சைபர் புத்தர் சொல்கிறேன் - 11: சினிமா காட்டி ஆன்லைன் ஷாப்பிங் மோசடி வலை!

சைபர் புத்தர் சொல்கிறேன் - 11: சினிமா காட்டி ஆன்லைன் ஷாப்பிங் மோசடி வலை!
Updated on
2 min read

ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது நம்மை எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள் என்று கடந்த வாரம் பார்த்தோம். ஆனால், ஆன்லைன் ஷாப்பிங் மூலம் மாணவர்கள் மேலும் பலவிதங்களில் குறிவைத்து ஏமாற்றப்படுகிறார்கள். அவற்றையும் இன்று தெரிந்து கொண்டு எச்சரிக்கையுடன் செயல்பட நம்மை தயார்படுத்திக் கொள்வோமா!

ஒரு கதை சொல்லுகிறேன். பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர். நம் வசதிக்காக அவர் பெயரை சுரேஷ் என்று வைத்துக்கொள்வோம். சுரேஷ் இலவசமாகப் திரைப்படங்களை டவுன்லோட் செய்யும் டெலகிராம் குழுவில் இணைகிறார். படத்தை டவுன்லோட் செய்கிறார். சில நாட்களுக்குப் பிறகு அந்த குரூப்பில் ஒரு செய்தியைப் பார்க்கிறார். சுமார் 20 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போனை வெறும் 8 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி தருகிறோம் என்கிறது செய்தி.

நாங்கள் ஹேக்கர்கள்! - சுரேஷுக்கு நம்பிக்கை வரவில்லை “எப்படி சாத்தியம்?” என்று அந்த குழுவிலேயே கேட்கிறார். உடனடியாக நிதானமான பதில் வருகிறது “நாங்கள் ஹேக்கர்கள் எப்படி படங்களை ஹேக் செய்து உங்களுக்கு இலவசமாகக் கொடுக்கிறோமோ அதே போல் அமேசான், ஃப்ளிப்கார்ட் மாதிரியான தளங்களை ஹேக் செய்வோம். எங்கள் செலவுக்கு மட்டும் பணம் வாங்கிக் கொள்வோம்” என்கிறது. இதைக் கேட்டு சுரேஷுக்கு கொஞ்சம் பேராசை உண்டாகிறது. நாமும் பலனடையலாமே என நினைக்கிறான். ஹேக்கர்களிடம், தான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார்.

அவர்கள், அமேசான் அல்லது ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஒரு பொருளை கார்டில் சேர்த்துவிட்டு அந்த லிங்கை எங்களுக்கு அனுப்புங்கள் என்கிறார்கள். அப்படியே செய்கிறான் சுரேஷ். அடுத்து அவனை முதல் தவணையாக 5,000 ரூபாய் கட்ட சொல்கிறார்கள். பொருள் கைக்கு வந்ததும் மீதி பணம் கொடுக்கச் சொல்கிறார்கள். மேலும் நம்பிக்கை வந்த சுரேஷ் 5,000 ரூபாய் ஆன்லைன் மூலம் கொடுக்கிறான். அவ்வளவுதான் சில மாதங்கள் வரை காரணம் சொல்லிக் கொண்டிருந்த அந்த குழுவினர் ஒரு நாள் சுரேஷை குழுவில் இருந்து நீக்கிவிட்டார்கள்.

இங்கு சுரேஷுக்கு செல்போன் என்றால் வேறு சிலருக்கு சர்ட், பேண்ட், வாட்ச் என்று பொருள் மாறலாம். ஆனால், ஏமாற்று வேலை ஒன்றுதான். முகவரி, தொலைபேசி எண், கடையில் ஊழியர்கள் என வைத்திருக்கும் கடைகளிலேயே நமக்குச் சரியான பதில் சில நேரம் கிடைப்பதில்லை. அப்படியிருக்க யார் என்றே தெரியாத நபரை நம்பி பணம் அனுப்பவதை என்னவென்று சொல்வது? அந்த குழுவில் நீங்கள் இணைந்து என்ன ஒரு 3 அல்லது 4 திரைப்படங்கள் டவுன்லோட் செய்திருப்பீர்களா? அதைத் திரையரங்கில் பார்த்திருந்தாலே இவ்வளவு பணம் செலவாகி இருக்காது.

அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்களை ஹேக் செய்கிறேன் என்று ஒரு நபர் சொன்னால் எச்சரிக்கையுடன் ஒதுங்கிச் செல்லுங்கள். அல்லது அவ்வாறு ஆசை காட்டும் எண் குறித்து சைபர் குற்றப்பிரிவில் புகார் பதிவு செய்யுங்கள். பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

(தொடர்ந்து பேசுவோம்)

கட்டுரையாளர்: டிஜிட்டல் சமூக ஆய்வாளர்

தொடர்புக்கு: write2vinod11@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in