

கணிதம் பற்றி பேச ஒரு வகுப்பறைக்கு சென்றிருந்தேன். நான் ஆசிரியர் அல்ல. அப்போது ஒரு குழந்தையின் அப்பா வந்தார். தன் மகளுடைய தமிழ்ப் புத்தகம் மூன்று தினங்களாக காணவில்லை என்றார்.
மகள் வகுப்பில் தேடி இருக்கிறாள் ஆனால் கிடைக்கவில்லை. வீட்டில் வந்து அழுது புலம்பினாள் என சொல்லிவிட்டு சென்றார். நான் பார்த்துக் கொள்கின்றேன் என உறுதி அளித்து அவரை அனுப்பி வைத்தேன். பின்னர் அந்த மாணவியிடம் எப்போது தொலைத்தாள், எப்போது கடைசியாக பார்த்தாள் என விசாரித்தேன்.
மொத்த வகுப்புமே இந்த உரையாடலை கேட்டுக்கொண்டு இருந்தது. ஒரு மாணவி எழுந்து தான் அந்த தமிழ்ப் புத்தகத்தை பார்த்ததாகவும் அதை ஆசிரியர்கள் அறையில் வைத்திருப்பதாகவும் கூறினாள். பிரச்சினை அத்துடன் முடிந்தது. இந்த சிறு சம்பவத்தில் இருந்து கற்க நிறையவே இருக் கிறது.
நேருக்கு நேர் சந்திப்போமா?
சிக்கல் இல்லாத வாழ்க்கை என்பது கிட்டத்தட்ட கிடையவே கிடையாது. தினம் தினம் பிரச்சினைகள் வந்து கொண்டேதான் இருக்கும். அது வேறு வேறு ரூபத்தில் நிகழும். அதை தீர்க்க ஒரே வழிதான் உள்ளது. அதனை நேருக்கு நேர் சந்திப்பது. பல வழிகளில் அதற்கான தீர்வுகளைக் காண்பது. வழக்கமாக நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட வழிமுறைகள் மட்டுமின்றி மாற்றாக புதிய வழியில் தீர்வு காண்பது மிக முக்கியம்.
நம் தேவை சிக்கலைத் தீர்ப்பது. அதற்காக அறம் தவறி அல்ல, புதிய வழிகளில் தீர்வுகளைக் காண பழகிக் கொள்வது அவசியம். அந்த மாணவி வகுப்பிற்கு முன்னர் சென்று, என் தமிழ்ப் புத்தகம் காணவில்லை, யாராச்சும் பார்த்தீங்களா நண்பர்களே, அதில் முதல் பக்கத்தில் பூ போட்டிருக்கும் என்ற அடையாளத்துடன் சொல்லி இருந்தால் இன்னும் நிறைய பேர் தேடி இருப்பார்கள்.
முதல் நாளே புத்தகமும் கிடைத்திருக்கும். தேவையான, அவசியமான விஷயங்களுக்கு மட்டும் பெற்றோர்களை வரவழைக்க வேண்டும். ஆனால், வகுப்பில் இப்படி நடந்தது என்பதை பகிர்ந்து கொள்வது நல்லது. வகுப்புகளில் என்ன நடக்கிறது என பெற்றோர்களுக்கு தெரியப்படுத்துவது மிக நல்லது.
உதவ முந்துவதே தலைமை
இன்னொன்றும் அன்றைய தினம் செய்தேன். அந்த வகுப்பின் தலைமை மாணவியை (க்ளாஸ் லீடர்) அழைத்து, ‘‘இந்த மாதிரி ஒரு பிரச்சினை நடக்கிறது ஏன்மா தலையிடல” எனக் கேட்டேன். “அவ தேடினதைப் பார்த்தேன் ஆனா என்கிட்ட கேட்கல” என்றொரு பதில் வந்தது. ஒரு பக்கம்பார்த்தால் சரி என்றும் தோன்றும், கேட்டால்தானே உதவி செய்ய முடியும்.
அதே சமயம், ஒரு நல்ல தலைவருக்கு அழகு சிக்கல்களைக் கண்டவுடன் அங்கே களம்காண்பது. யாரும் முறையாக அழைக்க வேண்டும் என எதிர்பார்க்கவும் கூடாது. இந்த உலகில் உருவான பெரும் தலைவர்கள் எல்லோரும் அப்படியே. அதுமட்டுமல்ல தலைவர் என்ற பதவி இருந்தால் மட்டுமே இதனைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எங்கு எந்த விதத்தில் சிக்கலைப் பார்த்தாலும் அங்கே நாம் தலையிட வேண்டும்.
தீர்க்க முடியாமல் போகலாம், நமக்கு புரியாத பெரும் சிக்கலாக இருக்கலாம். ஆனால் உடன் இருப்பது சிக்கலைச் சந்திப்பவருக்கு பலமும் உற்சாகமும் கொடுக்கும். இன்னும் வலுவாக அந்த சிக்கலில் இருந்து மீள்வார். சிலருக்கு இந்த மாயக்கரம் தேவைப்படாமலும் போகலாம், அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. நாம் செய்ய வேண்டியது குறைந்தபட்சம் உடன் இருப்பதே.
நமக்கு சிக்கல் வந்தால், அது எந்தவடிவத்தில் வந்தாலும் அதனை நேருக்கு நேர் எதிர்கொள்வதிலே வெற்றி உள்ளது. மோதிப் பார்த்துவிடலாம். அதுவும் இந்த பதின்பருவத்தில் புதுப்புது சிக்கல்களைச் சந்திக்க நேரிடும், அதனை எப்படி எதிர்கொள்வது என குழப்பங்கள் நிலவும். நமக்குள்ளும் ஒரு மாயக்கரம் உள்ளது. அந்த கைநம்பிக்கை. ஆனால் இதனை மெல்ல மெல்லவளர்த்தெடுக்க வேண்டும். இந்த வளர்த்தெடுப்பே ஆளுமையாக நம்மை உருவாக்கும்.
(தொடரும்)
கட்டுரையாளர் சிறார் எழுத்தாளர். ‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’ ஆகியவை இவரது சமீபத்திய நூல்கள்.
தொடர்புக்கு: umanaths@gmail.com