

நம்மை நாம் அறிந்து, பிறரோடு ஒத்துணரும்போது என்ன நிகழும் என்ற வினாவோடு வகுப்பைத் தொடங்கினார் ஆசிரியர் எழில். வகுப்பில் ஒரு நிமிடம் அமைதி நிலவியது. எல்லோருடனும் நன்கு பழகலாம் என்றான் அருளினியன் மெல்லிய குரலில். அப்படிப் பழகும்போது அவர்களோடு நமக்கு என்ன ஏற்படும் என்று வினவினார் ஆசிரியர் எழில். ம்… ம்… ம்… உறவு என்றான் அருளினியன் சிறிது சிந்தனைக்குப் பிறகு. அருமை. சரியாகச் சொன்னாய் என்று அவனைப் பாராட்டினார் எழில்.
உறவு என்றால் என்ன? - உறவு என்றால் என்ன என்று வினவினாள் பாத்திமா. மனிதர்களுக்கு இடையே நிலவும் தொடர்பு என்றான் காதர். அந்தத் தொடர்பு எதன் அடிப்படையில் ஏற்படுகிறது என்று கேள்வி எழுப்பினான் சாமுவேல். உணர்வின் அடிப்படையில் என்றாள் கயல்விழி. ஒருவர் மற்றவர்களோடு தொடர்பே இல்லாமல் வாழ முடியாதா என்று வினவி நமட்டுச் சிரிப்புச் சிரித்தான் முகில். யாரும் தனித்து வாழ முடியாது. வாழ்வதற்குத் தேவையான பலவற்றுக்கும் நாம் பிறரைச் சார்ந்தே இருக்க வேண்டியதாக இருக்கிறது என்றாள் மணிமேகலை.
நீங்கள் கூறியது அனைத்தும் சரி என்றார் எழில். மேற்கொண்டு பேசியவர், நமது வாழ்க்கையில் எப்போது உறவு தொடங்கியது என்று அடுத்த கேள்வியை தொடுத்தார். பிறக்கும் பொழுதே உறவு தொடங்கி விடுகிறது என்றான் தேவநேயன். எப்படி என்று குறுக்கே புகுந்து சட்டென கேட்டாள் அருட்செல்வி. அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அண்ணன், அக்கா என நாம் பிறக்கும்போதே நமக்கு உறவினர் இருப்பார்களே என்றாள் கயல்விழி. ஆமாம்… ஆமாம்… பிறந்தவுடனேயே இதோ மருத்துவர், இதோ பொறியாளர் என்று அவர்கள் ஆசையை எல்லாம் நமது தலையில் ஏற்றி விடுவார்களே என்று சலிப்போடு நடித்துக் காட்டி நன்மொழி கூற, வகுப்பே சிரிப்பில் மிதந்தது.
அவர் எனக்கு உறவினர் இல்லையா? - அவர்களோடு சேர்ந்து சிரித்த ஆசிரியர் எழில், நாம் பிறக்கும்போதே நம்மோடு இருக்கிற குடும்ப உறவினர்களுக்கு அப்பாலும் நமக்கு உறவுகள் இருக்கின்றனவா என்று கேட்டார். நாம் பிறக்கும்போது மருத்துவம் பார்த்த மருத்துவர், செவிலியர் ஆகியோரை உறவினர் எனலாமா என்று வினாவினான் சுடர். உறவு என்பதே மனிதர்களுக்கு இடையில் ஏற்படும் தொடர்புதான் என்பதால் அவர்களும் உறவினர்களே என்றான் காதர். அப்படியானால் அடுத்த வீட்டிலும் பக்கத்து வீட்டிலும் வாழ்பவர்கள் உறவினர்களா என்று வினவினான் முகில். ஆம். அவர்கள் மட்டுமல்லர், நாம் அன்றாடம் தொடர்பு கொள்கிற நண்பர்கள், ஆசிரியர்கள், கடைக்காரர்கள், வாகன ஓட்டுநர்கள், தூய்மைப் பணியாளர்கள் எல்லோரும் உறவினர்களே என்று அழுத்தமாய்க் கூறினான் காதர்.
எங்கள் அத்தை டெல்லியில் வசிக்கிறார். அவரோடு நான் எப்போதாவதுதான் தொடர்பு கொள்கிறேன். அவர் எனக்கு உறவினர் இல்லையா என்று வினவினாள் கயல்விழி. அடிக்கடியோ, எப்பொழுதாவதோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ யாரோடு எல்லாம் ஒருவருக்குத் தொடர்பு ஏற்படுகிறதோ அவர்கள் எல்லாம் உறவினர்கள்தான் என்று கூறிய அருளினியன், நான் சரியாகத்தானே சொல்கிறேன் காதர் என்றுகாதரைப் பார்த்துக் கேட்டான். சரி என்பதற்கு அடையாளமாய் தனது வலதுகைக் கட்டைவிரலை உயர்த்திக் காட்டினான் காதர்.என்னாங்க ஐயா! நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லை என்று எழிலை உரையாடலுக்குள் இழுத்தாள் பாத்திமா. நீங்கள் அனைவரும் சரியாகப் புரிந்துகொண்டு பேசுகிறீர்கள். அதனை நான் பார்த்து மகிழ்வதால் பேசவில்லை என்றார் எழில்.
(தொடரும்)
கட்டுரையாளர், வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்
தொடர்புக்கு: ariaravelan@gmail.com