ஆகியவற்றை பதிவு செய்த பின்னர் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுகிறது. கேட்கப்பட்ட விபரங்களை முறையாக பூர்த்தி செய்ததும், புகைப்படம், கையெழுத்து மற்றும் சான்றிதழ் நகல்களை தரவேற்ற வேண்டும். தொடர்ந்து உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்.
தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் செயல்படும். விண்ணப்பிக்கும்போதே இந்த மையங்களில் ஏதேனும் மூன்றினை முன்னுரிமை அடிப்படையில் பூர்த்தி செய்யும் வசதியுண்டு. மாணவர்களுக்கு ரூ.3,400, மாணவிகளுக்கு ரூ.2,900 என விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 படித்திருக்க வேண்டும்: இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியவற்றை பாடங்களாகக் கொண்டு பிளஸ் 2 முடித்தவர்கள் மற்றும் தற்போது பிளஸ் 2 தேர்வெழுத உள்ள மாணவர்கள் ஆகியோர் இந்த நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மதிப்பெண்களில் ஒட்டுமொத்தமாக 75 சதவீதமும், ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 60 சதவீதமும் பெற்றிருப்போர் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவார்கள். விண்ணப்பிக்க வயது வரம்பில்லை என்றபோதும், தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதுவோர் மற்றும் எழுதியோர் மட்டுமே இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாதிரி தேர்வும் எழுதலாம்: இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை உள்ளடக்கிய நுழைவுத்தேர்வுக்கான NCERT பாடத்திட்டம் மற்றும் கூடுதல் விபரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். 3 மணி நேர தேர்வின் வினாக்கள் ஆங்கிலத்தில் அமைந்திருக்கும். சரியான விடையை தேர்ந்தெடுக்கும்படியான 150 வினாக்கள், 4 பிரிவுகளில் கேட்கப்படும். தேர்வர்கள் தங்கள் தனித்திறமையை பதிவு செய்யும் வகையில், 150 வினாக்களுக்கும் விடையளித்த மாணவர்கள் மட்டும் கூடுதலாக 12 வினாக்களுக்கு விடையளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பாக இணையதளம் வாயிலான, ஆன்லைன் மாதிரித் தேர்வு எழுதவும் வசதி உண்டு. சரியான விடை ஒவ்வொன்றுக்கும் தலா 3 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான விடைக்கு தலா 1 மதிப்பெண் கழிக்கப்படும்.
தேர்வெழுதி முடித்ததுமே தேர்வர்கள் தங்களது அடைவினை ஆன்லைனில் தெரிந்துகொள்ளும் வசதி உண்டு. இதுதவிர திட்டவட்டமான தேர்வு முடிவாக, அதிகாரபூர்வமான அறிவிப்பு ஒன்றும் பின்னர் வெளியாகும். கட்-ஆஃப் மதிப்பெண்களின் அடிப்படையிலான, ஆன்லைன் கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கும். நடப்பாண்டு ஜூனில் பிட்சாட் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப நடைமுறைகள் தொடங்கியதில் தற்போது கலந்தாய்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
என்சிஇஆர்டி-யை புரட்டுங்கள்! - கீழ் வகுப்புகள் முதலே மாணவர்கள் தங்களது வழக்கமான பாடத்திட்டத்துடன், என்சிஇஆர்டி பாடத்திட்டத்தின் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களிலும் கவனம் செலுத்தலாம். கூடுதலாக ஆங்கில பாடத்திலும் திறன்களை வளர்த்துக் கொள்வது நல்லது. ஐஐடி, என்ஐடி பொறியியல் சேர்க்கைக்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், அவற்றுக்கு இணையான பிட்சாட் நுழைவுத் தேர்வுக்கான தயாரிப்புகளையும் சேர்த்துக் கொள்ளலாம். - கட்டுரையாளர் தொடர்புக்கு: leninsuman4k@gmail.com