

இல்லம் தேடிக் கல்விக்கு மாணவர்கள் வந்திருந்தார்கள். மழையினால் தரை ஈரமாக இருந்ததால் திண்ணையில் அமர்ந்து படித்தார்கள். பால் நிலவனை அழைத்த வழிகாட்டி, “மரத்தையே ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார்.
“மரத்தைப் பார்க்கல சார்! கிளையில் குருவி அமர்ந்திருக்கு. தலையை சிலிப்பி சிலிப்பி தாவுது. அதைப் பார்த்தேன்” என்றான். அருகில் இருந்த பால்மதி,“இவன் இப்படிதான் சார்! நேற்றுகூட, தேங்கிக் கிடந்த மழை நீரில் விளையாடினான். தண்ணீர்ல விளையாடாம உள்ள வாடான்னு அம்மா கூப்பிட்டாங்க.
‘தண்ணீர்ல விளையாடல. மீன் குஞ்சுகளோட விளையாடுறேன்’னு சொன்னான்” என்றாள். எல்லாரும் சிரித்தார்கள். “நீ பிரியதர்ஷினி மாதிரிடா! மற்றவர்கள் கவனிக்காததை கவனிக்கின்ற பண்பு உனக்கும் இருக்கு” என்று பாராட்டினார் வழிகாட்டி. “யார் சார் பிரியதர்ஷினி?” என்று மாணவர்கள் கேட்டார்கள்.
குடும்பச் சூழல் அறிந்தவர்
திருவாரூர் மாவட்டத்தில் 2006-ல் பிரியதர்ஷினி பிறந்தாள். வர்ணம் பூசும் வேலைக்குஅப்பா சென்றார். பூண்டு உரிக்கும் வேலையால் குடும்பம் காத்தார் அம்மா. பிள்ளைகள் வளர்ந்தார்கள். கூடவே பெற்றோரின் கடனும் வளர்ந்தது. ஏழாம் வகுப்பு படித்தபோது பள்ளிக்கூடம் முடிந்ததும் மளிகைக் கடைக்கு வேலைக்குச் சென்றார்.
இரவு ஒன்பது மணிவரை வேலை. விடுமுறை நாட்களில் நாள் முழுவதும் வேலை. ஆறு மாதம் கடந்தது. பெரியம்மா மகன் அமரேஷ், “இந்த வயதில் படிப்பு முக்கியம், படி. என்ன தேவையோ நான் செய்கிறேன்” என்றார். பிரியதர்ஷினி மகிழ்ந்தார். ஆண்டுகள் கடந்தன. கரோனா காலத்தில் பத்தாம் வகுப்பு முடித்தார்.
பிறர்நிலை உணர்ந்தவர்
கரோனாவுக்குப் பிறகு பிரியதர்ஷினி பள்ளிக்கூடம் சென்றபோது, மற்றவர்கள் கண்ணில் படாத ஒன்று இவர் கண்ணில் பட்டது. மாணவ மாணவிகள் சிலர் பல்வேறு கடைகளிலும் செங்கல் சூளையிலும் வேலை செய்தனர். “என்னைப்போலவே இவர்களும் குடும்ப வறுமையினால் வேலைக்கு வந்திருப்பார்கள்” என்று நினைத்தார்.
“யாராவது உதவிக்கு வரமாட்டார்களா என இவர்களும் ஏங்குவார்கள்தானே!” என்று யோசித்தார். “எப்படியாவது இவர்களை பள்ளிக்கு மறுபடியும் அழைத்துவர வேண்டும்” என்று முடிவெடுத்தார். ஆசிரியை புவனேஸ்வரியிடம் ஆலோசித்தார். அருகாமை பள்ளியில் இடைநின்ற மாணவர்கள் குறித்த தகவலையும் சேகரித்தார்.
ஆசிரியை வழிகாட்டியபடி, மாணவர்களின் பெற்றோரை பிரியதர்ஷினி சந்தித்தார். கல்வியின் அவசியம் குறித்து பேசினார். அப்பா இல்லாத மாணவர்களுக்கு அரசாங்கம் தரும் உதவிகளைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பை ஆசிரியையிடம் ஒப்படைத்தார்.
அடுத்ததாக, வேலைக்குச் சென்ற மாணவர்களைச் சந்தித்தார். “நன்றாகப் படித்தால்தான் பிறர் நம்மை மதிப்பார்கள்” என்று விளக்கினார். முதலாளிகளைச் சந்தித்து, “14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வேலைக்கு வைப்பது சட்டப்படி குற்றம். குழந்தைகள் உதவி எண் 1098க்கு அழைத்துச் சொன்னால், உங்கள் மீது நடவடிக்கை பாயும்” என்றார்.
பள்ளிக்கு பலர் திரும்பினார்கள். ஓரிருவர் தொடர்ந்து வேலை செய்தார்கள். அவர்களைப் பற்றி 1098ல் தெரிவித்தார். அதிகாரிகள் வந்து, நடவடிக்கை எடுத்தார்கள். இதுவரை, 22 பேரை பள்ளிக்கு மறுபடியும் வர வைத்தி ருக்கிறார் பிரியதர்ஷினி. அண்ணனும் அம்மாவும் மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள்.
பிரியதர்ஷினி கொடுத்த உத்வேகத்தால், ஸ்வேதா எனும் மாணவி நான்கு பேரை பள்ளிக்கு கொண்டு வந்திருக்கிறார். மற்ற மாணவர்களும், சிறார் தொழிலாளர்களைப் பார்த்தால், நேரில் சென்று கல்வியின் அவசியம் குறித்து பேசுகிறார்கள். இயலாதபோது, 1098-ஐ அழைத்துச் சொல்லுகிறார்கள். பிரியதர்ஷினி எனும் தனி ஒருவரின் முன்னெடுப்பு இன்று மாணவர்களின் குழு செயல்பாடாக மாறியிருக்கிறது.
கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர்.
தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com