நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 10: பள்ளி முதல் குடும்பத்தினர் அளித்த உற்சாகத்தால் ஐடிஎஸ் பெற்றவர்!

நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 10: பள்ளி முதல் குடும்பத்தினர் அளித்த உற்சாகத்தால் ஐடிஎஸ் பெற்றவர்!
Updated on
2 min read

தனது பள்ளிக் காலம் முதல் குடும்பத்தினர் அளித்த உற்சாகத்தால் இந்திய வர்த்தகப் பணி (ஐடிஎஸ்) பெற்றுள்ளார் சுகன்யா.கே. இவர் தற்போது டெல்லி மத்திய வர்த்தக அமைச்சகத்தில் உதவி இயக்குநராக பணியாற்றுகிறார்.

அந்தியூரில் விவசாயம் செய்யும் கந்தசாமி, செல்வமணி தம்பதியின் இரண்டாவது மகள் சுகன்யா. இவருக்கு ஒரு மூத்த சகோதரியும், தம்பியும் உள்ளனர். ஏற்காடு மலைப் பகுதியில் உள்ள லேடி ஆப் வேளாங்கண்ணி தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும்போதே சுகன்யாதான் வகுப்பில் முதல் மாணவி. அடுத்து, கோயம்புத்தூரின் அவிலா கான்வெண்ட் பள்ளியில் பிளஸ் 2 வரை படித்தார். அக்கவுண்டன்ஸி, கணிதம், பொருளாதாரம் மற்றும் கம்ப்யூட்டர் பிரிவில் பிளஸ் 2 வகுப்பை 2004-ல் முடித்தபோது அக்கவுண்டன்ஸியில் நூறு சதவீதம் மதிப்பெண் குவித்தார்.

குடும்பத்தின் இலக்கு: பள்ளிக் காலம் முதல் சுகன்யா ஐஏஎஸ்அதிகாரியாக வேண்டும் என்கிற விருப் பம் குடும்பத்தினர் அனைவருக்கும் இருந் துள்ளது. இதை அவருக்கு அவ்வப்போது எடுத்துரைத்து உற்சாகப்படுத்தவே சுகன்யா அதே இலக்குடன் முயன்றார். சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரப் பிரிவில் 2007-ல் இளங்கலை பட்டம் பெற்றார். இதையடுத்து யூபிஎஸ்சி பயிற்சி பெற டெல்லி வாஜிராம் ரவி கோச்சிங் சென்டரில் இணைந்தார்.

இங்கு ஒரு வருடம் முடித்தவுடன் யூபிஎஸ்சி தேர்வை எழுத ஐந்துமுறை முயன்றார். அனைத்து முயற்சிகளிலும் முதல்நிலையான பிரிலீம்ஸில் எளிதில் தேர்ச்சி அடைந்தார். ஐந்தாவது முயற்சியில் நேர்முகத் தேர்வு வரை சென்றவருக்கு 2013-ல் இந்திய வர்த்தகப் பணி கிடைத்தது.

தமிழ் காப்பாற்றியது: இது குறித்து கூறுகையில், “இந்தி, பிரெஞ்சு மொழிகளை கற்றிருந்தாலும் எனதுதாய்மொழியான தமிழ் முக்கியம் என்பதை யூபிஎஸ்சி தேர்வு நேரத்தில்தான் நன்கு உணர்ந்தேன். ஏனென்றால் யூபிஎஸ்சி தேர்வை எழுதுபவர்கள் தம் தாய்மொழியிலும், ஆங்கிலப் பாடப் பிரிவிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மெயின்ஸின் இதர பாட விடைத்தாள்களை எழுத முடியும். தாய்மொழி பாடத்தில் தேர்ச்சி பெற முடியாமல் யூபிஎஸ்சியில் தோல்வி அடைந்த பலரும் உண்டு. எனவே, மேல்நிலைப் பள்ளியில் கற்ற தமிழ் எனக்கு பலன் அளித்தது” எனத் தெரிவித்தார்.

