

விஞ்ஞானி ஒருவர் பணியில் இருந்து ஒரு நாள் வீட்டிற்கு திரும்புகிறார். அப்போது அவரது பணிப்பெண் கையில் துடைப்பத்துடன் நிற்கிறார். இப்படி அவர் நின்றால் என்ன செய்ய வேண்டும். கொஞ்சம் இடம் விடச் சொல்லிவிட்டுப் போகலாம். அல்லது இருக்கும் இடத்தில் செல்லலாம் அல்லவா? ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. உடனே தோட்டத்தின் பக்கமாக ஒரு மாடிப்படியைக் கட்டச் சொன்னாராம். வாசல் வழியாக வந்தால்தானே உங்களை சந்திக்க நேரும். இனிமேல் நான் தோட்டத்து வழியாகவே சென்று வருகிறேன் என்று நினைத்தாராம். இது எப்படி இருக்கு?
அதுபோலவே தான் செல்லும்போது தன்னை சில பெண்கள் பார்த்தார்கள் என்பதற்காக அந்த சாலையையே தவிர்க்கத் தொடங்கினாராம். ஒருமுறை ஆஸ்டிரிய நகரில் இருந்து வந்திருந்த ஒரு பிரமுகர் உங்களைப் பார்க்கத்தான் நான் இந்த நகருக்கே வந்துள்ளேன் என்று இவரைப் பற்றிப் பெருமையாகப் பேச ஆரம்பித்திருக்கிறார். உடனே அந்த இடத்திலிருந்து விருட்டென்று புறப்பட்டாராம் அவர். இவருடன் பேச வேண்டுமானால் அவருடைய முகத்தைப் பார்த்துப் பேசக் கூடாது. மாறாக நாம் ஒரு வெற்றிடத்தை நோக்கிப் பேசுகிறோம் என்று பேசினால்தான் உண்டு என்றாராம் டாக்டர் ஒலஸ்டன் என்று ஒரு அறிஞர். இவ்வாறு கூச்சமான இயல்புடையவராக இருந்தவர் வேறு யாருமல்லர். ஹென்றி கேவண்டிஷ் (1731-1810) அவர்கள்தான். உண்மையில் இவர் இவ்வளவு கூச்ச இயல்புடையவராக இருந்தாலும் அவர் பல அரிய கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்.
கண்டுபிடிப்புகள் பல: ஹென்றி கேவண்டிஷ் பிரிட்டீஷ் வேதியியலாளர் மற்றும் இயற்பியலாளராக அறியப்பட்டவர். வாயுக்களின் வேதியியல், மின்சாரம், நீர் தொடர்புடைய இவரது ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை. இவர்களது குடும்பம் மிகவும் செல்வாக்கான குடும்பமாகும். இவரது தந்தையும் தாயும் இங்கிலாந்தில் வசித்த பிரபுக்களின் வம்சாவளிகள். எனவே வாழ்நாள் முழுவதும் இவருக்கு பணப் பிரச்சினை இருக்கவில்லை. இங்கிலாந்தில் ஹக்னி என்ற இடத்தில் செயல்பட்டு வந்த பள்ளியில் தொடக்கக் கல்வியை முடித்தார். பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைத் தொடர்ந்தார். இவருடைய தந்தையாரும் அறிவியல் ஆய்வுகளில் ஈடுபாடுடையவராக இருந்தார். எனவே அவர் ஒரு ஆய்வகத்தினை நடத்தி வந்தார். அடிப்படையில் தமது தந்தையின் ஆய்வகத்தில் பணியாற்றிய இவர் தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் அதிலேயே மும்முரமாகச் செயல்பட்டு வந்தார். தந்தையார் வாழ்ந்த காலத்திலேயே ராயல் கழகத்தின் சொற்பொழிவுகளுக்குச் சென்று கொண்டிருந்தார். இதனால் அறிவுப் பெருக்கத்திற்கும் தடையில்லை.
இவர் ஆய்வு செய்யாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து வகையான துறைகளிலும் ஆய்வினை மேற்கொண்டார். 1766 முதல் 1788 வரையிலான காலங்களில் இவர் வேதியியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டார். இதே காலகட்டத்திலேயே பூமியின் அடர்த்தியைக் கண்டறியவும் முயன்றார். ஹைட்ரஜன் வாயுவைப் பிரித்தெடுத்ததோடு அது எளிதில் தீப்பிடிக்கும் வாயு என்று கண்டறிந்தவரும் இவரே ஆவார். கடினநீரை மென்னீராக்க கால்சியம் ஹைட்ராக்சைடை பயன்படுத்தலாம் என்ற கருத்தை வெளியிட்டவரும் இவர்தான். வளிமண்டலக் காற்றில் நைட்ரஜன் 4 பாகமும் ஆக்சிஜன் ஒரு பாகமும் உள்ளது என்றும் மேலும் சில வகை அரிய வாயுக்களும் உள்ளன என்று கண்டறிந்த வரும்இவர்தான். இப்படி பல்வேறு வகையான ஆய்வுகளையும் செய்ய தமது வாழ் நாளைஅர்ப்பணித்தவர் என்றால் மிகையாகாது.
தமது கூச்ச இயல்பு காரணமாக திருமணமே செய்து கொள்ளவில்லை. ராயல் கழக நிகழ்வுகளில் பங்கேற்றது, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சில நிகழ்வுகளில் பங்கேற்பது போன்றவைகளில் மட்டுமே இவர் வேற்று மனிதர்களைச் சந்தித்தார். பல வேடிக்கையான பழக்கங்கள் இவரிடம் இருந்தன. தனது நூலகத்தில் இருந்து தாம் எடுக்கும் நூல்களைக் கூட கையொப்பமிட்டுக் கொண்டுதான் எடுத்துக் கொள்வாராம். அவ்வளவு வித்தியாசமானவர். ஆம் ஒரே மாதிரி நபர்கள்தான் உலகில் கோடிக்கணக்கானோர் பிறந்து மடிகின்றனரே. இவர் வித்தியாசமாக இருக்கவேதான் இத்தனை கண்டுபிடிப்புகளுக்கும் காரணமானார். - கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம். தொடர்புக்கு: thulirmadhavan@gmail.