

பள்ளியில் படிக்கும்போது விஞ்ஞானி என்ற அடைமொழி சேர்த்தே எல்லோரும் இளமதியை அழைப்பார்கள். அந்தளவுக்கு ஆய்வுகளில் ஆர்வம் கொண்டவராகவும், அறிவியல் கண்காட்சிகள் மற்றும் போட்டிகளில் பள்ளி சார்பாக கலந்துகொள்பவராகவும் இளமதி திகழ்ந்தார். பிளஸ் 2 முடித்த கையோடு பொறியியல் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்து இருந்தார்.
ஆனால், தற்போதைய கலந்தாய்வில் அவர் எதிர்பார்த்த கல்லூரியில் எதிர்பார்த்த பாடப்பிரிவில் இடம் கிடைக்கவில்லையாம். அது தொடர்பாக பேராசிரியர் ராகவனிடம் கலந்தாலோசிக்க அன்றைய தினம் வந்திருந்தார். ஆர்வத்துடன் குழுமிய இதர மாணவர்களுக்கும் சேர்த்தே பேராசிரியர் தனது பேச்சை ஆரம்பித்தார்.
அறிவியல் பாடங்களில் குறிப்பாக இயற்பியலில் அதிக ஆர்வம் கொண்ட இளமதியின் உயர்கல்வி கனவு இயற்பியல் துறை சார்ந்தே இருந்தது. ஆனால், சக மாணவர்கள் பலரும் பொறியியல் படிப்பில் சேர்கிறார்கள் என்பதால் இளமதியும் பொறியியலுக்கு விண்ணப்பித்தார். கலந்தாய்வில் அவர் எதிர்பார்த்த இடம் தள்ளிப்போனதில், அடுத்தகட்ட கலந்தாய்வில் பங்கேற்பதா அல்லது தனக்குப் பிடித்த பிஎஸ்சி இயற்பியலில் சேரலாமா என்ற யோசனையில் வந்திருக்கிறார். அவருக்கு மட்டுமன்றி அனைத்து மாணவர்களுக்கும் சேர்த்து சொல்கிறேன். தயவுசெய்து, இதைப் படித்தால் வேலை கிடைக்கும்; அதைப் படித்தால் அதிக ஊதியம் கிடைக்கும் என்றெல்லாம் கணக்கு போட்டு உயர்கல்வியில் சேர வேண்டாம். மாணவப் பருவத்தில் எதில் விருப்பம் இருக்கிறதோ, எந்த படிப்பு உங்களை அதிகம் ஈர்க்கிறதோ அந்த துறையில் உயர்கல்வியை தேர்ந்தெடுங்கள். அதே ஈடுபாட்டுடன் நன்றாக படியுங்கள். சிறந்த பணிவாய்ப்பும் உயர்ந்த ஊதிய விகிதங்களும் தானாக கிடைக்கும்.
இயற்பியல் என்னும் தாய்: பொறியியலில் இளமதி விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்காத நிலையில், ஏதோவொரு கல்லூரி, ஏதோவொரு பாடப்பிரிவு என்று சேர்ந்திருப்பின் என்னவாகும்? படிப்பின் மீதான அவரது இயல்பான ஊக்கமும், நாட்டமும் குறைந்து போகக் கூடும். அதற்கு பதிலாக, பல்வேறு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளின் தாயான இயற்பியல் பிரிவிலேயே நேரடியாக சேர்ந்து பயிலலாம். இயற்பியல் துறை என்பது மிகவும் விசாலமானது. நாம் புழங்கும் அன்றாட பொருட்களின் அடிப்படை முதல் அண்ட சராசரம்வரை இயற்பியலில் மட்டுமே கற்க முடியும். நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே செல்லும் அறிவியல் உயர்கல்வி துறைகளில் இயற்பியல் முதன்மையானது.
