

கடந்த அத்தியாயத்தில் அன்றாட வாழ்வில் ‘செலவை குறைப்பதற்கான 6 முக்கிய வழிகளை' பார்த்தோம். அடுத்ததாக செலவை நிரந்தரமாக குறைத்து, அல்லாடும் அன்றாட வாழ்க்கையை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் ஓர் வாழ்க்கை முறை குறித்து பார்ப்போம்.
அமெரிக்காவை சேர்ந்த ஜோஷூவா ஃபீல்ட்ஸும், ரியான் நிகோடெமஸும் நெருங்கிய நண்பர்கள். 30 வயதுக்குள் இருவரும் 6 இலக்கத்தில் சம்பாதித்தார்கள். பெரிய பங்களா, விலை உயர்ந்த கார், ஃபோன், ஆடம்பர பொருட்கள், தினந்தினம் பார்ட்டி என வாழ்க்கையை கழித்தார்கள்.
திடீரென ஒரு நாள், ‘இவ்வளவு சம்பாதித்தும், இவ்வளவு பொருட்களை வைத்திருந்தும் ஏன் நாம் சந்தோஷமாக இல்லை?' என யோசித்தார்கள். ‘சந்தோஷம் என்பது கைநிறைய சம்பாதிப்பதிலும், பொருட்களை வாங்குவதிலும் இல்லை'என புரிந்தது. அந்த கணமே, ‘மினிமலிசத்தை' நோக்கி நகர ஆரம்பித்தார்கள்.
அதன்பின் மினிமலிச வாழ்வில் தாங்கள் கண்ட அதிசயங்களைப் பற்றி நூல்களை எழுதினார்கள். பல்வேறு கல்வி நிறுவனங்களில் உரைகளை நிகழ்த்தி னார்கள். திரைப்படம் எடுத்து வெற்றியும் கண்டார்கள்.
மினிமலிசம் என்றால் என்ன?
ஆசைகளை அகற்றிவிட்டு, அத்தியாவசிய தேவைகளுடன் அளவாக வாழ்வதே மினிமலிசம். ஆடம்பரத்தை விலக்கி, குறைவான பொருட்களுடன் நிறைவாக வாழும் கலை. ஆசைப்படும் பொருட்களை வாங்குவதற்கு முன்பாக 'இது தேவையா?' என யோசித்து அதனை கைவிட்டால், அதுவே மினிமலிசத்துக்கு முதல் படி.
காசை செலவழித்து வாங்கிய பொருட்களை பயன் படுத்தாமல் இருப்பதை விட, இருக்கும் பொருட்களை 100% பயன்படுத்துவது அதன் அடுத்த படி ஆகும். சுருக்கமாக சொன்னால் அதிகபட்ச எளிமை, உச்சபட்ச சிக்கனம்.
தற்போது வெளிநாடுகளில் பிரபலமாக இருக்கும் ‘மினிமலிசம்' என்ற வாழ்க்கை முறை நமக்கு ஒன்றும் புதிதானது அல்ல. நம் முன்னோர்கள் காலங்காலமாக கடைப்பிடித்த இருப்பதைக் கொண்டு சந்தோஷமாக வாழும், எளிய வாழ்க்கை முறை.
தேவையற்ற பொருட்களுக்கு முக்கியத்துவம் தராமல், சந்தோஷத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கலை. ஆடம்பரத்தை துறந்த காந்தி மினிமலிசத்துக்கு மிக சிறந்த உதாரணம்.
சுற்றுசூழலுக்கும் பொருளாதாரத்துக்கும் உகந்தது
இந்தியாவில் இப்போது இருப்பது போன்ற நுகர்வு வணிக வளாகங்கள், கண்கவரும் பொருட்கள் எல்லாம் வளர்ந்த நாடுகளில் 50 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டன. விளம்பரங்களின் தாக்கத்தால் மக்கள் ‘ஷாப்பிங்' பழக்கத்துக்கு அடிமை ஆகினர். தேவையற்ற பொருட்களை அளவுக்கு அதிகமாக வாங்கினர்.
