

ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் சில நாட்கள் முன்னர் பரவியது. ஒரு பேருந்து செல்கின்றது. அது ஒரு பக்கமாக சாய்ந்தபடி செல்கின்றது. ஏனெனில் அதில் நிறைய மாணவர்கள் தொங்கிக்கொண்டு செல்கின்றார்கள். திடீரென ஒரு மாணவன் அதிலிருந்து கீழே விழுகின்றான். பேருந்து நிற்காமல் சென்றுகொண்டே இருக்கிறது. நல்ல வேளையாக அந்த மாணவனுக்கு எதுவும் அதிக அடி இல்லை. கண்டிப்பாக உட்காயங்கள் இருந்திருக்கும். பேருந்தின் பின்னாடி வந்தவர் அதனை படம் பிடித்து இருந்தார். அந்த வீடியோவிற்கான பின்னூட்டங்கள்தான் சமூகத்தின் சிந்தனையை வெளிச்சமிட்டது. ஆனால், அந்த சிந்தனையை மாற்ற வேண்டும். இன்னும் கூர்மையாக்க வேண்டும்.
இந்த சம்பவத்திற்கு யார் காரணம்? இதே மாதிரியான சம்பவங்களை அல்லது இதே போன்ற பேருந்துகளை நீங்களும் நேரிலேயே பார்த்திருப்பீர்கள். பொதுவாகச் சொல்லப்படுவது என்ன?
1. பெற்றோர்கள் கண்டுகொள்வதில்லை என்று பெற்றோர்களைத் திட்டுகின்றார்கள்.
2. மாணவனுக்குக் கொழுப்பு இப்படி பேருந்தில் தொங்கிக் கொண்டு போகின்றான். அவனுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.
3. நடத்துநர் பேருந்தில் அளவிற்கு அதிகமான பயணிகளை ஏற்றிக் கொள்கின்றார், அவர் கண்டிக்க வேண்டும். ஓட்டுநர் சரியாக பேருந்தினை ஓட்டுவதில்லை.
4. சாலைகள் சரியாக இருப்பதில்லை அதனால் விபத்துக்கள் நேர்கிறது.
5. பள்ளிகள் வெகுதூரத்தில் இருக்கிறது.
மேலே கூறியவற்றை விட இன்னும் அதிக பொறுப்பு அரசுக்கு உண்டு. பயணிகள் அதிகம் இருக்கும் நேரத்தில் கூடுதலான பேருந்துகளைவிட வேண்டும். அதுவும் பள்ளிக் குழந்தைகள் செல்கின்றார்கள் என்றால் இன்னும் அதிகமாகவே வேண்டும்.
குழந்தைகளாகிய நீங்க என்ன செய்ய முடியும்? இந்த மாதிரியான நிகழ்வுக்கு முதற் காரணம் அருகிலேயே பள்ளிகள் இல்லாதது. அதைவிட முக்கியம் போதிய பேருந்து வசதிகள் இல்லாதது. பள்ளி நிர்வாகத்திடம் கூட்டாக மாணவர்கள் கோரிக்கை வைக்க வேண்டும், அவர்கள் மூலமும் உள்ளூர் அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைக்க வேண்டும். பெற்றோர்களுக்கு இந்த விஷயத்தை கூற வேண்டும்.பல வீடுகளில் பெற்றோர்கள் தினசரி கூலி வேலை செய்பவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கும் விழிப்புணர்வு தர வேண்டும். பேருந்தில் போதிய இடம் இருந்தும் அந்தமாணவர் தொங்குகின்றார் என்றாலும் மற்றஅனைவரும் அவனுக்கு அறிவுறுத்த வேண்டும். மாணவர்கள் நலனிற்காகஉள்ளூர் சமூகம் செவிமடுக்கும். அவர்களின் காதுகளுக்கு எட்டச் செய்வதும் அவர்களை உணரச் செய்வதும் என எல்லோருடைய பங்கும் உள்ளது. சிறார்களாகிய நீங்களும் இதனை செய்யலாம். உங்களுடைய குரலுக்கு வலுவும் அதிகம், கனிவும்அக்கறையும் அதிகம் உண்டு. செய்ய வேண்டியது உங்கள் கைகளில் உண்டு எனஉணர்ந்த பின்னர் அதன் வடிவங்களை நீங்களே முடிவு செய்வீர்கள் என்ற நம்பிக்கையும் உண்டு.(தொடரும்)
கட்டுரையாளர் சிறார் எழுத்தாளர்.
‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’ஆகியவை இவரது சமீபத்திய நூல்கள்
தொடர்புக்கு: umanaths@gmail.com