பொறியியலை காட்டிலும்... பொறியியலை காட்டிலும் இயற்பியல் என்பது படிப்பதற்கு எளிமையானது. அடிப்படைகள் அனைத்தையும் விரிவாக கற்க வாய்ப்பளிப்பது. பொறியியலுக்கு நிகராகவும், அதனை விஞ்சியும் படிப்பதற்கு முதுநிலை இயற்பியலில் வாய்ப்புகள் அதிகம். மேலும் பொறியியல் படிப்புக்கு ஆகும் செலவைவிட ஒப்பீட்டளவில் இயற்பியலின் கல்விக் கட்டணம் குறைவு. ஏதோவொரு கல்லூரியில் சேர்ந்து பொறியியல் படிப்பதை விட சிறந்த கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்து இயற்பியல் படிக்கலாம்.
ஆர்வமுள்ள மாணவர்கள் இயற்பியல் (ஹானர்ஸ்) தெரிவு செய்தும் படிக்கலாம். அதுபோன்றே ஒருங்கிணைந்த 5 ஆண்டுகள் எம்எஸ்சி படிப்பிலும் சேர்ந்து படிக்கலாம். பெங்களூரு இன்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் வழங்கும் பிஎஸ்சி ரிசர்ச் மெதடாலஜி எனப்படும் இளங்கலை ஆராய்ச்சி முறைமையிலும் சேர்ந்து படிக்கலாம். இதிலும் ஐஐடி நிறுவனங்களிலும் ஒருங்கிணைந்த எம்எஸ்சி படிப்பில் சேர்ந்து படிப்பது, பொறியியல் கல்வியை விட சிறப்பான எதிர்காலத்தை வழங்கும்.
பரவலான பணி வாய்ப்புகள்: இயற்பியலில் படிப்பை முடித்தவர்களுக்கு பள்ளி, கல்லூரி ஆசிரியர் பணியிடங்கள், போட்டித் தேர்வுக்கான வாய்ப்புகள் ஆகியவற்றுக்கு அப்பாலும் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இஸ்ரோ, டிஆர்டிஓ உள்ளிட்ட அறிவியல் ஆய்வு மையங்கள், தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கூடங்கள், தொழிற்சாலைகள், மின்னணு மையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், ரோபோட் சார்ந்த தானியங்கி உபகரணங்கள், நவீன மருத்துவ உபகரணங்கள், தகவல் தொழில்நுட்ப சேவை என பல்வேறு துறைகளின் பணியில் சேரலாம். முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் இயற்பியல் மாணவர்கள் வளாக நேர்காணலில் பணி வாய்ப்பு பெறுவதும் அதிகரித்து வருகிறது.
பி.எஸ்சி., முடித்த கையோடு ஏதேனும் பணிபுரிந்தவாறோ, டிஎன்பிஎஸ்சி, யூபிஎஸ்சி, வங்கி பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்தவாறோ மேலதிக முதுநிலை படிப்புகளை தொடரவும் முடியும். இயற்பியலில் உப படிப்புகளான அப்ளைடு பிஸிக்ஸ், நானோ டெக்னாலஜி, ஜியோ பிசிக்ஸ், மெடிக்கல் சயின்ஸ், பயோ பிசிக்ஸ், எனர்ஜி சயின்ஸ், நியூக்ளியர் பிசிக்ஸ், குவாண்டம் மெக்கானிக்ஸ், அஸ்ட்ரோ பிசிக்ஸ் போன்றவற்றில் முதுநிலை பட்டம் அல்லது பட்டய படிப்பைமுடித்து தங்களது விருப்பம் மற்றும் பணிக்கு ஏற்பவும் தகுதியை வளர்த்துக்கொள்ளலாம். இளமதி போன்று ஆய்வில் ஆர்வமுள்ளவர்கள் அரசு சார்பிலும் தனிப்பட்ட வகையிலும் ஆய்வுப் பணிகளை தொடரலாம். அவர்களுக்காக அரசு முதல் தனியார்வரை உதவிக்கரங்களும் காத்திருக்கின்றன - கட்டுரையாளர் தொடர்புக்கு: leninsuman4k@gmail.com