தயங்காமல் கேளுங்கள் - 10: வலி வராமலிருக்க வழி உண்டா?

தயங்காமல் கேளுங்கள் - 10: வலி வராமலிருக்க வழி உண்டா?
Updated on
2 min read

"ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கின் போது தாங்க முடியாத வலியும் வாந்தியும் எனக்கு ஏற்படுகிறது. வலி வராமல் இருக்க வழி உண்டா டாக்டர்?”

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அனிதாவின் கேள்வி மட்டுமல்ல இது. உலகத்தில் உள்ள பல பதின்பருவப் பெண்களின் கேள்வியும் இதுதான். வலி, வாந்தி, சோர்வு என இந்த மாதாந்திரப் பிரச்சினைகள், பல பெண் குழந்தைகளை பள்ளிக்கு செல்லவிடாமல் கூட செய்துவிடுகிறது.

எதனால் வலிக்கிறது?

வலியைத் தடுக்கும் வழிகளைத் தெரிந்து கொள்ள, வலி வரும் காரணத்தைப் புரிந்து கொள்வது அவசியம். மாதவிடாய் என்பது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சுழற்சி முறையில் ஏற்படும் நிகழ்வு என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஒரு பெண்ணின் உடல்வாகைப் பொறுத்து 25 நாட்களில் இருந்து 35 நாட்களுக்கு ஒருமுறை நிகழும் இந்த உதிரப் போக்கானது சாதாரணமாக 5 - 7 நாட்கள் வரை நீடிக்கிறது.

இதில் முதல் ஓரிரு நாட்கள் மிதமான அல்லது மிகையான அடிவயிற்று வலியுடனும் காணப் படுகிறது. இந்த மாதவிடாயின்போது உதிரப்போக்கும் வலியும் ஏற்படுவதற்குமுக்கியக் காரணமாக இருப்பது ஹார்மோன்கள்தான்.

பெண்ணின் பிரத்தியேக ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன்கள் முதல் இரு வாரங்களிலும் அதாவது அண்டவிடுப்பு வரையிலும், ப்ரொஜெஸ்டிரான்கள் மூன்றாவது மற்றும் நான்காவது வாரங்களிலும் சினைப்பையில் முறையாக சுரந்து கருப்பையின் உட்புற சவ்வான எண்டோமெட்ரியத்தை திறமடையச் செய்து, தம்மை கருத்தரிப்புக்குத் தயார்படுத்திக் கொள்கின்றன.

ஆனால், நான்கு வாரங்களுக்குப் பிறகு, கருத்தரித்தல் நிகழாதபோது, இந்தஹார்மோன்கள் சுரப்பு முற்றிலும் குறைந்து,கருப்பைக்குச் செல்லும் ரத்தநாளங்களும் சிதைபட்டு, கருப்பை சுருங்குவதால் மாதவிடாய் ஏற்படுகிறது. அதுவரை வளர்ச்சியடைந்த கருப்பையின் உள்சவ்வு இப்போது தனது இறந்த செல்கள்,ரத்தம் மற்றும் சவ்வை வெளியேற்றி தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிறது.

அப்படி கருப்பை சுருங்கும்போது உள்சவ்வின் பிளாஸ்மா செல்கள் சிதைவடைந்து, அவற்றில் இருந்து ‘ப்ராஸ்டகிளான்டின்ஸ்' எனும் வலியூக்கிகள் அதிகம் வெளியேறுவதால் தான் பெண்களுக்கு மிதமான அல்லது மிகையான வலியுடன் கூடிய உதிரப்போக்கும், வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்படுகிறது.

ஆக, மாதவிடாய் என்பது, கருத்தரிப்புக்கு தயாராகும் ஒரு பெண்ணின் கருப்பையானது, அப்படி கருத்தரிப்பு நிகழாதபோது தன்னைத் தானே சுத்தப்படுத்திக் கொண்டு மீண்டும் தன்னைக் கருத்தரிப்புக்கு தயார் செய்துகொள்ளும் ஓர் இயற்கை நிகழ்வேயாகும்.

