

இதயமாற்று அறுவை சிகிச்சையில், மனித இதயத்தை ஒரு மருத்துவமனையில் இருந்து சிகிச்சைக்கு காத்திருக்கும் பயனாளி உள்ள மருத்துவமனைக்கு பாதுகாப்பாக, அதே சமயத்தில் மிக விரைவாக கொண்டு செல்ல வேண்டும். நகரப் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனம் நகராமல் சிக்கி, மனித உயிர் ஊசலாடும் நிகழ்வுகள் நடப்பதுண்டு.
இத்தகையச் சூழலில் உயிர்காக்கும் கருவியாக செயல்படுகிறது, டிரோன் எனும் ஆளில்லா விமானம். நகரத்தின் எந்த பகுதிக்கும் மனித உறுப்பை பாதுகாப்பாக டிரோன் மூலம் குறித்த நேரத்தில் கொண்டு செல்லலாம்.
இயற்கைப் பேரழிவுகளால் பாதிக் கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து தடைபட்ட போதும் மக்களுக்கு மருந்துப் பொருட்களை கொண்டு செல்ல, பாதிப்புகளை மதிப்பீடு செய்ய, தொற்று நோய் பரவாமல் மருந்து தெளிக்க எனப் பல மனிதநேயப் பணிகளில் டிரோன் பயன்படுகிறது. ராணுவம், காவல் துறையில் பாதுகாப்புப் பணி, உரம் தெளிக்கும் விவசாயப் பணி எனப் பல தளங்களில் முக்கிய பங்காற்றுகிறது டிரோன்.
டிரோன் விமானி
மேலே சொல்லப்பட்ட பணிகளில், டிரோனை இயக்கும் விமானி மிக முக்கியமானவர். இந்தியாவில் 2 கிலோவுக்கு அதிமான எடை உள்ள ஆளில்லா விமானத்தை இயக்க, டிரோன் விமானி உரிமம் பெற வேண்டியது கட்டாயம். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும். டிரோன் விமானி ஆக என்ன படிக்க வேண்டும்? எங்கு பயிற்சி பெறுவது?
கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு, பயிற்சி விவரம்
டிரோன் விமானியாக குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் இருப்பது அவசியம்.
தகுதியுடையவர்களுக்கு வகுப்பறை கல்வி, சிம்யுலேடர் (ஒப்புருவாக்க) பயிற்சி, ஆளில்லா விமானத்தை பறக்க வைக்கும் பயிற்சி எனப் பல நிலைகளில் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலம், ஆளில்லா விமானத்தின் வகையைப் பொறுத்து 7 முதல் 10 நாட்கள் வரை இருக்கும்.
பயிற்சியில் பங்கேற்று, இறுதித் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு டிரோன் விமானி உரிமம் வழங்கப்படும். இன்றைய தேதியில் இந்தியாவில் உரிமம் பெற்ற டிரோன் விமானிகளின் எண்ணிக்கை 911.
டிரோன் விமானி பயிற்சிப் பள்ளி
விமான போக்குவரத்து பொது இயக்குனரகத்தால் (DGCA) அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிலையங்களில், பயிற்சி பெற்று டிரோன் விமானி உரிமம் பெற வேண்டும். தமிழகத்தில் சென்னையிலும் கோவையிலும் டிரோன் விமானி பயிற்சிப் பள்ளிகள் உள்ளன.
சென்னை குரோம்பேட்டை, அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி. கல்லூரியில் டிரோன் விமானி பயிற்சிப் பள்ளி இயங்கி வருகிறது. கல்லூரியின், வான்வெளி ஆராய்ச்சி மையம் இந்த பயிற்சியை வழங்குகிறது. கோவையில் இந்துஸ்தான் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள பயிற்சிப் பள்ளியில், இந்திரா காந்தி தேசிய பறக்கும் பயிற்சி நிறுவனம் இந்தப் பயிற்சியை வழங்குகிறது.
பாஸ்போர்ட் கட்டாயம்
டிரோன் விமானி பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் பாஸ்போர்ட் வைத்திருப்பது அத்தியாவசியம். கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள், பிற பொதுமக்களும் கூட இந்தப் பயிற்சியில் சேர்ந்து விமானி உரிமம் பெறலாம். மேலும் விவரங்களுக்கு https://digitalsky.dgca.gov.in என்ற வலைதளத்தை பார்வையிடவும்.
மிக வேகமாக வளர்ந்து வரும் ஆளில்லா விமானங்களின் பயன்பாடுகள் பல துறைகளிலும் ப(ற)ரந்து விரிந்து கொண்டிருக்கின்றன. இத்துறையில் வேலைவாய்ப்புகளும், தொழில்முனைவு வாய்ப்புகளும் மிகப் பிரகாசமாக உள்ளன. ஆர்வமும் ஈடுபாடும் உள்ளவர்களுக்கு ஆளில்லா விமானத் துறையில் வானம் கூட எல்லையில்லை.
(தொடரும்)
கட்டுரையாளர், ‘போர்பறவைகள்: போர்விமானம் ஓர் அறிமுகம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: dillibabudrdo@gmail.com