

ஒரு செய்தி எப்படி ஒரு மாணவனை அந்த இடத்துக்கே செல்ல வைக்கிறது? சென்றது மட்டுமல்லாது, அந்த பொருளை வாங்கவும் வைக்கிறது? இதில் என்ன அதிசயம் எனக் கேட்கலாம். காரணம் அந்த செய்தி அப்படியானது, மாணவன் வாங்கிய பொருளும் முக்கியமானது.
தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பயன்படுத்திய “காமா” (Gama) எனும் பேனாவினைப் பற்றிய ஒரு செய்தி சமீபத்தில் ஒரு நாளிதழில் பிரசுரமானது. அந்த செய்தியைப் பார்த்த ஒரு இதழியல் மாணவர், அதை ஆவணப்படமாக எடுத்தார். இதைப்பார்த்த இன்னொரு மாணவர் அந்தகடைக்கே சென்று, அந்த பேனாவை வாங்கினார். அந்த செய்தியை படித்த ஆசிரியர் தனது வகுப்பில் ஒரு மாணவன் அந்த பேனாவை வைத்திருப்பதைப் பார்த்துவிட்டு, மாணவனும் அந்த செய்தியைப் படித்திருப்பதை அறிந்து கொண்டார்.
அலட்சியம் தவிர்
ஒரு செய்திதான், எப்படியெல்லாம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது பாருங்கள்?
நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது முக்கியமானது. அதுவும் இதழியலில் இருப்பவர்கள் 24 மணி நேரமும் செய்திகளை உற்று நோக்குபவர்களாக இருக்க வேண்டும். ஒரு பேனாதானே என்று அலட்சியமாக இருந்திருந்தால், அது செய்தியே ஆகி இருக்காது.
மாணவர்கள் நகரில் நடக்கும் நிகழ்வுகளை அவதானிப்பது மிக முக்கியம். குறிப்பாக சர்வதேச திரைப்பட விழாக்கள் நடந்தால், அவற்றில் கலந்துகொள்வது மிக முக்கியம். இந்திய அரசே எடுத்து நடத்தும் கோவா சர்வதேச திரைப்பட விழா போன்றவற்றில், பல முக்கிய இயக்குநர்கள், நடிகர்கள், எழுத்தாளர்கள், ஆஸ்கார் விருது பெற்றவர்களை எல்லாம் ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
ஆனால், ஒரு சிலர் இன்றும், இது போன்ற திரைப்பட விழாக்களுக்கு செல்பவர்கள், பாலியல் காட்சிகளை பார்ப்பதற்காகவே செல்கின்றனர், என்று சொல்கின்ற ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 4ஜி தொழில்நுட்பத்தில் கைப்பேசியிலேயே அனைத்தும் கிடைக்கும் காலம் இது. திரைப்பட விழாக்களுக்குச் சென்றுதான் இவற்றைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே அறிவை விரிவு செய்யவேண்டிய காலகட்டத்தில் ஆசிரியர்களாகிய நாமும் உள்ளோம்.
அதே போன்று நம் எழுத்துக்களை யார் படிக்கப் போகிறார்கள் என்று, என்றுமே எண்ணிவிடலாகாது. எங்கேனும் ஒரு இடத்தில், யாரேனும் ஒருவர், நம் எழுத்தினை படித்துக்கொண்டுதான் இருப்பார். காமா பேனாவாகட்டும், திரைப்பட விழாக்களாகட்டும், அனைத்தும் ஒரு விதத்தில் முக்கியமாகிறது இதழாளருக்கு.
முதல் வானொலி மன்ற இதழ்
“தமிழ் ஒலி” இதழானது இலங்கையில் இருந்த “தமிழ் ஒலி” வானொலி நேயர் மன்றத்தின் வெளியீடாக வானொலி நேயர்களுக்காக 1980-களின் நடுப்பகுதியில் யாழ்ப் பாணத்தில் இருந்து வெளிவந்தது. இது வானொலி நேயர்களுக்கான காலாண்டு சஞ்சிகையாக வெளிவந்தது. இதன் பதிப்பாசிரியராக தம்பிஐயா தேவதாஸும், உதவியாசிரியராக எஸ். உமாகாந்தனும் செயல்பட்டனர். வானொலி ஒலிபரப்பு, கலை, சமூகம் தொடர்பான பல்சுவை கருத்துகளையும் கட்டுரைகளையும் தாங்கி இந்த சஞ்சிகை வெளிவந்தது. இதனை www.shorturl.at/gkmoQ எனும் முகவரியில் படிக்கலாம்.
(உலா வருவோம்)
கட்டுரையாளர்: உதவி பேராசிரியர்,
இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்
தொடர்புக்கு: bbcsakthi@gmail.com