

பெற்றோரின் அரவணைப்பு இல்லாதவள் மேரி. காலராவினால் தன்னுடைய பெற்றோரை இழந்து மாமா வீட்டிற்கு வரும் போது மெலிந்து இருக்கின்றாள். ஆரோக்கியமாக இல்லை. அங்குள்ள தோட்டத்திற்குச் சென்று ஓடி ஆடி விளையாடுகிறாள்.
அப்போது ஒரளவு குணமடைகிறாள். அங்கு சந்திக்கும் அவளின் மாமா மகன் காலின் படுத்த படுக்கையாக இருக்கிறான். எப்போதும் தான் இறந்து விடுவிடக்கூடும் என்று வாழ்க்கையில் எந்தவொரு நம்பிக்கையும் இல்லாமல் நாட்களைக் கடத்தும் சிறுவன் அவன். இருவருக்கும் மகிழ்ச்சிஅளிக்கும் இடமாக தோட்டம் இருக்கின்றது. அந்தத் தோட்டத்தினால் அவர்களுடைய வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதே நாவலின் மையமாக உள்ளது.
பத்து வருடங்களாய் பூட்டிக் கிடக்கும் தோட்டத்தில் செடிகளும் கொடிகளும் இன்னும் உயிரோடு இருக்குமா என்ற கேள்வி மேரியின் மனதுள் எழுகிறது. அந்த தோட்டத்தில் ஒரு பாடும் பறவையைப் பார்க்கிறாள். பூட்டப்பட்டுள்ள தோட்டத்தைப் பற்றி இந்தப் பறவைக்கு ஏதாவது தெரியுமா, மாமா ஏன் இந்தத் தோட்டத்தைப் பூட்டியே வைத்திருக்கிறார் போன்ற கேள்விகளுக்கு அவளிடம் விடை இல்லை. ஆனால், எப்படியாவது தோட்டத்தின் சாவியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைக்கிறாள். அன்றிலிருந்து இரகசியத் தோட்டத்தில் மறைந்துள்ள மா்மம் என்ன என்பதை தொடர்ந்து தேடுபவளாகிறாள் மேரி.
தோட்டத்தின் சாவி
ஒரு நாள் தோட்டத்தில் மேரிக்குப் பழைய இரும்பாலான சாவி கிடைக்கிறது. இரகசியத் தோட்டத்திற்குள் செல்லும் கதவைக் கண்டுபிடிக்க முடியுமா? சாவி கிடைத்து விட்டது. நிச்சயமாக கண்டுபிடிக்க முடியும் என்ற எண்ணத்தில் அறைக்குச் செல்கின்றாள்.
காலின்
மேரி தூங்கிக் கொண்டிருக்கும் போது எங்கிருந்தோ அழுகை சத்தம் அவளுக்கு கேட்கிறது. சத்தம் வந்த அறையை நோக்கி செல்கின்றாள். அங்கே படுக்கையில் ஒருபையன் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறான். நீ ஏன் அழுகிறாய் என மேரி கேட்கின்றாள். “தலைவலியால் அழுகிறேன்.
நான் ஒரு நோயாளி. எனக்கு கூன் விழுந்துவிட்டது. எழுந்து நடக்க முடியாது என தன்னைப் பற்றி கூறுகிறான்”. நீ யார் என்று மேரியிடம் அந்தச் சிறுவன் கேட்கிறான். கெரவன் என்னுடைய மாமா என்கிறாள். அவர் தான் என்னுடைய அப்பா என்கிறான். நான் பிறந்ததும் என் அம்மா இறந்து விட்டார். அதனால் என் அப்பாவுக்கு என்னைப் பிடிக்காது என்றான்.
வசந்த காலம்
இப்படிப்பட்ட சுவாரசியமான திருப்புமுனைகளுடன் நீளும் நாவலில் எப்போதும் நான் இறந்துவிடுவேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் காலின் தோட்டத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடிகிறான். அந்த மர்மம் தன்னுடைய வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது நாவலின் தொடா்ச்சியாக அமைந்துள்ளது.
பெற்றோரின் அரவணைப்பு இல்லாமல் வளரும் குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்குத் தேவைப்படுவது எதிர்பார்க்காமல் கிடைக்கின்ற விளையாட்டு பொம்மைகளோ, விருப்பமேயில்லாத கலைகளோ, பாடத்திட்டங்களோ இல்லை.
குழந்தைகளுக்கு அடிப்படை ஊக்கமாக இருப்பது பெற்றோரின் அன்பும் அரவணைப்பும்தான். பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் இல்லாமல் வளரும் குழந்தைகள் நாளைய சமூகத்தில் மனநோயாளியாக மாறக் கூடிய அபாயம் இருக்கிறது என்பதையும் நினைவில் கொள்வோம்.
கட்டுரையாளர்: முதுகலைத் தமிழாசிரியை, அரசு மேல்நிலைப்பள்ளி, வெலக்கல் நத்தம், திருப்பத்தூர் மாவட்டம்.