நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 9: நக்சலைட் வேட்டைக்கு இடையில் படித்து ஐஏஎஸ் ஆனவர்!

நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 9: நக்சலைட் வேட்டைக்கு இடையில் படித்து ஐஏஎஸ் ஆனவர்!
Updated on
2 min read

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் வேட்டைக்கு இடையில் படித்து சிஆர்பிஎப் துணை கமாண்டண்ட் பணியில் இருந்து ஐஏஎஸ் ஆனவர் சுதன்.ஏ. 2019-ம் ஆண்டு பேட்ச்சில் உயர் அதிகாரியான இந்த தமிழர் தற்போது உத்தரப்பிரதேசத்தில் பணியாற்றி வருகிறார்.

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகாவின் வடக்கன்குளம் கிராமத்தை சேர்ந்த பாலா சுப்பரமணியன், அன்ன குமுதா தம்பதிகளின் ஒரே மகன் சுதன்.

இவர் 2 வயது குழந்தையாக இருக்கும்போது தாய் இறந்ததால் தனது தாய்வழித் தாத்தா அன்ன செல்வராஜ், பாட்டி மெல்ரோஸ் மேரியால் வளர்க்கப்பட்டார். மூத்த சகோதரி ஜாய்ஸ் மணமாகி குடும்பத்துடன் வசிக்கிறார்.

செயிண்ட் ஆன்ஸ் தொடக்கப் பள்ளியில் ஆங்கிலக் கல்வியை ஆரம்பித்தார் சுதன். பிறகு கெய்ன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பிளஸ் 2 முடித்தார். பிறகு பெட் பொறியியல் கல்லூரியில் பி.இ. முடித்தவருக்கு அரசு ஊழியராக வேண்டும் என்பது விருப்பமானது.

குறிக்கோளின்றி படித்தது தவறு

இது குறித்து அதிகாரி சுதன்.ஏ கூறும்போது, “பள்ளிக் காலத்தில் எனக்கு கிடைத்த வழிகாட்டுதலை நான் முறையாக பயன்படுத்தி இருந்தால், அப்போதே யூபிஎஸ்சி எழுதி வென்றிருப்பேன். எந்த ஒரு குறிக்கோளும் இன்றி படித்தது எனது தவறு. இந்த தவறுகளை செய்யாமல் தம் பள்ளிக் காலத்திலேயே எதிர்காலத்திற்கு குறி வைக்க வேண்டும்.

நெருங்கிய நண்பரான சரவண ராஜா மூலம் பி.இ. இறுதியாண்டில் அரசு பணிகளுக்கான நுழைவுத் தேர்வுகள் குறித்து அறிந்து எழுதத் தொடங்கினேன். டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் பணியாற்றியபடி, எந்தவிதமான பயிற்சியும் இல்லாமல் அப்போதைக்கு படித்து எழுதினேன்” எனத் தெரிவித்தார்.

இதில் 2011-ல், குரூப் சி-யில் வருமானவரித்துறை உதவியாளர் பதவி, குரூப் ஏ-வில் மத்தியப் பாதுகாப்பு படைகளில் ஒன்றான சிஆர்பிஎப்பின் துணை கமாண்டண்ட் பணி இரண்டும் முதல் முயற்சியிலேயே சுதனுக்கு கிடைத்தன. நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகமுள்ள சத்தீஸ்கரில் பணி என்பதால் சுதனின் குடும்பத்தினர் சற்று அஞ்சியுள்ளனர்.

ஆனால், தைரியமாக 2014-ல் துணை கமாண்டண்டான சுதனுக்கு, யூபிஎஸ்சி எழுதி ஐஏஎஸ் பெறும்விருப்பம் எழுந்துள்ளது. இதற்காக, நக்சல்வேட்டைகளுக்கு இடையே கிடைத்த நேரத்தில் அடர்ந்த காடுகளின் மரத்தடிகளில் அமர்ந்து 2014-ம் ஆண்டில் இருந்தேபயிற்சியில் இறங்கினார்.

அப்போது அவருக்கு நக்சல் வேட்டைக்கு அளிக்கப்பட்ட குண்டுகள் நிரப்பப்பட்ட இயந்திரத் துப்பாக்கி உள்ளிட்ட பாதுகாப்பு ஆயுதங்கள் உடன் இருந்துள்ளன.