யூபிஎஸ்சியின் விருப்பப் பாடமாக பொது நிர்வாகம், புவியியல் ஆகியவற்றை சுகன்யா எடுத்திருந்தார். முன்னதாக, முதுகலை பயின்ற போது சென்னையில் காஸ்ட் அண்ட் வொர்க் அக்கவுண்ட்ஸ்(சி.டபிள்யு.ஏ.) பகுதி நேரத்தில் படித்து முடித்தார். மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டியூட் ஆப் ஷோஸியல் சயின்ஸ் கல்வி நிறுவனத்தில் எம்.ஏ. வளர்ச்சிக்கானக் கல்விப் பிரிவில் இணைந்தவர் மூன்று செமஸ்டர் தேர்வுகளை எழுதினார். இறுதி செமஸ்டரின் போது வெளியான குடிமைப்பணி தேர்வில் ஐடிஎஸ் கிடைத்துவிட்டது.

சுமார் மாணவரும் சாதிக்கலாம்: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளை போல், ஐடிஎஸ் பெறுபவர்களுக்கும் உத்தராகண்டின் மசூரியில் உள்ள தேசிய குடிமைப் பணி பயிற்சி நிலையத்தில் மூன்று மாதங்கள் அடிப்படை பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் பிறகு டெல்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரின் டிரேடில் ஒன்பதுமாதங்கள் பயிற்சிக்கு பிறகான தேர்விலும்வெல்ல வேண்டும். தொடர்ந்து மூன்று மாதங் களுக்காக டிஜிஎப்டியின் தலைமையகம் அமைந்த டெல்லி அலுவலகப் பயிற்சிக்கு பின்பணி அமர்த்தப்படுவர். நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களின் கிளை அலுவலகங்களிலும் பணிக்காக அமர்த்தப்படு கின்றனர். இத்தனை கட்டங்களையும் கடந்து வந்திருக்கும் சுகன்யா ஐடிஎஸ் அதிகாரி தற்போது முழு திருப்தியுடன் பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கிறார்.

தொடர்ந்து தான் யூபிஎஸ்சியை வென்றது குறித்து அதிகாரி சுகன்யா கூறும்போது, “இதில் வெல்வதற்காக எனது குடும்பத்தாரின் உற்சாகம் இருந்ததே தவிர, வழிகாட்டி என எவரும் இல்லை. இருப்பினும் விடா முயற்சியோடு டெல்லியிலேயே மூன்றாண்டுகள் தங்கி படித்து சாதித்தேன். பள்ளிக்காலத்தில் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவராக இருந்தால்கூட மனது வைத்து படித்தால் உயர் அதிகாரியாக முடியும் என்பது எனது அனுபவ பாடம்” என்றார்.

ஐடிஎஸ் என்பது இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலுக்கானது. எனவே, இந்திய அரசின் வெளிநாட்டு வர்த்தகப் பணியில் மட்டும் ஐடிஎஸ் அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். இதன்மூலம், நம் நாட்டிற்கு அன்னிய செலாவணியை ஈட்டும் தொழில்களைப் பெருக்குவது ஐடிஎஸ் அதிகாரிகளின் முக்கியக் குறிக்கோள். இவர்கள் அனைவரும் டிஜிஎப்டி எனும் டைரக்டரேட் ஜெனரல் ஆப் பாரீன் டிரேட் துறையின் கீழ் பணியாற்றி வருகின்றனர். டிஜிஎப்டியின் கோயம்புத்தூர் அலுவலகத்தில் உதவி இயக்குநராக சுகன்யா ஆனதை அடுத்து, சென்னையின் துணை இயக்குநரானார். இதே பதவியில் தற்போது டெல்லியின் மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்தில் பணியாற்றுகிறார். இவரிடம் அண்டை நாடுகளுடனான வர்த்தகத்தில் ஏற்றுமதி, இறக்குமதியின் போது எழும் விவகாரங்களை உலக வர்த்தக மையத்தில் எழுப்பும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தவிர இதர நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பும் உள்ளது. இதன்மூலம் இந்தியா சார்பில் அவ்வப்போது வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் பெற்ற அதிகாரி சுகன்யா, பல சாதனைகள் புரிவார் என வாழ்த்துவோம்!

கட்டுரையாளர் தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in