

வகுப்புத் தொடங்கியதும், ஒரு சந்தேகம் என்றாள் தங்கம். என்ன என்றார் எழில்.மற்றவர்களின் பாதிப்பை நாமும் உணர்ந்து, அதனை அவர்களே சரி செய்ய உதவுவது மட்டும் தான் ஒத்துணர்வா? நமது செயல் மற்றவர்களைப் பாதிக்கும் என்பதை உணர்ந்து நாமே அதனைத் தவிர்ப்பது ஒத்துணர்வு ஆகாதா என்று வினவினாள் தங்கம். அதுவும் கூட ஒத்துணர்வுதான். அதற்கான எடுத்துக்காட்டையும் நீயே கூறுகிறாயா என்று அவளுக்கு வாய்ப்பளித்தார் எழில். சரி என்ற தங்கம், பேருந்துப் பயணிகள் சரியான சில்லறையைக் கொடுத்து சீட்டு வாங்குவது என்றாள். அதனைக் கேட்டு சிலர் கேலியாய்ப் புன்னகைத்தனர். எப்படி என்று வினவினான் அழகன்.
சில்லறை விஷயமில்ல! - ஒரு பேருந்தில் 60 பேர் பயணிக்கிறார்கள் எனக் கற்பனை செய்வோம். அவர்கள் அனைவரும் 50 அல்லது 100 ரூபாயைக் கொடுத்துச் சீட்டுக்கேட்டால், நடத்துநர் அந்த 60 பேருக்கும் உரிய சில்லறையை மீதமாகக் கொடுக்க வேண்டும். அவ்வளவு சில்லறை இல்லாத போது அவர் எரிச்சல் அடைகிறார். மாறாக, ஒரு பயணி தனது சீட்டிற்கான சில்லறையை மட்டும் கொடுத்தால் போதும். எனவே, ஒவ்வொரு பயணியும் தன்னை நடத்துநராகக் கற்பனை செய்து பார்த்தால், அவரின் இக்கட்டுப் புரியும். அவ்வாறு நடத்துநரின் மனநிலை, சூழ்நிலை, நோக்கம் ஆகியவற்றை அவரது நிலையில் இருந்து ஒருவர் புரிந்துகொண்டு உரிய சில்லறையோடு பயணிக்க வருவது ஒத்துணர்தல்தானே என்று வாதிட்டாள் தங்கம்.
அருமை என்றான் அழகன். ஏன் நடத்துநர்கள் எரிச்சல் அடைகின்றனர் என்று இப்பொழுது புரிகிறது என்றான் முகில். இனிமேல் உரிய சில்லறையோடுதான் பேருந்தில் ஏறுவேன் என்றாள் மணிமேகலை. அவற்றைக் கேட்டுப் புன்னகைத்த எழில், தங்கத்தின் விளக்கத்திற்காக அவளைப் பாராட்டினார். பின்னர், நாம் பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தப்படும் எல்லா நன்னடத்தைகளுக்கும் (Etiquette) அடிப்படை ஒத்துணர்வே என்று கூறினார்.
இதுகூட நன்னடத்தையா? - நன்னடத்தை என்றால் என்னவென்று வினவினாள் கயல்விழி. சமுதாயத்திலும் பணியிடங்களிலும் பின்பற்ற வேண்டிய முறையான நடத்தைகளே நன்னடத்தைகள் எனப்படுகின்றன. அவை, ஒருவரையொருவர் கண்ணியத்தோடு நடத்துவதற்காக அவர்கள் பின்பற்றுவதற்கான வழிகாட்டிகள் ஆகும் என்றார் எழில். அதாவது ஒருவரிடம் உரையாடும்பொழுது கத்தாமல், அவருக்குக் கேட்கும் ஒலியளவில் பேச வேண்டும் என்பதைப் போலவா என்று வினவினான் முகில். ஆம் என்ற எழில், இதுபோல நீங்கள் அறிந்த, பின்பற்றுகிற நன்னடத்தைகள் சிலவற்றைக் கூறுகிறீர்களா என்று மாணவர்களைத் தூண்டினார்.
பேருந்தில் படிக்கட்டில் நிற்கவோ, தொங்கவோ, பாதையை மறைத்து நிற்கவோ கூடாது என்றான் சாமுவேல். வீட்டில் தொலைக்காட்சியை அலறவிடாமல், அளவான ஒலியில் காண்பது என்றாள் இளவேனில். நான்கு அல்லது ஐந்து பேர் சாலையை அடைத்துக் கொண்டு நடக்காமல் பின்னால் வருபவர்களுக்கு வழிவிட்டு இருவர் இருவராக நடத்தல் என்றான் தேவநேயன். பொது இடங்களில் கைப்பேசியை அலறவிடாமல் இருத்தல் என்றாள் மணிமேகலை. நோயாளிகளிடம் அவர்களுக்கு அச்சம் தரும் வகையில் பேசாமல் இருத்தல் என்றாள் கயல்விழி. இருவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது குறுக்கே குறுக்கே பேசாமல் இருத்தல் என்றான் முகில். அவர்கள் அனைவரையும் பாராட்டினார் எழில். அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய் தம்நோய்போல் போற்றாக் கடை என்ற குறள் ஒத்துணர்வைத்தான் குறிக்கிறதோ என்ற கேட்டான் அருளினியன். ஆம் என்று கூறி விடைபெற்றார் எழில்.
(தொடரும்)
கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித் திட்டவடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்
தொடர்புக்கு: ariaravelan@gmail.com