

ஒரு வேளை சாப்பாட்டிற்குக்கூட கஷ்டப்படும் நவீன் ஒரு கார் பிரியர். அம்மாவிடம் அடம்பிடித்து வித விதமான கார் வாங்கி தரச் செய்து விளையாடுவான். வளர்ந்த பிறகும் நவீன் கார் பிரியராக இருப்பதால் படிப்பு கெட்டுவிடுமோ என்ற கவலை அம்மாவுக்கு ஒரு புறம் இருந்து கொண்டே இருந்தது. பிறகு கல்லூரியில் சேர்ந்து படித்து கார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தான். கார் பந்தயத்தில் பங்கேற்கக்கூடிய விதத்தில் தன் திறமையை வளர்த்துக் கொண்டான். வெளிநாட்டு கார் நிறுவனம் கார் பந்தயம் நடத்த இருப்பதை அறிந்து கொண்டு தானும் பதிவு செய்தான். இதைக் கண்டு பொறாமை பிடித்த நண்பர்கள் நவீனைப் பார்த்து சைக்கிள் வாங்கக்கூட வசதி இல்லாமல் இருந்தான் இப்போ கார் பந்தயத்தில் கலந்து கொள்ள போகிறானாம் என்று கிண்டல் செய்தார்கள். அதை எல்லாம் நவீன் கண்டு கொள்ளவில்லை.
தன் வலிமை அவனுக்குத் தெரிந்ததால் நம்பிக்கையோடு இருந்தான். போட்டிக்கான நாளும் வந்தது. நவீன் ஜெட் வேகத்தில் பறந்தான். பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து ஊக்கப்படுத்தினார்கள் . பணக்கார தீபக் எவ்வளவோ முயற்சி செய்தும் நவீனை முந்த முடியவில்லை. ஆனாலும் தீபக்கிற்கே முதல் இடம் என அறிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு நவீன் ஏமாற்றம் அடைந்தான். கார் பந்தயம் நடத்துபவர்கள் அந்த பணக்கார வர்க்கத்தினர் பக்கம் இருப்பதை அறிந்து கொண்டான். தனக்காக வாதாடாமல் போட்டி அறிவிப்பை ஏற்றுக் கொண்டான். பந்தயத்தில் முதல் இடம் பெறவில்லை என்றாலும் நவீன் கார் ஓட்டிய விதம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. மக்கள் நவீனை கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த மகிழ்ச்சியே பந்தயத்தில் வெற்றி பெற்றதற்கு சமம் என எண்ணினான்.
தன்னுடைய கனவை நனவாக்க தொடர்ந்து அடுத்தடுத்த கார் பந்தயங்களில் பங்கேற்று வந்தான். இறுதியாக தன் ஊரில் நடைபெற்ற கார் பந்தயத்தில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனான். தன் பலம் அறிந்து பகைவனையும் கண்டு பயமறியாமல் ஒரு செயலில் ஈடுபடும் துணிவும் மற்றவர்களின் வலிமை அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளும் திறமையைத் தான் வள்ளுவர்,
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
அதிகாரம்: வலி அறிதல், குறள்: 471
கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்