துணை கமாண்டண்டான சுதனின் படையில் சுமார் 80 ஜவான்களும் இருந்துள்ளனர். இவர்களுடன் நக்சல் நடமாட்டம் அதிகமுள்ள தந்தேவாடாவிலும் அவர் பணியாற்றி உள்ளார். அங்கு சுதனின்படையால் நக்சலைட்டுகள் வேட்டையாடப்பட்டன. இப்படையினர் மீது நடைபெற்ற தாக்குதல்களின் மீட்பு பணியிலும் சுதனின் படை ஈடுபட்டது.

அப்போது இணையதள இணைப்பு மற்றும் கைப்பேசி தொடர்புகளும் டவர்கள் இல்லாமல் யூபிஎஸ்சியை தொடர இடையூறு இருந்தது. 2019-ல் ஐந்தாவது முயற்சியில் பிரிலிம்ஸ், மெயின்ஸ் கடந்து நேர்முகத்தேர்வு வரை செல்ல முடிந்தது.

தோற்றாலும் துவளக் கூடாது

சிஆர்பிஎப் கமாண்டண்டாக பணியாற்றியபடி, யூபிஎஸ்சிக்கு முயன்றதால் பலரது விமர்சனங்களுக்கும் ஆளாகினார். இதை பொருட்படுத்தாமல் பொறுமையாகப் படித்ததில் ஆறாவது முயற்சியில் துணை கமாண்டண்டான சுதனுக்கு 2020 பேட்ச்சின் ஐஏஎஸ் உத்தரப்பிரதேசத்தில் கிட்டியது.

இது பற்றி சுதன் நினைவுகூரும்போது, “4 முறை முயன்றும் வெற்றி கிடைக்காத போதும் நான் அதை தோல்வியாகப் பார்க்கவில்லை. தோல்விக்கான காரணம் என்ன என ஆராய்ந்து புரிந்து கொண்டேன். அரசு தேர்வுகளில் கிடைக்கும் முதல் பணியை வைத்து திருப்தி அடையாமல் நாம் முயற்சியை தொடர வேண்டும்.

அதேசமயம், செய்யும் எந்த பணிகளிலும் குறை வைக்கக் கூடாது என நான் கவனமாக இருந்தேன். கடைசியாக ஐஏஎஸ்-க்கும் முயலும்போது கோயம்புத்தூரில் பணியாற்றி வந்தேன். அப்போது, டிஐஜி சதீஷ் சந்திர வர்மா ஐபிஎஸ் எனக்கு 60 நாட்கள் அளித்த விடுமுறையும் பலன் அளித்தது” என்றார்.

துணை கமாண்டண்ட் இருந்த போதுபிரதமரின் பாதுகாப்புக்கு சிறப்பாக செயல்பட்டதற்கு 2018, 2019-ம் ஆண்டுகளில் சிஆர்பிஎப் டிஜிபி விருது, ஐஜி விருது உள்ளிட்ட ஐந்து விருதுகளை பெற்றுள்ளார் சுதன். தனது பள்ளி காலத்தில் சிறந்த மாணவராக இருக்க முடியவில்லை என்றாலும் தேவையான போது, படித்து ஐஏஎஸ் பெற்றுள்ளார் அதிகாரி சுதன்.

இதன்மூலம், சராசரி மாணவர்கள் மனது வைத்தாலும் யூபிஎஸ்சி எழுதி வெல்ல முடியும் என நிரூபித்துள்ளார். ஐஏஎஸ் ஆனதை அடுத்து உபியின் புந்தேல்கண்ட் பகுதியின் மஹோபா மாவட்ட உதவி ஆட்சியராக இருந்தார்.

தற்போது மத்திய அரசின் பல்வேறு துறைகளின் சிறப்பு செயலாளராகப் பயிற்சி பெற்று வருகிறார். மீண்டும் தாம் பணியமர்த்தப்பட்ட உபி மாநிலத்தில் ஆட்சியர் உள்ளிட்ட பல பதவிகளில் வெற்றி பெற தமிழரான சுதனை வாழ்த்தலாமே!

கட்டுரையாளர் தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in