சோர்வு நீடிக்கும்

மாதவிடாய் வலிகளில் ப்ரைமரி டிஸ்மெனோரியா என அழைக்கப்படும் இயல்பான மாதவிடாய் வலி, அனிதா உள்பட சராசரியாக 80% பெண்களிடையே காணப்படுகிறது. மாதவிடாய் ஏற்படுவதற்கு ஓரிரு மணிநேரத்துக்கு முன்னர்தொடங்கி, மாதவிடாய் ஏற்பட்ட ஓரிருநாட்கள் வரையில் இந்த வலி காணப்படுகிறது.

ஆனால், ஒருசிலரில் மட்டும் கருப்பை கட்டிகள், சினைப்பை ரத்தக்கட்டிகள், கருப்பை நோய்த்தொற்று போன்ற காரணங்களால் செகண்டரி டிஸ்மெனோரியா எனும் கூடுதல் வலியுடன் கூடிய உதிரப்போக்கு காணப்படுகிறது. இங்கு மாதவிடாய் ஏற்படும் முன்னும், ஏற்பட்ட ஓரிரு நாட்களுக்குப் பின்னும் அதிகப்படியான வலியும், உதிரப்போக்கும், சோர்வும் நீடிக்கிறது.

வலி தவிர்க்க வழி

இப்போது, மாதவிடாய் வலி இல்லாமல் இருக்க வழி உள்ளதா என்ற அனிதாவின் கேள்விக்கு வருவோம். மாதவிடாயின் போது சுரக்கும் ப்ராஸ்டகிளான்டின்ஸ் எனும் வலியூக்கிகளைக் கட்டுக்குள் வைக்கும் நமது சாதாரண வலி நிவாரணிகளான ப்ரூஃபன், மெஃப்ட்டால், பாரசிட்டமால் ஆகியன ப்ரைமரி டிஸ்மெனோரியாவில் நன்கு பலனளிக்கிறது.

ஆனால், இவற்றை மருத்துவரின் பரிந்துரையுடன்தான் உட்கொள்ள வேண்டும். ஒருசிலருக்கு மாதாந்திர சுழற்சியைக் கட்டுப்படுத்தி வலி நிவாரணம் அளிக்கும் கருத்தடை மருந்துகளும் வழங்கப்படுகிறது.

காபி, டீ தவிர்க்க வேண்டும்

என்றாலும் வலியின் போது, பாட்டி வைத்தியமான சுடுநீர் ஒத்தடம் தருவதும், அடிவயிற்றை மசாஜ் செய்வதும், எளிதாக செரிமானமாகும் இயற்கை உணவுகளையும், தண்ணீரையும் அதிகம் பருகுவதும் நன்கு பயனளிக்கிறது. மேலும் அதிகப்படியான புரதம், வைட்டமின் பி,வைட்டமின் ஈ, ஓமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் இவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

அத்துடன் கேஃபைன் அதிகமுள்ள காபி, டீ போன்றவற்றைத் தவிர்த்தல், இனிப்பு வகைகளைத் தவிர்த்தல், மசாலா உணவுகளைத் தவிர்த்தல் ஆகியனவும் மன அழுத்தத்தைக் குறைக்கும் மெடிடேஷன், மாற்று மருத்துவத்தின் அக்குபஞ்சர் ஆகியனவும் இதில் பலனளிக்கக் கூடும்.

இதுவே செகண்டரி டிஸ்மெனோரியா சிகிச்சையில் வலிக்கு காரணமாக இருக்கும் கட்டிகள் அல்லது தொற்றுகளை குணப்படுத்துவது அவசியமாகிறது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, அனிதாவுக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கு மான அறிவுரை இதுதான். வலி என்பது அனைவருக்கும் பொதுவானது. அதனைத் தாங்கிச் செல்வதும், துவண்டு விழுவதும் அவரவருக்கானது.

அது மாதாந்திர வலி என்றாலும், வாழ்வென்றாலும்!

(ஆலோசனைகள் தொடரும்)

கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்.

தொடர்புக்கு:savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in