

திண்டுக்கல் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது என்ன என்று கேட்டால் பெரியவர்கள் பூட்டு என்றும், இளைஞர்கள் பிரியாணி என்றும் பதில் கூறுவார்கள். ஆனால், அதைத் தாண்டியும் திண்டுக்கல்லுக்கு இன்னொரு சிறப்பு இருக்கிறது. அதைப் பற்றித் தெரிந்துகொள்ள அங்கிருந்த ஒரு மருத்துவரைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.
டிவிஎஸ் நிறுவனத்தை உருவாக்கிய திரு டி.வி. சுந்தரம் ஐயங்காரின் மூத்த மகளாக, 1904-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 18-ம் தேதியன்று திருநெல்வேலியின் திருக்குறுங்குடி எனும் ஊரில் பிறந்தவர் டி.எஸ். செளந்திரம். அன்றைய வழக்கப்படி பள்ளிக் கல்வியைப் பயிலும்போதே டாக்டர் செளந்திரராஜனுடன் பதின்வயதுத் திருமணம் செளந்திரத்துக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், திருமணமான சில வருடங்களிலேயே பிளேக் நோயால் கணவர் இறந்துபோனார். இதனால் வாழ்வின் தொடக்கமே அவ்வளவு சுகமாக செளந்திரத்துக்கு ஆரம்பிக்கவில்லை.
இருந்தாலும் கணவரின் விருப்பப்படி கல்வியைத் தொடர விரும்பியவருக்கு தந்தை துணைநிற்க, தாய் லட்சுமி அம்மாளுடன் டெல்லி சென்றார். அங்கு லேடி ஹார்டிங் கல்லூரியில் மருத்துவம் பயிலத் தொடங்கினார். மருத்துவம் பயிலும்போது காந்தியடிகளின் பிரத்தியேக மருத்துவரான டாக்டர் சுசீலா நய்யாரின் நட்பு கிடைத்தது. இதுவே செளந்திரத்தை விடுதலை இயக்கத்துடன் இணைத்தது. 1936-ம் ஆண்டு, தனது 32 வயதில் மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றார். மகப்பேறு மருத்துவத்திலும் சிறப்புப் பயிற்சி பெற்றார். தான் பயின்றது தொழிற்கல்வி மருத்துவம் என்றாலும், தான் ஆற்றவேண்டியது இந்த சமுதாயத்திற்கு ஏராளம் என்ற தெளிவுடன் வெளியே வந்தார். காந்தியடிகளை ஒருமுறை சந்திக்க நேர்ந்தபோது அவரது வேண்டுகோளை ஏற்று, சிலகாலம் தங்க முடிவெடுத்து காந்தியடிகளின் ஆசிரமத்திற்குக் குடியேறினார்.
எளிய வாழ்க்கையில் மலர்ந்த காதல்: சேவாக்ராம் ஆசிரமத்தில் குடியேறிய பிறகுதான் டாக்டர் செளந்திரத்தின் வாழ்க்கை பலவிதங்களில் மாறியது. அதுவரை வசதியாக வாழ்ந்த அவர், பருத்தி நூல் நூற்கவும், காதி உடைகள் உடுத்தவும், வெறும் தரையில் உறங்கவும் அங்கேதான் கற்றுக்கொண்டார். அதேசமயம், காந்தியடிகளுடனேயே சேவாக்ராமில் தங்கி அரிஜன இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட கேரளாவைச் சேர்ந்த ஆசிரியரான ஜி.ராமச்சந்திரன் அறிமுகமானார். இருவருக்கும் மனமொத்து போக காதல் மலர்ந்தது. காந்திய வழியில் ஈடுபட்டதன் வழியாக காதல் வயப்பட்ட ராமச்சந்திரனுக்கும் செளந்திரத்திற்கும் அவரவர் இல்லங்களில் இருந்து முதலில் எதிர்ப்புக் குரல் தான் எழுந்தது.
ஆகவே, மகாத்மாவின் அறிவுரைப்படி இருவரும் ஓராண்டு காலம் சந்திக்காமல் தங்களது பணியைத் தொடர்ந்தனர். இருப்பினும் தங்கள் காதலில் உறுதியாக இருக்க, ராமச்சந்திரன் மற்றும் செளந்திரத்தின் திருமணத்தை தானே முன்னின்று எளிய முறையில் நடத்தி வைத்தார் மகாத்மா.
அன்னை கஸ்தூரிபாய் காந்தி நெய்து கொடுத்த கதர்ப் புடவையை உடுத்தி, அண்ணல் நெய்த பருத்தி நூலைக் கொண்டு செய்த மஞ்சள் சரடை கணவர் ராமச்சந்திரன் அணிவிக்க டாக்டர் செளந்திரத்தின் திருமணம் நடந்தேறியது. 1940-ல் மிகப்பெரிய புரட்சியாகவே நாடெங்கும் இச்சம்பவம் பேசப்பட்டது.
மருத்துவ முன்னோடி உடனான நட்பு: திருமணத்திற்குப் பிறகு சென்னையில் தனது மருத்துவப் பணியைத் தொடங்கிய டாக்டர் செளந்திரத்திற்கு, அவரை விடவும் தீவிரமாக சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் நட்பு கிடைக்கப் பெற்றது. தனது அனைத்து செயல்களுக்கும் முன்மாதிரியாகவும், முன்னோடியாகவும் முத்துலட்சுமியைக் கண்டார் செளந்திரம். அதன் பின் அவருடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். அப்படித் தொடங்கப்பட்டது தான், திருநெல்வேலி மாவட்ட சிவசைலம் எனும் ஊரில், ஆதரவற்ற பெண்களுக்கான இல்லம். சென்னை அடையாறின் ‘அவ்வை இல்லம்' போலவே ஓர் இல்லம் போன்று இந்த இல்லமும் நூற்றுக்கணக்கான ஆதரவற்ற பெண்களுக்கு அடைக்கலம் தரும் கூடாக உருவெடுத்தது. குறிப்பாக தேவதாசி முறையில் இருந்து தப்பித்து வெளியேறிய பெண்களுக்கான பிரத்தியேக இல்லமாக மாறியது. அவர்களுக்கு கல்வியையும் தொழிலையும் அமைத்துத் தந்தது.
(மகிமை தொடரும்)
கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்.
தொடர்புக்கு: savidhasasi@gmail.com