

பாம்பு ஏன் தோலை உரிக்கிறது, டிங்கு?
- கே. பால சரவணன், 8-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
பாம்பு தோல் உரிப்பதில்லை, சட்டை போன்ற மேல்தோலைத்தான் உரிக்கிறது பால சரவணன். பாம்பின் உடலைச் சுற்றி உட்தோல், வெளித்தோல் என்று இரண்டு அடுக்குகள் இருக்கின்றன. உட்தோல் மென்மையாக இருக்கும். வெளித்தோல் கெரட்டின் என்ற பொருளால் தடிமனாக உருவாகியிருக்கும். வெளித்தோல் நாளுக்கு நாள் கெட்டியாகும். 70-90 நாள்களில் தடித்த வெளித்தோலால் பாம்புக்குப் பார்வை சக்தியே குறைந்துவிடும். அதனால் இந்தத் தோல் சட்டையை உரித்துவிடுகிறது, பாம்பு. ஓராண்டுக்கு 3 முறையாவது பாம்புகள் சட்டையை உரிக்கின்றன,
திடப் பொருட்கள் தண்ணீரில் மூழ்கும் போது, பனிக்கட்டி, வெண்ணெய் மிதப்பது எப்படி, டிங்கு?
- எம். முனீர், 6-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.
பொதுவாகத் திடப் பொருட்களின் அடர்த்தி, தண்ணீரின் அடர்த்தியை விட அதிகமாக இருப்பதால், போட்டவுடன் மூழ்கிவிடுகின்றன. பனிக்கட்டி, வெண்ணெய் போன் றவை திடப் பொருட்களாக இருந்தாலும் இவற்றின் அடர்த்தி, தண்ணீரின் அடர்த்தியைவிடக் குறைவாக இருப்பதால் மிதக்கின்றன. நீரின் மூலக்கூறு இரண்டு ஹைட்ரஜன் அணுக்களாலும் ஓர் ஆக்சிஜன் அணுவாலும் ஆனது. இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் எலக்ட்ரான்களைச் சமமாக வழங்கி, சமமாகப் பகிர்ந்து கொள் கின்றன (சகப் பிணைப்பு (covalent). இந்தப் பிணைப்பின் காரணமாகப் பனிக்கட்டியின் அடர்த்தி குறை கிறது, முனீர்.