சம்பளம் போதாமல் கடன், மாதாந்திர தவணை, கிரெடிட் கார்ட் மூலமாகவும் வாங்கி குவித்தனர். அதிகபடியான நுகர்வு கலாச்சாரத்தால் கடனில் சிக்கி தவித்தனர்.
இந்த சூழலை ஆராய்ந்த நிபுணர்கள், ‘அடிப்படை தேவைகளை மட்டும் கொண்டு சிறப்பாக வாழும் மினிமலிச வாழ்க்கை முறையை பரிந்துரைத்தனர்.
நுகர்வு கலாச்சாரம் குறைந்தால் சுற்றுச்சூழல் மாசுபாடும் உலகம் வெப்பமாதலும் குறையும் என கண்டறிந்தனர். ஐரோப்பியர்களிடையே வேகமாக பரவிய மினிமலிச வாழ்க்கை முறையால் மன அமைதி உருவாகி, மகிழ்ச்சி அதிகரித்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கஞ்சத்தனம் அல்ல
மினிமலிசத்தை கஞ்சத்தனம் எனவும், அனைத்தையும் துறந்துவிட்ட துறவு நிலை எனவும் சிலர் நினைக்கின்றனர். இந்த வாழ்க்கை முறையில் தேவையான எதையும் விலக்க வேண்டியதில்லை.
தேவையான பொருட்களுடன் மட்டும் மகிழ்ச்சியாக வாழலாம் என்பதே இதன் நோக்கம். உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேர்ந்தால் நோய் வருவதை போல, வாழ்க்கையிலும் தேவைக்கு அதிகமான பொருட்கள் சேர்ந்தால் பிரச்சினை வரும் தானே?
மினிமலிச வாழ்க்கை முறையால் ஆடம்பர வீடு, சொகுசு கார், புதிய ஃபோன், வீடு முழுக்க விதவிதமான பொருட்கள், அவ்வப்போது புத்தாடைகள், அடிக்கடி ஓட்டல் உணவு, சினிமா, வெளியூர் சுற்றுலா ஆகியவற்றை தடுக்க முடியும். வாழ்வில் நிதி ஒழுக்கம் ஏற்பட்டு வரவு செலவுத் திட்டம், தெளிவான நிதி இலக்கு, குறைந்த செலவினம், நிறைவான சேமிப்பு, நல்ல முதலீடு என தனிநபர் நிதிமேலாண்மை நிலை மேம்படும்.
கோடீஸ்வரர்களை கவர்ந்த வாழ்க்கை முறை
ஏழைகளுக்கு மிக உகந்த இந்த மினிமலிச வாழ்க்கை முறையை கோடீஸ்வரர்கள் பலரும் பின்பற்றுகின்றனர். உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட் மிகப்பெரிய பங்களாவில் வாழவில்லை.
அவர் இன்று எளிமையான சிறிய வீட்டிலே வாழ்கிறார். இந்தியாவின் பரம்பரை பணக்காரரான ரத்தன் டாடா மும்பையில் ஒரு பெட்ரூம், ஹால், கிச்சன் உள்ள சிறிய வீட்டிலே வசிக்கிறார்.
பழைய தலைமுறை கோடீஸ்வரர்கள் மட்டுமல்ல இந்த தலைமுறை கோடீஸ்வரர்களான ஃபேஸ்புக் சிஇஓ மார்க் சக்கர்பெர்க், ஆப்பிள் முன்னாள் சிஇஓ ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகியோரும் மினிமலிச வாழ்வையே வாழ்கிறார்கள். இருவரும் தினமும் ஒரே மாதிரியான டி ஷர்ட்டையே அணிகிறார்கள்.
இதுபற்றி அவர்களிடம் கேட்டபோது, ‘‘தினமும் இன்றைக்கு எந்த கலர் சட்டை போடலாம் என்பதற்கு யோசித்தே நிறைய நேரம் வீணாகிறது. அதற்கு பதிலாக எளிமையான ஒரே மாதிரியான டி ஷர்ட்டை அணிந்தால் நேரம் வீணாவதை தடுக்கலாம். பணமும் மிச்சமாகிறது!'' என்றனர்.
(தொடரும்)
இரா.வினோத்
கட்டுரையாளர், தொடர்புக்கு:vinoth.r@hindutamil.co.in