

கரோனா கால ஊரடங்கு நமக்கு மிகப்பெரிய பாடத்தை கற்பித்தது. ‘மினிமலிசம்' பற்றி யாரும் சொல்லிக் கொடுக்காமலே, குறைவான பொருட்களை கொண்டு எளிமையாக வாழும் முறைக்கு பழகினோம். ஒரு சில மணி நேரம் மட்டுமே திறக்கப்பட்ட கடைகளில் வாங்கிய அத்தியாவசிய பொருட்களை வைத்தே ஒரு வாரத்தை ஓட்டினோம். இவ்வாறு அவசியமில்லா நுகர்வை தவிர்த்ததால் அநாவசிய செலவுகள் கணிசமாக குறைந்தது.
இந்த மினிமலிச வாழ்க்கையை தொடர 8 வழிகளை பரிந்துரைக்கிறார் அமெரிக்காவின் மினிமலிச வாழ்க்கை பயிற்சியாளர் ஜோஷூவா ஃபீல்ட்ஸ்.
1. பட்ஜெட் போட்டு வாழ்தல்
ஒவ்வொருவரும் தங்களின் வருமானம் எவ்வளவாக இருந்தாலும் அதற்கேற்ப வாராந்திர, மாதாந்திர பட்ஜெட் போட்டு வாழ வேண்டும். முதலில் சேமிப்பு, அடுத்து அத்தியாவசிய தேவை, பின்னரே ஆசைப்படும் பொருளுக்கு பணத்தை ஒதுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வரவுக்கு மேல் ஒரு ரூபாய்கூட செலவழிக்கக் கூடாது. அதேபோல இந்த பட்ஜெட்டை மீறி ஒருநாளும் வாழ கூடாது.
2. கடன் வாழ்வை முறிக்கும்
நுகர்வு கலாச்சாரம் பெருகிவிட்ட இக்காலத்தில் கடன் வாங்கி பொருட்களை வாங்கி குவிப்பதே ஒரு வகையான ஃபேஷன் ஆகிவிட்டது. கிரெடிட் கார்டில் பொருட்களை வாங்குவது, லோன் ஆப்மூலம் கடன் வாங்குவது, கடன் வாங்கிசுற்றுலாவுக்கு செல்வது இந்த தலைமுறையில் சகஜமாகிவிட்டது. இதனால் ஏற்படும் பாதகங்களை புரிந்துகொண்டு ‘கடன் வாழ்வை முறிக்கும்' என்பதை உணர வேண்டும். வாங்கிய கடனை முதலில் அடைக்க முற்பட வேண்டும். சேமிப்பை விட அதிக வட்டிகோரும் கடனை அடைப்பதே சிறந்தது.
3. அத்தியாவசியமே போதும்
நம்மிடம் இருக்கும் ஒரு பொருளை தொடர்ந்து 30 நாட்களுக்கு பயன்படுத்தாமலே வைத்திருந்தால், உண்மையில் அது நமக்கு தேவையா என யோசித்து பார்க்க வேண்டும்.
4. வாங்கும் முன் ஒரு கேள்வி
அலமாரி முழுக்க துணிகள் இருந்தாலும், ஆன்லைனில் ‘ஆஃபர்' ஒன்றைப் பார்த்ததும் அடுத்த துணியை வாங்குவதை தவிருங்கள். எதை வாங்குவதற்கு முன்பும் இது எனக்கு தேவையா என்ற கேள்வி எழுப்புங்கள்.
5. தேவையை குறையுங்கள்
ஆடம்பரத்தை குறைப்பது மட்டுமல்ல, தேவையை குறைப்பதும் தான் மினிமலிச வாழ்க்கை முறை. பெரிய வீடு, விலை உயர்ந்த வாகனம் ஆகியவற்றுக்கு ஒரு முறை மட்டுமே பணம் செலவு ஆவதில்லை. ஒவ்வொரு முறையும் அவற்றை பராமரிக்கும் போதும் கூடுதலாக பணமும் ஆற்றலும் வீணாக செலவாகும். எனவே வீட்டில் சமையலறை, படுக்கையறை, அலமாரி, பரண் என தேவையற்று கிடக்கும் பொருட்களை முதலில் குறையுங்கள். அனைத்திலும் ‘குறைப்பு' என ஃபார்முலாவை பொருத்தினாலே வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சி, அதிக சேமிப்பு ஏற்பட்டுவிடும்.
6. அவசியமில்லா நுகர்வை தவிருங்கள்
நம் வீட்டில் பெரியவர்கள் ஆள் இல்லாத அறையில் லைட் எரிந்தால் உடனே ஓடி போய் அணைத்து விடுவார்களே, அது தான் அவசியமில்லா நுகர்வு. சின்ன சின்ன விஷயங்களில் சிக்கனமாக இருந்து வாழ்க்கைக்கான மதிப்பை கூட்டுவார்கள். ஆனால் இன்றைய தலைமுறை நடந்து செல்லும் இடத்துக்கு காரில் செல்வது, தேவைக்கு அதிகமான விலையில் செல்போன் வாங்குவது, 2 பேர் 4 படுக்கை அறைகள் கொண்ட வீட்டில் வாழ்வது என பொருளுக்கான மதிப்பை கூட்டுகிறார்கள். இதனாலே வாழ்க்கை மதிப்பு இழந்துவிடுகிறது.
7. எதிர்காலத்துக்கு எடுத்து வையுங்கள்
ஒவ்வொருவருக்கும் தனித்தனியான சேமிப்பும், மருத்துவ காப்பீடும் முக்கியம். அநாவசிய ஆசைகளுக்கு பணத்தை செலவழிக்காமல் எதிர்காலத்துக்குத் தேவைஎன தினமும் ஒரு தொகையை எடுத்துவையுங்கள். அதனை அதிக வட்டி வரும்வகையில் முதலீடு செய்யுங்கள். குழந்தைகளுக்கு இளம்வயதிலே சிக்கனம், சேமிப்பு, முதலீடு ஆகியவற்றை விளையாட்டைப் போல சொல்லிக்கொடுங்கள். எதிர்காலத்தின் மீதான பயம் குறைந்தாலே, நிகழ்காலம் இனிமையாகிவிடும்.
8. வாழ்க்கை இனிமையாக
மன மகிழ்ச்சிதான் மினிமலிச வாழ்க்கையின் முக்கிய குறிக்கோள். தேவையற்ற செலவினங்களையும், தேவையற்ற பொருட்களையும் குறைத்தாலே அதற்கு வழி ஏற்பட்டு விடும். தேவையில்லாத பொருட்களை உடனே விற்றுவிடுங்கள். அதில் கிடைக்கும் லாபத்தைவிட உங்களுக்கு அருகில் இருக்கும் இல்லாதவருக்கு கொடுத்துவிடுங்கள். அதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி விலை மதிப்பற்றது.
இதனாலே பெரும் கோடீஸ்வரரும் புரவலருமான வாரன் பஃபெட், ‘உலகில் மிகப் பெரிய மகிழ்ச்சி பிறருக்கு உதவுவதுதான்' என்கிறார்!
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in