

இன்றளவும், பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து அலைபேசி, உடைகள் தொடர்பான ஆன்லைன் பண மோசடிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அவற்றைப் பற்றி தெரிந்து கொண்டால் பாதுகாப்பாக இருக்கலாம்.
ஆன்லைன் ஷாப்பிங்கின் முதல் அடிப்படை விதி, எந்த காரணம் கொண்டும் பணத்தை உடனே செலுத்த கூடாது என்பதே.
அதுவும் ஜிபே, பேடிஎம் போன்ற ஆன்லைன் பண பரிவர்த்தனை வசதிகள் வந்ததில் இருந்து பணம் செலுத்துவது மிகவும் எளிதாகிவிட்டது. அதனாலே சைபர் க்ரைமில் இழந்த பணத்தை திரும்பப் பெறுவது மிகவும் கடினமாக இருக்கிறது.
இன்று ஆன்லைன் ஷாப்பிங் என்பது வலைத்தளம், செயலிகள் மற்றும் வாட்ஸப் / இன்ஸ்டாக்ராம் என பல வழிகளில் நடைபெறுகிறது. ஆனால் நம்பகத்தன்மை?
ஆபத்தை முன்கூட்டியே அறிய...
ஆன்லைன் ஷாப்பிங் போர்ட்டல்கள் சரியானவையா என்பதை அறிய கீழே உள்ள விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும்.
1. அவர்களின் முகவரி, தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளதா?
2. வெறும் மின்னஞ்சல் முகவரி மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது என்றால் எச்சரிக்கை தேவை.
3. முறையான கஸ்டமர் கேர் நம்பர் உள்ளதா எனத் தேடிப் பாருங்கள்.
4. சாதாரண கூகுள் தேடலில் அந்த நிறுவனத்தின் பெயரைத் தேடிப் பாருங்கள்.
5. சமூக வலைத்தளங்களிலும் தேடலாம், ஒருவேளை யாரவது ஏமாற்றப்பட்ட நபர்கள் புகார்களை போஸ்ட்களாக போட்டிருக்கலாம்.
6. நண்பர் அறிமுகப்படுத்துகிறார் என்றாலும் எச்சரிக்கை முக்கியம்.
7. ஒரு சில நபர்கள் சிறிய பொருட்களைச் சரியாக அனுப்பி விடுவார்கள். அப்படியாக தங்கள் மீது நம்பிக்கை வரவைத்து பெரிய பணத்தை ஏமாற்றி விடுவார்கள்.
மேலே சொன்ன சின்ன ஆராய்ச்சியை நீங்கள் மேற்கொண்டால் பெரும்பாலும், ஏமாறாமல் தப்பிவிடலாம்.
குறைந்த விலை ஏமாற்று
அடுத்து கவனத்தில் கொள்ள வேண்டிய வற்றை பார்ப்போம்:
10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை உங்களுக்கு வெறும் 6 ஆயிரம் ரூபாய்க்கே வாங்கி தருகிறோம், 2000 ரூபாய் துணியை வெறும் 500 ரூபாய்க்கே வாங்கி தருகிறோம் என்று இன்னொரு கும்பல் ஏமாற்றும். இவர்கள் பழைய துணிகள் மற்றும் பழுதான செல்போன்களை முதலில் வருபவர்களுக்கு விற்பார்கள். இவர்களின் டார்கெட் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்தான்.
ஒரு பள்ளியிலோ, கல்லூரியிலோ ஒரு சிலமாணவர்களுக்குச் சரியாகக் குறைந்த விலைக்கு போன்களை விற்றுவிட்டால் போதும் விஷயம் தீயாகப் பரவிப் பல மாணவர்கள் இவர்கள் வலையில் சிக்கிவிடுவார்கள். அவ்வளவுதான் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை எடுத்து விடுவார்கள். மேலும் சில ஆன்லைன் ஷாப்பிங் மோசடிகளைப் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.
(தொடர்ந்து பேசுவோம்)
கட்டுரையாளர்: டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: write2vinod11@gmail.com