

ஒரு ஊடகத்தினை விமர்சன பார்வையில் எப்படிக் காண்பது, ஒரு செய்தியை விமர்சன நோக்கில் எப்படிப் பார்ப்பது ஆகியவை இதழியலில் முக்கியம். ஆகையால் இதழியல் மாணவர்களுக்கு விமர்சன தொடர்பு ஆய்வுகள் (Critical Communication Studies) என்று ஒரு தாள் கற்பிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் போர்க் கப்பல் சென்னைக்கு அருகில் உள்ள ஒரு துறைமுகத்தில் பழுது பார்க்கும் ஒரு பணிக்காக வந்துள்ளதாக ஒரு செய்தி. அதே சமயத்தில் இலங்கையின் ஹம்பத்தொட்டா துறைமுகத்திற்கு சீனாவின் கப்பல் ஒன்று வந்துள்ளதாக இன்னொரு செய்தியைப் படித்திருப்போம்.
இந்த இரண்டு செய்திகளுக்கும் உள்ள ஒரு ஒற்றுமையை, விமர்சன தொடர்பு ஆய்வுத்தாளினைப் படிப்பவர்கள் அறிந்துகொள்வார்கள்.
ஒவ்வொரு செய்திக்குப் பின்னாலும் ஒரு அரசியல் இருக்கும். முதல் பக்க செய்திக்கும் பின்பக்க விளம்பரத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கும். அப்படி இருக்க இதழியல் படிப்பினை முடித்து பணிக்குச் செல்லும் மாணவர்கள் பலவற்றை நுட்பமாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது.
பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தாங்களாகவே ஒரு தனி சிற்றிதழை நடத்துவது அந்த காலங்களில் சிறப்பான ஒன்றாக விளங்கியது. அது இதழியல் படிக்கும் மாணவர்களுக்கு இன்று பாடத்திட்டத்திலேயே வந்துவிட்டது. ஒவ்வொரு மாணவரும் தனியாக ஒரு இதழை நடத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதன் ஊடாக அவர்கள், இதழினை நடத்தும் போது ஏற்படுகின்ற சிரமங்களை நேரடியாக உணர்ந்துகொள்ள முடிகிறது.
மிகவும் எளிதாகிவிட்டது
இதழ் நடத்துவதும் இன்று எளிதான ஒன்றாக ஆகிவிட்டது. இப்படியான சிற்றிதழ்களை எளிதாக பிரின்ட்-ஆன்-டிமான்ட் வடிவில் அச்சிடும் வசதிகள் வந்துவிட்டபடியால், நமக்குத் தேவையான பிரதிகளை மட்டும் அச்சிட்டுக் கொள்ளும் வசதியும் சாத்தியமாகிஉள்ளது.
திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும்
ஊடக படிப்பினைப் படிப்பவர்கள், படிக்கும் போதே இது போன்ற இதழ்களை நடத்துவதன் வழியாக, தங்களின் திறமைகளைவளர்த்துக் கொள்ள முடியும். படித்து முடிக்கும் போது கிடைக்கும் சான்றிதழை விட, இது போன்ற தனியான சிற்றிதழ்களை நடத்தியிருந்தால், அவர்களுக்கு வேலைவாய்ப்பில் ஊடகங்கள் முன்னுரிமை வழங்குகின்றன.
எழுதும் வாய்ப்பு அதிகரிப்பு
சிற்றிதழ்கள் தவிர்த்து, இன்றைய மாணவர்கள் புத்தகங்களை எழுதும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது. படிக்கும் போதே புத்தகங்கள் எழுதுவது ஒரு காலத்தில் சாத்தியம் இல்லாத ஒன்றாக இருந்தது. இன்று அதுவும் சாத்தியமாகிவிட்டது. குறைந்தது 12 பிரதிகள் கூட அச்சிடும் வசதிகள் வந்துவிட்டபடியால், மாணவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்வது அவசியம்.
ஊடகப் படிப்பில் இன்று ஆவணப்படம், குறும்படம், சிற்றிதழ்,புத்தகம், ஒலிப்புத்தகம், பாட்காஸ்ட் என அனைத்தையும் பாடத்திட்டத்தின் ஊடாகவே படிக்கும் வாய்ப்பு இருப்பதால், வேலைக்கு முயற்சி செய்யும் போது டிகிரி சான்றிதழ் மட்டுமல்லாது, இதுவும் வேலைவாய்ப்பினை எளிதில் பெற்றுத் தர உதவும்.
| ஒரு காலகட்டத்தில் இதழ்களையும், புத்தகங்களையும் வடிவமைக்க தனியான மென்பொருட்கள் தேவைப்பட்டது. மேலும் அந்த மென்பொருட்களைப் பயன்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், இன்று நமக்கு ‘டெம்பிளேட்’ வடிவில் இவை எளிதாக இணையத்தில் கிடைக்கின்றன. உள்ளடக்கத்தினை மட்டும் நாம் எழுதி, அதை உள்ளீடு செய்தால் போதுமானது. மிக அழகாக வடிவமைத்துக் கொடுத்து விடுகிறது. அப்படியான ஒரு சில இணையதளங்கள் இதோ: https://www.flipsnack.com, https://flowpaper.com, https://www.flipsnack.com. |
(உலா வருவோம்)
கட்டுரையாளர்: உதவி பேராசிரியர்,
இதழியல் மற்றும் தொடர்பியல் துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்
தொடர்புக்கு: bbcsakthi@gmail.com