

கிரேக்க புராணத்தில் உண்மையான நட்பு மற்றும் தியாகத்திற்காக அறியப்பட்ட இரு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் டாமன் மற்றும் பிதியாஸ் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் சிசிலியின் சைராகுஸ் பகுதியில் வாழ்ந்தனர். அவர்களை ஒருபோதும் தனித் தனியே பார்க்க முடியாது.
இந்நிலையில் டியோனீசியஸ் என்ற கொடுங்கோலனுடன் பிதியாஸ் தகராறில் ஈடுபட்டதால் அவன் சிறையில் அடைக்கப்பட்டான். சில நாட்களில் பிதியாஸ் கொல்லப்பட வேண்டும் என்று கொடுங்கோலன் ஆணையிட்டான். பிதியாஸின் தண்டனை பற்றி அறிந்த டாமன்அவனை விடுவிக்குமாறு கொடுங்கோலனிடம் கெஞ்சினான். ஆனால், பயனில்லை.
பிதியாஸுக்கு வயதான தாயும் திருமணமாகாத சகோதரியும் இருந்தனர். பிதியாஸ் தனது நண்பன் டாமனுடன் பேசியபோது “எனது தாயையும் சகோதரியையும் நீ கவனித்துக் கொண்டால் நான் நிம்மதியாக இறந்துவிடுவேன்” என்றான்.
மேலும் இறப்பதற்கு முன் அவர்களிடம் விடைபெற விரும்புவதாக கூறினான். டாமன் தனது நண்பனின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக கொடுங்கோலனிடம் சென்றான்.
பிதியாஸ் தனது வீட்டுக்குச் சென்று திரும்பும் வரைஅவனது இடத்தில் தானே சிறையில் இருப்பதாக கூறினான். பிதியாஸ் சரியான நேரத்தில் திரும்பாவிட்டால் அவனுக்கு பதிலாக உயிரை துறக்க தான் தயாராக இருப்பதாகக் கூறினான்.
இப்படி கூட நண்பர்கள் இருப்பார்களா என்று வியந்த கொடுங்கோலன் கடைசியில் பிதியாஸை விடுவிக்க ஒப்புக்கொண்டான். அவனுக்கு பதிலாக டாமனை சிறையில் அடைக்க உத்தரவிட்டான். பிதியாஸ் சரியான நேரத்தில் திரும்பவில்லை என்றால் அவனுக்கு பதிலாக டாமன் உயிரிழக்க நேரிடும் என்றும் எச்சரித்தான்.
டாமனை விடுவிக்க சில நாட்களில் திரும்பி வருவேன் என்று பிதியாஸ் உறுதியளித்தான். வீட்டுக்கு விரைந்தான். தனது பொறுப்புகளை முடித்துக்கொண்டு, தனது தாயிடம் விடைபெற்று, சைராகுஸுக்கு திரும்பப் புறப்பட்டான்.
ஆனால், சிறைக்கு திரும்பும் வழியில் ஓரிடத்தில் பிதியாஸை திருடர்கள் மரத்தில் கட்டிவைத்து விட்டனர். பிதியாஸ் நீண்ட போராட்டத்துக்கு பிறகு தன்னைத்தானே விடுவித்துக் கொண்டு தன் வழியில் வேகமாகச் சென்றான்.
அடுத்து அதிக நீரோட்டமுள்ள ஒரு ஆற்றை அவன் கடக்க வேண்டியிருந்தது. சூரிய அஸ்தமனத்திற்குள் சைராக்குஸ் செல்லாவிட்டால் தனது நண்பன் இறந்துவிடுவான் என்பதை அறிந்திருந்ததால் சற்றும் யோசிக்காமல் தண்ணீரில் குதித்து போராடி மறு கரையை அடைந்தான்.
கடைசி நேரம் வரை காத்திருந்த காவலர்கள், பிதியாஸ் வராததால், டாமனை தூக்கிலிட அழைத்துச் சென்றனர். தன் நண்பர் வரப்போவதில்லை, தான் உயிர் விடுவதை தவிர வேறு வழியில்லை என்று தன் மனதை தயார் செய்து கொண்டான் டாமன்.
ஆனால், அந்த கடைசி நொடியில் பிதியாஸ் உள்ளே நுழைந்து தன்நண்பனை கட்டிபிடித்துக் கொண்டான். தன் நண்பனைப்பற்றி தவறாக நினைத்துக் கொண்டோமே என்று டாமன் வருத்தப்பட்டு கண்ணீர் விட்டான்.
கடைசி நேரத்தில் வந்தாலும், சரியான நேரத்தில் வந்துவிட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தார் பிதியாஸ். இந்த உண்மையான நட்பைப் பார்த்த கொடுங்கோலன் மனம் மாறினான். இந்த அளவுக்கு ஒருவரையொருவர் நேசிக்கும் நண்பர்கள் துன்பப்படக் கூடாது என உணர்ந்தான். அதனால் இருவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டான்.
டாமன் மற்றும் பிதியாஸ் இடையேயான இந்த நட்பு பழமொழியாகிவிட்டது. கவிதைகளிலும், காவியங்களிலும் விசுவாசமான மற்றும் அர்ப்பணிப்புள்ள நண்பர்களாக இருந்த ஆண்கள் பெரும்பாலும் டாமன் மற்றும் பிதியாஸுடன் ஒப்பிடப்பட்டனர்.
ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருக்கும் நண்பர்கள் தங்கள் நட்பில் நீண்ட காலம் நிலைக்கின்றனர்.
கட்டுரையாளர்:சிருஷ்டி பள்ளிகள் தலைவர், வேலூர்.