கதை கேளு கதை கேளு 10: எதிலும் அறிவியல் மனப்பான்மை வேண்டும்!

கதை கேளு கதை கேளு 10: எதிலும் அறிவியல் மனப்பான்மை வேண்டும்!
Updated on
2 min read

பள்ளிக்கூடங்களில் தாவரம் வளர சூரியஒளி தேவை. காற்று தேவை. தண்ணீர் தேவை என்று சில சோதனைகளையும் செய்து படித்தது மட்டுமே நினைவில் இருக்கிறது.

அதற்கு மேல் அறிவியல் பாடங்களில் ஆர்வமில்லாமல் போனது ஏன்? எப்படி? கடந்து சென்ற கரோனா காலத்திலும் கரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை, தொற்றுப்பயத்தினால் பொதுமக்கள் மொத்தமாய் ஒதுக்கிவைத்தது ஏன்? சரியான அறிவியல் மனப்பான்மை இல்லாததுதான் காரணம் என்கின்றனர் அறிவியலாளர்கள்.

சரி, அறிவியல் மனப்பான்மை என்றால் என்ன? எந்த ஒரு நிகழ்வுக்குமான காரண காரியங்களை சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மையைத் தேடி அறிந்து கொள்வதே அறிவியல் மனப்பான்மை. பொதுமக்களிடம் அறிவியல் மனப்பான்மை குறைந்து காணப்படுவதற்கு முக்கிய காரணமாய் அனைத்து கல்வியாளரும் கூறுவது தாய்மொழிவழிக்கல்வி இல்லா ததே. இந்த புத்தகத்தின் ஆசிரியரும் தாய்மொழிவழிக்கல்வி இல்லாதது அறிவியல் சிந்தனை குறைவுக்கு காரணம் என்கிறார்.

மொழிவளர்ச்சியும், அறிவு வளர்ச்சியும்பெற, பிற நாட்டு நூல்களை தமிழ்மொழியில் மொழிபெயர்த்திட வேண்டும் என்றார் பாரதி. அவ்வகையில் அறிவியல் நூல்கள் தாய்மொழியில் நிரம்பத் தேவைப்படுகிறது. நூலாசிரியர் ஹேமபிரபா தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து, கல்வி கற்று, தற்போது இஸ்ரேல் நாட்டில் டெக்னையான் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிகிறார்.

ஏவுகணை தொழில்நுட்பம்

சமையலறையில் நிகழும் சிறு சிறு நிகழ்வுகள் கூட, அறிவியல் உலகில் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளின் அடித்தளம் என ஆசிரியர் கூறுவதைப் படிக்கும்போது ஆச்சரியமும் ஆவலும் எழுகின்றன. கடுகு வெடிப்பும் வானில் ஏவுகணையும் கடுகு இட்டு தாளிக்கும்போது அது எப்படி பொரிகிறது? கடுகுக்குள் நீராவி இருக்கும்.

சூடான எண்ணெயில் விழும் கடுகு, தன் கொதிநிலை அடைந்தவுடன், கடுகின் உள்ளிருக்கும் நீராவி வேகமாக வெளியேற துளையிடுகிறது. பெரிய துளையாகிவிட்டால் நீராவி வேகமாக வெளியேறி கடுகு பறக்கும் அளவு குறைந்து, பாத்திரத்திலேயே விழுகிறது.

சிறிய துளையிடப்பட்ட கடுகு ,முழுவதுமாக நீராவி ஆவியாகும் வரை பறக்கிறது. அப்போது கடுகு பாத்திரம் தாண்டியும் பறந்துவிடுகிறது. இதே தத்துவம்தான் வானில் ஏவப்படும் ஏவுகணைக்கும் தேவைப்படுகிறது. ஏவுகணையின் எரிபொருள் எரிக்கப்படும்போது, கிடைக்கும் உந்துவிசையைப் பயன்படுத்தி ஏவுகணை முன்னேறிப் போகிறது. கடுகு மூலம் அறிந்து கொண்ட அறிவியல், ஏவுகணையின் இயக்கத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

பாப்கார்ன் ஏன் வெடிக்கிறது?

தாவரங்கள் தங்கள் இனத்தைப் பெருக்கச் செய்யும் விதை வெடித்தல் நிகழ்ச்சியைப் புரிந்துகொள்ள பாப்கார்ன் வெடித்தலை ஒப்புமைப்படுத்தியிருப்பதால் எளிதாய் புரிந்துகொள்ள முடிகிறது.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சிப்ஸ் பாக்கெட்டுகளில் பெரிய உருளைச் சீவல்கள் மேலே, சிறிய சீவல்கள் கீழே என இருக்கின்றன. ஆனால் இயற்பியல் விதிப்படி பெரிய பொருள் கீழே, சிறிய பொருள் அதற்கு மேலே என்றுதானே இருக்க வேண்டும்.

நியூட்டனின் முதல் விதி

சிப்ஸ் பாக்கெட்டுகளின் சீவல் அடுக்கு மாற்றத்தை பிரேசில் நெற்று விளைவு ( Brazil nut effect) என்கின்றனர். Brazil என்பவர் கண்டறிந்ததால் அவர் பெயரில் அழைக்கப்படுகிறது. தோசைக் கல்லில் தோசைமாஸ்டர் தண்ணீரை ‘சொய்ங் சொய்ங்’ என வாரியிறைக்கும்போது, கல்லின்மீது ஓடும் தண்ணீரைப் பார்க்க நமக்கு ஆவலாக இருக்கும்.

ஏன் அப்படி தண்ணீர்ஓடுகிறது? எப்படி ஓட முடிகிறது? வானில்எப்படி செயற்கை கோள்கள் எரிபொருள் இல்லாமல் சுற்றிக்கொண்டே இருக்கின்றன? நியூட்டனின் மூன்றாம் விதியைஅறிந்த அளவு, முதல் விதியை நாம்அறிந்ததில்லை அல்லவா? அதுதான் காரணம் எரிபொருள் இல்லாமல் செயற்கைக்கோள் பறந்துகொண்டிருக்க.

அறிவியல் மீது ஆர்வம்

நமக்குள் நிறைய கேள்விகள் இருக்கும். அவ்வப்போது கேள்விகளுக்கான விளக்கம் கிடைத்திருந்தால் அறிவியல் மனப்பான்மை கிடைத்திருக்கும். நமக்கு புரியும் விதத் தில், எளிமையான உதாரணங்கள் மூலம் இந்தப் புத்தகத்தின் வழி விளக்கம் கிடைக்கும்போது அறிவியல் மீது ஆர்வம் நமக்கு ஏற்படுகிறது.

இப்புத்தகத்தின் ஆசிரியர் ஹேமபிரபா தனக்கென்று தனிபாணியில் நகைச்சுவையும், எளிமையான உதாரணங்கள் வழியாக அறிவியலின் ஆழ்ந்த கருத்துகளை விளக்குவது, சிறு குழந்தைகளிடத்தில் அறிவியலைக் கொண்டுசெல்ல உதவும். ஆர்வமாக அறிவியலை அணுகவும் உதவும்.

தமிழ்மொழியில் உள்ள முக்கியமான அறிவியல் நூல் இது.

கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம்.

தொடர்புக்கு:udhayalakshmir@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in