தயங்காமல் கேளுங்கள் - 11: பிசிஓடி தீர்க்க முடியாத சிக்கலா?

தயங்காமல் கேளுங்கள் - 11: பிசிஓடி தீர்க்க முடியாத சிக்கலா?
Updated on
2 min read

“எனக்கு பீரியட்ஸ் எப்பவும் இர்ரெகுலர் தான் டாக்டர்... நாலு மாசமா பீரியட்ஸ் வரலேன்னு இங்கிருக்கற டாக்டர் கிட்ட போனப்ப எனக்கு பிசிஓடி இருக்குன்னு சொன்னாங்க. இது பின்னால பிரச்சினை எதுவும் செய்யுமா, சொல்லுங்க ப்ளீஸ்?"

பிளஸ் 2 பயிலும் சாராவின் கேள்வி இது. சாரா, உங்களைப் போல இளம்பெண்கள் பலருக்கும் ஏற்படும் பிரச்சினைதான் பிசிஓடி எனும் சினைப்பை நீர்க்கட்டி. உலகம் முழுவதும் ஐந்தில் ஓர் இளம்பெண் சினைப்பை நீர்க்கட்டி பாதிப்புடன்தான் காணப்படுகிறார். ஆனால், உண்மையில் இது கட்டியே அல்ல. பிசிஓடி என்பது கட்டி இல்லையென்றால் உண்மையில் அது என்ன என்பதைத் தெரிந்துகொண்டால்தானே, அதற்கான சிகிச்சையை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

ஒரு பெண் பூப்படைந்தது முதல், அவளது reproductive age எனப்படும் இனப்பெருக்க காலம் முழுவதும் மாதவிடாய் சுழற்சி நடைபெறுகிறது என்பது நமக்கு ஏற்கெனவே தெரியும். இத்துடன் நமது மூளையின் பிட்யூட்டரி சுரப்பியின் FSH, LH ஹார்மோன்களும் சினைப்பையின் Estrogen, Progesterone ஹார்மோன்களும் மாதவிடாய் சுழற்சியைக் கட்டுப்படுத்துகின்றன என்பதையும் நினைவுபடுத்திக் கொள்வோம்.

கட்டி அல்ல

அதாவது, ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் முடிந்தவுடன் FSH ஹார்மோனின் தூண்டுதலால் சினைப்பையில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன்கள், கரு வளரத் தேவையான சினைமுட்டையின் வளர்ச்சியைத் தூண்டுகின்றன. பொதுவாக இரண்டு வாரங்கள் வரை நீடிக்கும் இந்த வளர்ச்சி, LH ஹார்மோனால் முற்றுப் பெறுவதுடன், முதிர்வடைந்த சினைமுட்டை வெளியேற்றம், ப்ரொஜெஸ்டிரான் ஹார்மோன்கள் சுரப்பு, கருப்பையின் உட்சுவர் திசுக்கள் அடர்த்தி, என அடுத்து இரு வாரங்கள் கருவைப் பாதுகாக்கும் பணிகள் நிகழ்கின்றன.

இவையனைத்துமே ஒரு கரு ஊட்டத்துடன் வளரத் தேவையான நிகழ்வுகள் என்பதால் இப்படித் தயாராகும் பெண்ணின் உடலில், அந்த மாதம் கருவுறுதல் நிகழாதபோதும், திருமண பந்தத்தில் இல்லாத பெண்களிடமும் மீண்டும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள அனைத்தையும் வெளியேற்றுவதே ஒவ்வொரு 28-ம் நாளில் இயற்கையாக நிகழும் மாதவிடாய் ஆகும்.

ஆனால், இந்தச் சுழற்சியில் ஏதோ சில காரணங்களால் தடை நிகழும்போது சினைப்பையில் உள்ள சினைமுட்டைகள் வளராமலோ முதிராமலோ போவதுடன் அவை வெளியேறாமல் உள்ளேயே தங்கி திரவக்கட்டிகளாக மாறிவிடுவதுண்டு. அப்படி திரளும் சினைமுட்டைகள்தான் ஸ்கேனிங்கின் போது நீர்க்கட்டிகளாகக் காட்சியளிக்கின்றன. அதைத்தான் Polycystic Ovarian Disease எனப்படும் பிசிஒடி என்று அழைக்கிறோம்.

பாதிப்புகளும் தீர்வும்

இந்த பிசிஓடி நிகழ பல காரணங்கள் இருந்தாலும் ஒழுங்கற்ற முறையில் சுரக்கும் ஹார்மோன்கள் இதில் முக்கியமானதாகும். அதிகளவிலான LH மற்றும் டெஸ்டோஸ்டிரோன்கள் சுரப்பு, இவற்றுடன் இன்சுலின் எதிர்ப்பு என அனைத்தும் சேர்ந்து, சினைமுட்டைகளை வளரவிடாமல் செய்வதுடன், நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு ஒருமுறை என மாதவிலக்கை சீரற்ற நிலைமைக்குத் தள்ளிவிடுகிறது. மேலும் அதிகளவிலான ரத்தப்போக்கையும் உண்டாக்குகிறது. மேலும் அதிக முகப்பருக்கள், முகத்தில் அதிக ரோம வளர்ச்சி, தலைமுடி உதிர்தல், எடை கூடுதல், கழுத்து, அக்குள் மற்றும் தொடைப் பகுதிகளில் acanthosis எனப்படும் அடர்த்தியான கருமையான தோல் என கண்ணுக்குத் தெரியும் அறிகுறிகளுடன் மனச்சோர்வு, பதற்றநிலை, கவலை, தூக்கமின்மை, கவனமின்மை போன்ற பிரச்சினைகளையும் இது உண்டாக்குகிறது.

பொதுவாக சிலருக்கு பிசிஓடி மரபணுகாரணமாகவும் நிகழலாம். இப்படிப்பட்ட அதிகளவு ஹார்மோன்களால் பிசிஓடிஏற்படும்போது பிற்காலத்தில் குழந்தைப்பேறின்மை முதல் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, ஏன் மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய் ஆகியவற்றையெல்லாம் ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

பிரச்சினை என்னவோ பெரிதாகத் தோன்றினாலும், இவை அனைத்தையும் நமது வாழ்க்கை முறை மாற்றத்தால் மட்டுமே எளிதாக வென்றுவிட முடியும் என்பதுதான் இதிலிருக்கும் பெரிய நம்பிக்கையளிக்கும் செய்தி.

ஆம்! ஆரோக்கியமான, அதிக மாவுச்சத்து இல்லாத புரதச்சத்து மிகுந்த இயற்கை உணவுகள், தொடர் உடற்பயிற்சி, முறையான உறக்கம் ஆகிய அடிப்படை மூன்றும் தான் பிசிஓடிக்கான முதல் மருந்து. பின்னாளில் வரக்கூடிய பல நோய்களை வெறும் வாழ்க்கை முறை மாற்றத்தாலேயே வெல்ல முடியும் என்பதற்கு பிசிஓடியே மிகச்சிறந்த உதாரணம் எனலாம்.

செப்டம்பர் மாதம் பிசிஓடி விழிப்புணர்வு மாதமும் கூட. தற்போது சாரா எழுப்பிய கேள்வி மூலம் நாம் கொடுத்த பதிலில் இருந்து பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அவர்கள் மூலமாக பதின்பருவப் பெண்களும் தெளிவு பெறுவார்கள் என்று நம்புகிறோம்.

(ஆலோசனைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்.

தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in