மகத்தான மருத்துவர்கள் - 10: இன்னல்கள் பல கடந்து மருத்துவரானவர்!

மகத்தான மருத்துவர்கள் - 10: இன்னல்கள் பல கடந்து மருத்துவரானவர்!
Updated on
2 min read

சம்பளமே இல்லாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருந்த ஹேமவதியின் கணவர் குஞ்சபெஹ்ரி, கிட்டத்தட்ட ஒரு அட்டைப் பூச்சிபோல ஹேமவதியின் உழைப்பு முழுவதையும் உறிஞ்சித் தள்ளினார்.

ஊரைச்சுற்றி விட்டு எப்போதாவது வீட்டுக்கு வரும் கணவன் தனது சேமிப்பு பணத்தை முழுமையாகத் திருடிக் கொண்டு போவதை ஒன்றும் செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருப்பார் ஹேமவதி.

அந்த சமயத்தில் கருத்தரித்து, ஓர் ஆண் குழந்தையும் இறந்து பிறக்க, தனது பேறுகால தொற்றுநோய்க்கு சிகிச்சையளித்த டாக்டர் சுந்தரி மோகன்தாஸை சந்தித்ததுதான் ஹேமவதியின் வாழ்கையில் நிகழ்ந்த முதல் அதிர்ஷ்டம் எனலாம்.

மற்ற மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ் போலன்றி, விஎல்எம் எனும் (Vernacular Licentiates in Medicine) மருத்துவக் கல்வி பயில்வதற்கு சற்று எளிதாக இருக்கும் என்று அவர் ஹேமவதிக்கு எடுத்துச்சொன்னார்.

அவருடைய அறிவுரைப்படி தனது 26 வயதில் கேம்ப்பெல் மருத்துவக் கல்லூரிக்கு கல்வி பயிலச் சென்றார் ஹேமவதி. இந்த சமயத்தில் திரூபஜோதி என்ற ஆண் குழந்தைக்கு தாயான ஹேமவதி, கிடைத்த உதவித்தொகையையும் கணவர் பிடுங்கிக் கொண்டாலும் ஒற்றைப் புடவையும் கையில் பிறந்த குழந்தையுமாகக் கல்லூரிக்குச் செல்வதை மட்டும் விடவேயில்லை.

12 ஆண்கள், 4 பெண்கள் கொண்ட அவரது வகுப்பில் ஹேமவதி தனது கூர்மையான அறிவால் கல்வியில் தங்கப்பதக்கத்தை வென்றார். ஒரு பெண் தங்கப்பதக்கம் பெறுவதை ஒப்புக்கொள்ளாமல் ஆண் மாணவர்கள் மறுத்ததால் வேறு வழியின்றி வெள்ளிப் பதக்கத்துடன் திரும்பினார்.

மருத்துவர்களின் தொல்லை

விஎல்எம் பட்டத்துடன் வெளியே வந்தவரை பிரம்ம சமாஜம் அரவணைத்துக் கொண்டது. சின்சுரா நகரத்தில் லேடி டஃப்ரின் மருத்துவமனையில் பணியில் சேர்ந்த ஹேமவதி அங்கும் ஆண் மருத்து வர்களின் தொல்லைகளை சந்திக்க நேர்ந்தது. ஆனால், அத்தனைக்கும் இடையே அவர் மருத்துவமனை மட்டுமின்றி வீடுகளுக்கே சென்று மக்களுக்கு சிகிச்சை அளித்தது அவருக்கு நற்பெயரை உருவாக்கியது.

இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தைக்குத் தாயான பிறகும், பணியில் சிறந்து விளங்கியபோதும், கணவரின் சுரண்டல் மட்டும் குறையவே இல்லை ஹேமவதிக்கு.

கிடைத்த மாதவருமானம் 400 ரூபாயையும் உறிஞ்சிக்குடித்த கணவருடன் ஒருமுறை நடந்தவாக்குவாதத்தில் குஞ்சபெஹ்ரி அடித்த அடியால் ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் ஹேமவதி.

தனக்கு ஏற்பட்ட அனைத்து வன்முறைகளையும் பொறுத்துக் கொண்டாலும் மற்றவர்களுக்கு அத்தகைய அநீதி நிகழும்போது பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. கணவனால் பலாத்காரம் செய்யப்பட்டு ரத்தக்கசிவுடன் மருத்துவமனை வந்து உயிரிழந்த ஒரு பதினோரு வயதுப் பெண் குழந்தை ஹேமவதியின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தாள்.

அதன் பிறகு தனக்குக் கிடைத்த பணத்தை கணவருக்குத் தெரியாமல் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவும் உடைகளும் அளிக்க, அது மட்டுமே தனது வாழ்க்கையில் கிடைத்த சிறிய சந்தோஷம் என்று குறிப்பிட்டுள்ளார் ஹேமவதி.

மீண்டும் இரு குழந்தைகள், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட கணவர் என எந்த சந்தோஷமும் தராத அவரது வாழ்க்கை சோதனைகளை மட்டும் சொல்லாமல் கொள்ளாமல் அளித்தது.

1902-ல், குஞ்சபெஹ்ரி மரணமடைய, கணவர் இறந்தபின் தான் வாழ்ந்த 30 ஆண்டுகளும் முழுமையாக உழைத்து, நாற்பதுக்கும் மேலான ஆதரவற்றக் குழந்தைகளுக்கு அடைக்கலம் தந்து, அவர்களுக்கு உணவு உடை மட்டுமன்றி கல்வி கிடைக்கவும் ஏற்பாடு செய்தார் ஹேமவதி.

கரை சேர்த்த கல்வி

வங்கமொழியில், "ஏனென்றால் நான் ஒரு பெண்" என்ற தலைப்பில் தனது வாழ்க்கையில் நிகழ்ந்த அனைத்தையும் பதிவு செய்துள்ள ஹேமவதி சென், வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு உயர்ந்த தனது குழந்தைகளும் பிற்காலத்தில் தனக்கு உதவவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

1933 -ம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ம் தேதி 67 வயதில் உயிர் நீத்த டாக்டர் ஹேமவதி சென், வாழ்க்கையை சோதனைகளும் வேதனைகளும் எப்போதும் சூழ்ந்திருந்தாலும், "என்னைக் கரை சேர்த்தது கல்விதான்" என்கிறார்.

கணவர் இறந்து பிள்ளைகளும் கைவிட்டசமயத்திலும் தான் ஆதரவளித்த குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் ஏறத்தாழ 500 இருக்கும் என்று குறிப்பிட்டவரிடம், எந்த நன்மையும் செய்யாத இந்த சமூகத்திற்கு ஏன் நன்மையை மட்டுமே பரிசளிக்க நினைக்கிறீர்கள்? என்று கேட்டபோது

"ஏனென்றால் நான் ஒரு பெண்" என்று பதிலளித்துள்ளார் டாக்டர் ஹேமவதி.

(மகிமை தொடரும்)

கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர்,

சமூக ஆர்வலர்.

தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in